உ.பி., ம.பி., அரியானா பகுதிகளில் இருந்து அரித்துவாருக்கு காவடி யாத்திரை புறப்பட்டுள்ளனர். அரித்துவாரில் ஓடும் அதே கங்கை தான் கான்பூரிலும் ஓடுகிறது. பல நூறு கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த இடைவெளியை (21.7.2024) நடக்கத் துவங்கி உள்ளனர். திரும்ப வரும் நாள் ஆகஸ்ட் 19 – அதாவது அடுத்த முழு நிலவு நாள் வரை நடப்பார்கள்
சுமார் ஒரு மாதம் நடந்து செல்லும் போதும் 25 லிட்டர் தண்ணீரை இரண்டு குடங்களில் சுமக்கிறார்கள். மீண்டும் வரும்போதும் அதே போன்று சுமக்கிறார்கள்.
இப்படி சுமப்பவர்களில் ஒருவர் கூட உயர் ஜாதியினர் இல்லை.
பார்ப்பனர்கள், வீட்டுத்தண்ணீரை எடுத்து மந்திரம் ஓதினால் அது கங்கை நீராக மாறிவிடுமாம்! ஆகவே அவர்கள் இவ்வாறு நடப்பதை சாஸ்திரம் அனுமதிக்காது. (சாஸ்திரம் என்பதே பார்ப்பனர்கள் தங்கள் வசதிக்காகப் பயன்படுத்திக் கொள்வதுதான் என்பதை அறிந்திடுக!)
இப்படி நடப்பவர்கள் அனைவருமே இடைநிலை ஜாதியினர்தாம்! முன்பு தாழ்த்தப்பட்ட மக்களை தீண் டாமை காரணமாக நடக்கத் தடை விதித்தனர். ஆனால் இப்போது தாழ்த்தப்பட்டவர்களும் கூட்டம் கூட்டமாக காவடி தூக்கிக்கொண்டு செல்லத் துவங்கியுள்ளனர்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அரியானா, உ.பி., மத்தியப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவேடு மிக மிக குறைவாக இருக்கும்.
காரணம் எல்லோரும் குடும்பத்தோடு காவடி யாத்திரை புறப்பட்டுவிடுவார்கள்.
குடும்பத்தில் ஒருவர் காவடி தூக்கினால் அனைவருமே செல்வார்கள். காவடி தூக்கிச்செல்பவருக்கு சமைத்துக் கொடுக்க, சமையல் பாத்திரங்களையும் சுமப்பார்கள். பல கிராமங்கள் காலியாகிவிடும்.
காவடி தூக்குவதற்கு 40 நாள் விரதமிருப்பார்களாம். அதாவது ஜூன் இறுதிவாரத்தில் இருந்தே பள்ளி செல்வதை நிறுத்திவிடுவார்கள். சரி இவர்களுக்கு அரசு என்ன செய்கிறது?
இவர்கள் செல்லும் பாதையில் உள்ள நிழல் தரும் மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தியுள்ளது. குறிப்பாக அத்தி மரங்களை! காவடி யாத்திரை செல்பவர்கள் அத்தி மரங்களைப் பார்ப்பது அவர்களுக்கு புண்ணியத்தைத் தராதாம். ஆகையால் குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள 14 ஆயிரம் மரங்களை சாமியார் அரசு வெட்டி வீழ்த்தியுள்ளது! மேலும் ெஹலிகாப்டரில் இருந்து மலர்களைத் தூவுகிறார்கள்; (இது எந்த அய்தீக ரகத்தைச் சார்ந்ததோ!) மலர்கள் காவடி செல்பவர்கள் மீது விழவேண்டும் என்பதற்காகவும் இதர சாலையோர மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்த ஆண்டு புதிதாக காவடி யாத்திரை செல்ப வர்களின் புனிதத்தைக் காக்கவேண்டும் என்பதற்காக ஹிந்து கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்குவதை உறுதி செய்யும் வகையில் கடைகளில் பெரிய எழுத்துக்களில் கடை உரிமையாளர்களின் பெயர்களை எழுத வேண்டும், கடையில் வேலை செய்பவர்களின் பெயரை கழுத்தில் அடையாள அட்டைபோல் தொங்கவிடவேண்டும் என்று உத்தரவு வேறு பிறப்பித்துள்ளனர்.
அக்பரி நாமா மற்றும் அன்வர் போன்ற மாம்பழ வகைகள் விற்பதை தடை செய்துள்ளனர். காரணம் குறிப்பிட்ட மாம்பழங்களில் முஸ்லீம் பெயர் உள்ளதாம். இதில் அன்வர் என்பது நாக்பூரில் உள்ள இந்த வகை மாம்பழங்கள் அதிகம் வளரும் குறிப்பிட்ட பகுதியின் பெயர். இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தோட்டக்கலைத்துறை அறிவித்த பிறகும் கூட இந்த மாம்பழவகைகளுக்கு தடை செய்துள்ளனர்.
மதம், பக்தி, சடங்குகள், யாத்திரைகள் என்ற பெயரால் மக்களின் அறிவும், உழைப்பும், காலமும், பொருளாதாரமும் எந்த அளவு நாசமாகிப் போகின்றன என்பதற்கு உ.பி.யில் நடைபெறும் இந்த பாத யாத்திரை கண்ணுக்குத் தெரிந்த மூடத்தனத்தின் மொத்த உருவமாகும்.
மனித உழைப்பு என்பது மகத்தானது; அது தத்தம் குடும்பத்துக்கும், சமூகத்திற்கும் ஆணி வேராகும்.
அத்தகைய விலை மதிக்க முடியாத செல்வத்தை, பைத்தியக்காரத்தனமான மத மூடநம்பிக்கையால் சிதைப்பது – கொலைக் குற்றத்தைவிட கொடிய குற்றமாகும்.
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமையான விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்னும் குடி மக்களின் அடிப்படைக் கடமையை (51A-h) காலில் போட்டு மிதிப்பதை அனுமதிக்கலாமா? ஓர் அரசே இந்தக் குற்றத்திற்குத் துணை போகலாமா?
மரங்களை வளர்க்க வேண்டும் என்று அரசு ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு, மதச் சடங்கு என்ற பெயரால் அரசே மரங்களை வெட்டிச் சாய்ப்பது எந்த வகையில் சரி? சட்ட விரோதமாக செயல்படுவது என்று ஒரு முடிவை எடுத்துக் கொண்டு பி.ஜே.பி. அரசு செயல்படுவது – வெட்கக்கேடே!