இந்திய வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவு

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூலை 22- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வுத்தளத்தில் புதிய கற்காலப்பண்பாட்டைக் கண்டறிய அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு உடைந்த நிலையில் புதிய கற்காலக் கருவி கண்டெடுக்கப்பட்டது.
மேலும், சுடுமண் முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், கண்ணாடி வளையல் துண்டுகள், வட்டச்சில்லுகள், தக்களி ஆகிய சங்க காலம் என்றழைக்கப்படும் தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
தற்போது, சென்னானூர் அகழாய்வில் 90 செ.மீ முதல் 108 செ.மீ வரையிலான ஆழத்தில் தமிழி எழுத்துப்பொறிக்கப்பட்ட மூன்று பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பானை ஓடுகளில் முறையே [ந்]தை பாகஅந், ஊகூர், [சா]த்தன் என பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரித்து வருவதாக முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாவது:-
‘‘மூடியுடன் பானை, பாசிமணிகள், சுடுமண் கிண்ணங்கள் தொட்டி, உறைகிணறு, வெள்ளியிலான முத்திரைக் காசு, சிவப்பு வண்ணக்கொள்கலன், தமிழி பானை ஓடு, இரும்பிலான ஏர்க்கலப்பையின் கொழுமுனை, தந்தத்தாலான பகடைக்காய் போன்றவை அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், சுடுமண் சிற்பம், உணவுக் கிண்ணம், செம்பினாலான அஞ்சனக்கோல் ஆணி என இப்படித் தொடர்ந்து அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள், தமிழரின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிவியல் சான்றுகளுடன் உலகுக்கு எடுத்துக்கூற நாம் மேற்கொண்டுள்ள பயணம் சரியான திசையில் செல்வதை உறுதிசெய்கிறது.
இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடர்வோம்’’ என பதிவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *