15.10.2016 அன்று ஹிந்தி தொலைக்காட்சியில் பேட்டி ஒன்றை மேனாள் பீகார் முதலமைச்சர் லாலுபிரசாத் அளித்தார்.
விரிவாக தனது சிறுவயது அனுபவங்கள் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் அவர்களுடனான பயணம் கர்பூரி தாக்கூரிடம் கற்ற பாடம் குறித்துப் பேசினார்.
இவரது இந்தப் பேச்சு முழுமையாக ‘விடுதலை’யில் வெளியாகி இருந்தது.
தனது பள்ளிப் பருவத்தைப் பற்றி குறிப்பிடும் போது, உயர் ஜாதி மாணவர்களுக்கு சிறப்பாக சொல்லித் தரும் ஆசிரியர் லாலு பிரசாத்தை அவர்கள் வீட்டில் இருக்கும் மாட்டிற்குச் சாணி அள்ளவும், பள்ளி வளாகத்தில் இருக்கும் புற்களை அறுத்துக்கொண்டுபோய் போடவும் வேலை வாங்குவாராம்.
தனது வீட்டில் இது குறித்துச் சொல்ல அவரது பெற்றோரோ ‘ஆசிரியர் சொல்வதைச் செய்யவேண்டும் அவர்தான் நமக்கு குரு’ என்று கூறி மீண்டும் பள்ளிக்கு அனுப்புவார்களாம்.
ஒரு முறை உயர்ஜாதி வகுப்பு மாணவர்களின் வீட்டுப்பாட நோட்டுப்புத்தகத்திற்கிடையே லாலுவின் வீட்டுப்பாட நோட்டுப் புத்தகமும் இருந்ததால், ஆசிரியர் ‘இந்த விரல் தானே எழுதியது’ என்று கேட்டு அவரது விரல் நகத்தை ஊசியால் குத்தி கொடுமைப் படுத்தினாராம்.
ஒருமுறை தனக்குப் பிறந்தநாள் என்று ஆசிரியரிடம் கூறியபோது, ‘இன்று கொஞ்சம் அதிகமாக சாணி அள்ளு! நீங்கள் எல்லாம் பிறந்ததே அதுக்குத்தான்’ என்று இழிவுபடுத்திப் பேசினாராம்.
இது நடந்தது 1950களில்; இந்தப் பேட்டியை பலர் அதிகமாக இட்டுக்கட்டிப் பேசுகிறார் என்றனர். ‘யாருக்கோ எங்கோ எப்போதோ நடந்ததை லாலு பிரசாத் தனக்கு நடந்தது போல் அனுதாபத்தைத் திரட்ட இவ்வாறு பேசுகிறார்’ என்றார்கள்
இது 2016 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் வெளிவந்த பேட்டி, ஆகையால் இவரது பேச்சை ‘தேர்தல் ஸ்டண்ட்’ என்று கூறினர்.
இப்பொழுது மட்டும் என்ன வாழ்கிறது?
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் பிஹாரிப்பூர் என்ற சிறு நகரத்தில் 4ஆம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவரை அவர் படிக்கும் பள்ளியின் ஆசிரியர் ரஞ்சனி கான்வார் அவரது வீட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளவும், கழுவி விடவும், மாடுகளை குளிப்பாட்டச் செய்வதும் போன்ற வேலைகளைச் செய்யக் கட்டாயப்படுத்தி உள்ளார். 21.07.2024 அன்று அவரது தோட்டத்தில் எலுமிச்சை பழங்களை பிடுங்கி அருகில் உள்ள சந்தையில் மொத்த வியாபாரியிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பிவிட்டார் அவரது ஆசிரியை.
அந்த மாணவன் கைக்கு எட்டிய எலுமிச்சையைப் பறித்துவிட்டு உயரமாக உள்ள எலுமிச்சையைப் பறிக்க சிறிதாக இருந்த அந்த மரத்தின் மீது ஏறி உள்ளான். பாரம் தாங்காமல் அந்த மரம் முறிந்துவிட்டது. தனது வீட்டு எலுமிச்சை மரம் முறிந்துவிட்டது என்பதைக் கேள்விப்பட்ட அந்த ஆசிரியை அந்தப்பள்ளி மாணவனின் முதுகில் உப்பைத் தூவி சணல் பிரம்பால் அடித்துள்ளார். இதனால் முதுகு முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக பெற்றோர் பள்ளிக்குச் சென்று கேட்ட போது, ‘‘வீட்டுப்பாடம் படிக்கவில்லை, அதனால் அடித்தேன்; ஆனால் இவன் முதுகில் நான் அடிக்கவில்லை, பையன்களோடு சண்டை போட்டு இருப்பான்’’ என்று பொய் சொல்லி உள்ளார்.
இதனை அடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் காவல் துறையினர் ஆசிரியை ரஞ்சனி கன்வாரிடம் விசாரணை நடத்தினர்.
ஒன்றிய பிஜேபி அரசு திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையின் இலட்சணம் இந்த வகையில் தான்!
‘விஸ்வ கர்மா யோஜனா’ என்பதெல்லாம் பார்ப்பனர் அல்லாத முதல் தலைமுறையாகப் படிக்க வரும் மாணவர்கள் +2வைத் தாண்டி கல்லூரிகளுக்குச் செல்லக் கூடாது என்ற சூழ்ச்சியே!