நாங்கள் தேர்தலுக்கு நிற்பவர்கள் அல்ல. உங்கள் ஓட்டை எதிர்பார்த்து வருபவர்கள் அல்ல. நாங்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டுமென்று சொல்பவர்கள் அல்ல. நாங்கள் மனிதத் தொண்டு செய்பவர்கள். நாங்கள் சொல்வதைக் கேட்டு உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்து எது சரியென்று தோன்றுகிறதோ, அதன்படி நடந்து கொள்ள வேண்டும். சொல்கிறவர்கள் பேச்சையெல்லாம் கேட்டு சிந்திக்காமல் ஏற்றதால்தான் நாம் இந்தக் கதிக்கு ஆளாகி இருக்கிறோம்.
பகுத்தறிவாளர் கழகமென்பது மனிதர்கள் கழகமாகும். இதில் சேராத மற்றவர்கள் மிருகங்களுக் குச்சமமானவர்களாவார்கள். மனிதனைத் தவிர, மற்ற ஜீவன்கள் 1,000, 2,000 வருடங்களுக்கு முன்னிருந்த நிலையில்தான் இன்றும் இருக்கின்றன. மனிதன் அப்படியல்ல. நாளுக்கு நாள் மாறிக் கொண்டு வருகின்றான். எதையும் ஏன், எதற்கு என்று ஆராய்ந்து செய்கிறான் என்றாலும் தன் மடமையிலிருந்து விடுபட வேண்டுமென்கின்றபோது தனது அறிவைப் பயன்படுத்துவது கிடையாது.
சில விஷயங்களில் மனிதன் சிந்திக்காமலிருப் பதற்குக் காரணம் அதற்கு ஆதாரமான வேத, சாஸ்திர, புராணங்களில் சிந்திப்பது தவறு. சிந்தித்தால் நரகத்திற்குப் போவான் என்றிருப்பதால் சிந்திக்க பயப்படுகின்றான். கடவுள் – மத – சாஸ்திரங்களில் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தாத காரணத்தால் மனிதன் மடையனாக இருக்கின்றான்.
மனிதன் காட்டுமிராண்டியாக, அறிவற்றவனாக இருந்த போது 2,000, 3,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பாடு செய்யப் பட்டவைகளை நம்பிக்கொண்டு காட்டுமிராண்டியாக இருப்பதைத்தான் நாம் சிந்திக்க வேண்டுமென்கின்றோம். மனிதனின் மடமை, இழிவு ஆகியவைகளுக்குக் காரணமானவைகளைச் சிந்தித்து மனிதன் அதிலிருந்து விடுதலை பெற்று மனிதனாக வேண்டுமென்கின்றோம். இதுதான் பகுத்தறிவாகும். இதைப் பற்றி இதுவரை எவனுமே கவலைப்படவில்லை! நாங்கள்தான் மக்களைச் சிந்திக்கத் தூண்டி வருகின்றோம். அதன் காரணமாக இன்று ஓரளவு மக்கள் உணர்ச்சியும், தெளிவும் பெற்றிருக்கின்றனர். ஒவ்வொருவர் உள்ளத்திலும் பகுத்தறிவு எண்ணம் தோன்றியுள்ளது.
பகுத்தறிவுவாதிக்கு கடவுள் – மத – சாஸ்திர – மொழி – தேசம் – இலக்கியம் – முன்னோர் ஆகிய எதிலும் பற்றிருக்கக் கூடாது. தனது அறிவில்தான் பற்றிருக்க வேண்டும். பகுத்தறிவுவாதி மிக ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும். திட்டத்திற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். எந்தக் காரியத்தையும் ஏன், எதற்கு, இது இல்லாவிட்டால் என்ன கேடு? இது இருப்பதால் என்ன லாபம்? என்பவையெல்லாம் சிந்திக்க வேண்டும். அதுதான் பகுத்தறிவாளர் கடமை யாகும்.
எனது 93ஆவது பிறந்த நாள் விழா என்றால் மற்றவர்களுக்குத் தைரியம் வருவதற்காகவேயாகும். நான் கடவுள் பக்தனல்ல. கடவுள் அருளால் நான் உயிர் வாழவில்லை. கண்டதைச் சாப்பிட்டு கண்டபடி அலைந்து திரிந்து கொண்டு வருபவன். மற்றவனைப் போல் கடவுள், பக்தி, பூஜை என்று செய்தது கிடையாது. விபரம் தெரிந்த நாள் முதல் கடவுள் ஒழிப்பிற்காக பாடுபடுபவன். மற்ற மக்களெல்லாம் சாபம் விடும் அளவிற்கு நடந்து கொண்டிருக்கின்றேன். கடவுள் சிலைகளைப் போட்டு உடைத்திருக்கின்றேன். கடவுள் படங்களையெல்லாம் தீயிட்டுக் கொளுத்தி இருக்கின்றேன். கடவுள் உருவங்களை செருப்பாலடித்திருக்கின்றேன். இவ்வளவும் செய்து நான் 93 ஆண்டுகள் வாழ்கின்றேனென்றால், மற்றக் கடவுளை நம்புகிறவர்கள், கடவுளை இழிவுபடுத்தி செருப்பாலடிக்கிறவன் 93 வயது வரை வாழ்கிறானென்றால் கடவுளுக்கும், மனிதன் வாழ்விற்கும், மனிதனுக்கும் சம்பந்தமில்லை. கடவுள் இருந்தால் தனது எதிரியை விட்டு வைக்க மாட்டார் என்பதை உணர்ந்து கொள்வதற்காகவே எனது 93ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடுகின்றார்கள்.
இந்த நாட்டில் உழைப்பவர்கள் மற்ற மக்களின் நல்வாழ் விற்காகப் பாடுபடுபவர்கள். மனிதர்களுக்குத் தேவையான தொழில்களைச் செய்பவர்கள் நாம். நம்மில் பலர் இன்று மந்திரிகளாக இருக்கலாம். சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம். உயர்ந்த பதவிகளில், உத்தியோகங்களில் இருக்க லாம் என்றாலும், பார்ப்பானைத் தவிர நாம் அத்தனை பேரும் சாஸ்திரப்படி, கடவுள் அமைப்புப்படி மட்டுமின்றி இன்றைய சட்டப்படியும், சூத்திரர்களாக பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருந்து கொண்டிருக்கின்றோம். இந்தச் சூத்திரத் தன் மைக்குக் காரணம் – அடிப்படை கடவுள், மதம், சாஸ் திரம் என்பதால் அவைகளை ஒழிக்க வேண்டுமென்கின்றோம்.
இவைகள் ஒழிந்தும் நம் சூத்திரத்தன்மை போகவில்லை என்றால் அடுத்து நாம் நம் சூத்திரத் தன்மையை, இழிவை நிலை நிறுத்திக் கொண்டிருப்பவர்களை அழிக்க வேண்டியதுதானே! மானமும், அறிவும் இருந்தும் நாம் இங்கு பிழைக்க வந்த பார்ப்பானுக்கு இழிமகனாக எத்தனை காலமிருப்பது?
மக்கள் தற்போது கடவுளைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. தங்கள் இழிவு நீங்கினால் போதும் என்று கருதும்படியாக வந்துவிட்டார்கள். இன்று அரசாங்கமும் யார் வேண்டுமானாலும் கோயிலில் பூஜை செய்யலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம் என்று சட்டம் செய்துள்ளது. அதனை ஒருவர்கூட எதிர்க்க முன்வரவில்லையே. இன்றைக்குப் பார்ப்பான் எங்கு பார்த்தாலும் கோயில் கட்டுகின்றான். மக்களை எப்படியும் முட்டாள்களாக்க வேண்டுமென்று பாடுபடுகின்றான்.
பார்ப்பான் சொல்லுகிற கடவுள்கள் அத்தனை யும் மனிதனைவிட மிக இழிகுணங்கள் படைத்த வையாகும். காரணம், அவன் கடவுள்களை உண்டாக்கிய காலம் மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலம்; அந்தக் காலத்திற்கேற்ப ஏற்பாடு செய்துள்ளான். யோக்கியமாக இருந்தால் பார்ப்பான் வந்து சொல்லட்டுமே: நமக்குள் ஜாதி பேதமில்லை. நாமெல்லாம் ஒன்றுதான். நீ தொட்டதை நானும் சாப்பிடுவேன். உன்னைத் தொட மாட்டேன் என்று சொன்னது தவறு. நாமெல்லாம் ஒன்றுதான். நமக்குள் எந்த பேதமும் கிடையாது என்று சொல்லி பூணூலை அறுத்து எறிந்து விட்டு வரட்டுமே!
அதுவரை இந்தக் கடவுள்களைச் செருப்பாலடிக் காமல் இழிவுபடுத்தாமலிருக்க முடியுமா? இந்த இராமனும், கிருஷ்ணனும், பிள்ளையாரும், சிவனும், விஷ்ணுவும், பிரம்மாவும், கந்தனும் போய் விட்டால் யாருக்கு என்ன நஷ்டம்? இவைகள் இல்லாவிட்டால் உலகில் எந்தக் காரியம் நின்று போய்விடும்? உலகில் உள்ள 500 கோடி மக்களில் எத்தனை பேர் கந்தனையும், இராமனையும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். கடவுள் இருந்தால் அது உலக மக்கள் அனைவருக்கும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும். மதத்திற்கொன்று, ஜாதிக்கொன்றாக இருக்கக் காரணம் என்ன?
நம் நாட்டில் கடவுளால் பலன் பெற்றவன் பார்ப்பான். அவன் 100-க்கு 100ம் படித்திருந்தான். நாம் 100-க்கு 5 பேர்தான் படித்திருந்தோம்.
நாம் உணர்ச்சி ஏற்பட்டு கடவுள் – மதம் – சாஸ்திரம் ஆகியவைகளை ஒழிக்க முற்பட்ட பின் தானே இன்று நாம் 100-க்கு 50 பேராவது படித்திருக்கின்றோம்.
நம்முடைய நல்வாய்ப்பாக இன்றைய ஆட்சி அமைந்திருக்கின்றது. துணிந்து நமது கொள்கைகளை ஏற்றுக் கொண்டு செயலாற்றி வருகின்றது. நமது வளர்ச்சி இந்த ஆட்சியின் கையில் தானிருக்கின்றது. இந்த ஆட்சி ஒழிந்தால் நம் மக்களின் நிலை தலைகீழாக மாறிவிடும். பின் அதிலிருந்து தலை தூக்கவே முடியாது. இதனை நன்கு உணர்ந்து நமது மக்கள் இந்த ஆட்சிக்கு ஆதரவு தரவேண்டும். இந்த ஆட்சியைக் காப்பதைத் தங்களின் கடமையாகக் கருத வேண்டும்.
(3.9.1971 அன்று அவலூர்பேட்டையில் செஞ்சி வட்டாரப் பகுத்தறிவாளர் கழகத் துவக்க விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை – ‘விடுதலை’ 1.10.1971)