சிந்து சமவெளி நாகரிகத்தை திராவிடர் நாகரிகம் என்று தொல்லியல் ஆய்வு செய்து அறிவித்த ஜான் மார்ஷலுக்கு சென்னையில் சிலை – பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தவிருக்கும் தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டும் நன்றியும்!
சென்னை, ஜூலை 20- சிந்து சமவெளி நாகரிகம் என்று தொல்லியல் ஆய்வு செய்து உலகிற்கு அறிவித்தவர் ஜான் மார்ஷல். அந்த அறிக்கையின் நூற்றாண்டு விழா சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நேற்று (19.7.2024) நடைபெற்றது. அவ்விழாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆய்வை வெளிப்படுத்திய ஜான் மார்ஷலுக்கு தலைநகரமாம் சென்னையில் சிலை நிறுவுவது என்றும், பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்துவது என்றும் முடிவெடுத்து அதற்காக ரூ.50 லட்சத்தை ஒதுக்கிய திராவிட மாடலான தமிழ்நாடு அரசுக்கும், குறிப்பாக முதலமைச்சருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை – பெரியார் திடலில் 19.7.2024 அன்று திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் சிந்துவெளியின் திராவிட நாகரிகத்தைப் பறைசாற்றிய சர்.ஜான் மார்ஷலின் அறிக்கை நூற்றாண்டு விழா (1924-2025) நடைபெற்றது. அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்ற விழாவினையொட்டி ‘சிந்துவின் நாகரிகம்’ எனும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கத்திற்கு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் பேராசிரியர் பெ.ஜெகதீசன் தலைமை வகித்து உரையாற்றினார். சிறப்புரையினை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் துணை கண்காணிப்பாளர் (பணிநிறைவு) முனைவர் மார்க்சிய காந்தி வழங்கினார்.
கருத்தரங்க நிறைவுரையினை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் புரவலர், திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறை துணைத் தலைவர் பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம் வாழ்த்திப் பேசினார். மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கிம் கல்லூரியின் வரலாற்றுத் துறையின் முனைவர் ப.குமரன், சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் வெ.மாரப்பன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கருத்தரங்கின் நோக்க உரையினை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் க.கருணானந்தமும், வரவேற்புரையை பொருளாளர் வீ.குமரேசனும் வழங்கினர். கருத்தரங்க நிகழ்வினை சென்னை புதுக்கல்லூரியின் வரலாற்றுத் துறையின் முனைவர் அ.ரஷீத்கான் ஒருங்கிணைத்தார். சென்னை எத்திராஜ் கல்லூரியின் வரலாற்றுத் துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் மு.திலகவதி நன்றி கூறினார்.
தமிழர் தலைவர் உரை
தமிழர் தலைவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது: நமது பண்பாட்டின் பெருமையை, நாகரிகத்தின் பெருமையை நாம் உணரவில்லை – தொடக்கத்தில். ஆனால் மேற்கத்தியர்கள் இந்த மண்ணிற்கு வந்து கள ஆய்வு, மொழி ஆய்வு நடத்திய பின்னர் அவர்கள் நம்மைப் பற்றிய சிறப்பை அறிந்து எடுத்துச் சொல்லும் போதுதான், நமது பெருமை நமக்குத் தெரிய வருகிறது.
திருக்குறள் பல நூற்றாண்டுகளாக பெயரளவில் இருந்த பொழுது அதனை மேற்கத்திய அறிஞர் ஜி.யு.போப் படித்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பின்புதான் அதன் பெருமை புலப்பட்டது. ஆய்வில் கண்ட திருக்குறளின் பெருமையை – சிறப்பை தந்தை பெரியார் ‘திருக்குறள் மாநாடு’ நடத்தி மக்கள் திரளிடம் அந்த இலக்கியத்தைக் கொண்டு சென்றார்.
அதேபோல சிந்துவெளிப் பகுதி அகழாய்வுகள் – மொகஞ்சதாரோ – அரப்பா ஆகிய இடங்களில் 1920இல் தொடங்கி நடைபெற்றது. அதற்கு முன்பும் நம் நாட்டின் பல பகுதிகளில் அகழாய்வுகள் நடந்திருந்தன. ஆனால் அகழாய்வின் மூலம் சிந்துவெளிப் பகுதியில் நிலவியது திராவிட நகரிகம் தான் எனக் கண்டறியப்பட்டது தனிச் சிறப்பு வாய்ந்தது. உலகின் பல பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுச் சிறப்புகளுக்கு இணையாக – மேலாகக் கருதும் பண்பாட்டுக் கூறுகளை உடையது. அந்த சிந்து வெளிப் பகுதியில் அகழாய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட நாகரிகம் திராவிட நாகரிகம் எனப் பெயரிட்டு அறிக்கை கொடுத்தவர் – 1924இல் சர். ஜான் மார்ஷல் ஆவார். இவர் சிந்துவெளிப் பகுதியில் நடைபெற்ற அகழாய்வு பணியினை நிர்வகித்தவர்; அந்நாளைய பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்திய தொல்லியல் ஆய்வில் உயர் இயக்குநர் (Director General of Archaeological Survey of India) ஆக இருந்தவர். அதற்கு முன்னர் மொழி அடிப்படையில் திராவிடத்தின் தனித்தன்மை கார்டுவெல் பாதிரியாரால் கண்டு அறியப்பட்டது. ‘திராவிட நாகரிகம்’ என்ற அகழாய்வுத் தளத்தில் முதன்முதலாகக் கொண்டு வந்தவர் – உலகறியச் செய்தவர் – சர் ஜான் மார்ஷல் ஆவார். திராவிட நாகரிகம் தொன்மையான நாகரிகம் – வேத கால நாகரிகத்திற்கும் முந்தைய கால – நகர நாகரிகம் – பண்பாட்டு செறிவு மிக்கது என்பது சர் ஜான் மார்ஷல் அறிக்கையின் வாயிலாக அறியப்பட்டது.
‘திராவிட நாகரிகம்’ என்பதாக அதற்கு முன்பு யாரும் அறிந்திடவில்லை. அப்படிப்பட்ட அகழாய்வு அறிஞர் அறிக்கை அளித்ததின் நூற்றாண்டு (1924-2025) தற்பொழுது நடக்கிறது. அதன் கொண்டாட்டம் என்பது கருத்துப் பரவலுக்காகவே.
இந்த நூற்றாண்டு விழாவில் திராவிட இயக்க முன்னோடித் தலைவர்களில் ஒருவரான நாவலர் க.நெடுஞ்செழியன் அவர்கள் தாம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் நடந்த ஒரு அறிஞரின் சொற்பொழிவு மற்றும் அவருடனான உரையாடல் பற்றி தான் எழுதிய ‘திராவிட இயக்க வரலாறு’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சிந்துவெளி அகழாய்வுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஈராஸ் பாதிரியார், திராவிட நாகரிகம் பற்றிய சொற்பொழிவினை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1910களின் இறுதியில் ஆற்றிய குறிப்பு அந்த நூலில் உள்ளது.
“திராவிட நாகரிகம் என்பது உலகளாவிய வேர்களைக் கொண்டது. நான் ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்துள்ளவன். அந்த வகையில் நான் ‘ஸ்பானிய திராவிடன்’ – திராவிடன் என என்னை சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்” எனக் குறிப்பிட்டாராம். அப்பொழுது மாணவராக இருந்த நாவலர் அவர்கள் அதைக் கேட்டு தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
நமக்கு ‘திராவிடர்’ என்ற உணர்வு வருவதற்கு பிற நாட்டவர் நம் நாகரிகப் பெருமை உணர்ந்து நம்மை ‘திராவிடன்’ எனச் சொல்லிட முற்பட்ட நிலையில்தான் ஏற்படுகிறது. மேலும் பல ஆய்வு அறிக்கைகள் ஜான் மார்ஷல் நூற்றாண்டில் வெளிவரவேண்டும். ஆய்வு அறிஞர்கள் அந்தத் தலையாயப் பணியினை செவ்வனே செய்திட வேண்டும். ஆய்வு முடிவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான பொறுப்பை பரப்பாளர்களாக உள்ள நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்பதை இந்த நேரத்தில் ஆய்வு அறிஞர்களுக்கு வேண்டுகோளாக விடுக்கிறோம். ஜான் மார்ஷல் அறிக்கையின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் பரவலாகக் கொண்டாடப்பட வேண்டும். திராவிட நாகரிகச் சிறப்பு பரந்த அளவில் எடுத்துச் செல்லப்பட வேண்டும். – இவ்வாறு தமிழர் தலைவர் தமது நிறைவுரையில் குறிப்பிட்டார்.
தீர்மானம்
கருத்தரங்கில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
“சிந்துவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகமே என்று சர் ஜான் மார்ஷல் அறிவித்ததின் நூற்றாண்டு விழாவின் பகுதியாக ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்துவதென்றும், அவருக்கு தமிழ்நாட்டின் தலைநகரில் சிலை அமைக்கப்படுமென்றும் அறிவித்ததுடன் அதற்கென ரூ.50 லட்சத்தை ஒதுக்குவதாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசிற்கு, குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, பாராட்டுதல்களுடன் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்தரங்க நிகழ்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாணவர் பெருந்திரள், பல புறநகர் பகுதி கல்லூரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திடும் வகையில் பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
கலந்துகொண்ட கல்லூரிகள்:
சென்னை மாநிலக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி, சர். தியாகராயர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொன்னேரி லோகநாதன் நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருத்தணி எஸ்.எஸ். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ்.அய்.இ.டி. மகளிர் கல்லூரி, மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கிம் கல்லூரி, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, நந்தனம் அரசு கலைக்கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி, லயோலா கல்லூரி, நெமிலி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ- மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பங்கேற்ற பேராசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவ – மாணவியர் பேரார்வத்துடன் ஜான் மார்ஷல் அறிக்கை நூற்றாண்டுக் கருத்தரங்கில் பங்கேற்றனர். கருத்தரங்கின் நிறைவில் மாணவ – மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் பதிலளித்தனர். புதிய கருத்தாக்கம் பெற்று மாணவர்கள் இல்லம் திரும்பினர்.