சென்னை, ஜூலை 20- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனிப்பட்ட முறையில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவை ‘சுய லாபத்துக்காக அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு, மக்களின் வரிப்பணத்தில் தி.மு.க.வின் கொள்கைகளை அறிக்கையாக சமர்ப்பித்ததைவிட தி.மு.க.வில் சேர்ந்து கொள்கை பரப்புச் செயலாளர் ஆகிவிடலாம்” என்று விஷமத்தனமான ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
சமூக சமத்துவத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தீர்ப்புகளை வழங்கி, உரிமைகளை பெற்றுத்தந்து வரலாறு படைத்தவர் சந்துரு. அவரை அண்ணாமலை விமர்சனம் செய்வதற்கு எந்த அருகதையும் இல்லை. எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை அண்ணாமலை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சந்துரு நீதிபதியாக இருந்து வழங்கிய தீர்ப்புகளின் கருத்து களின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட ‘அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” என்ற புத்தகத்தை அஞ்சல் மூலமாக அனுப்புகிறேன். அந்நூலை அண்ணாமலை படித்து சந்து ருவை பற்றி முழுமையாக புரிந்து கொண்டு கருத்துகளை கூற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.