ஜனநாயகம் இல்லையென்றால்… விலைவாசி உயரும். நீங்கள் நுகர்வோராக இல்லாமல் நுகர்வுக்கு அடிமைகளாக மாற்றப்படுவீர்கள். வட இந்தியாவில் பல குடும்பங்கள் ரொட்டிக்கும், மிளகாய்க்கும், உருளைக்கிழங்கிற்கும், பாலுக்கும் பண்ணை வீடுகளில் வேலை செய்யும் அவலம் சமீப காலமாக உருவாகி விட்டது என்று ‘த குயிண்ட்’ இணைய இதழ் சான்றுகளோடு சுட்டிக்காட்டியது.
இதில் சிலர் தினக்கூலிகளாக இருந்தனர். ஆனால் விலைவாசி உயர்வால் அவர்களின் தினக்கூலி போதாமல் போகவே உயிர் வாழ உணவு கிடைத்தால் போதும் என்ற பேரவலத்தில் அடிமைகளாக பண்ணை வீடுகளுக்குப் போய்விட்டனர்.
அங்கே இரவு, பகல் தோட்டவேலை, அவர்களுக்கு கோதுமை மாவு, உருளைக்கிழங்கு தோட்டங்களில் விளையும் காய்கறிகள் தான் கூலி. ஆடைகளோ பண்ணைவீட்டு உரிமையாளர்களின் கிழிசலும் கந்தலும் தான் என்றாகிப்போனது.
அங்கு உங்கள் உரிமைக்குரலை எழுப்பினால் கொலை செய்யப்பட்டு தோட்டங்களிலேயே உரமாக்கப்படுவீர்கள்.
இது நாடு எங்கும் அரங்கேறும் – உங்கள் குரலை உயர்த்த தடை செய்யப்படும்/
கல்வி முக்கியம் என்று இரவும் பகலும் படிப்பீர்கள். ஆனால் உங்கள் மதிப்பெண்கள் காணாமல் போய் நீங்கள் தேர்ச்சி பெறாநிலைக்குச் செல்வீர்கள். உங்கள் கல்வி கேள்விக்குறியாகிவிடும். அதற்கான துவக்கமாகத்தான் புதிய கல்விக்கொள்கையில் 5 ஆம் வகுப்பு 8ஆம் வகுப்பு மற்றும் 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்று ஆகிவிட்டது. ஒரு ரொட்டி கூடவே கொஞ்சம் உப்பு மட்டுமே மதிய உணவாக கொடுக்கப்படுகிறது.
போராடி உயர்கல்விக்குச் சென்றாலும் மேலும் நெருக்கடிகள் கொடுக்கப்படும் – பொருளாதார சுமையின் காரணமாக கல்வி கைவிடப்படும் – நீங்களும் கூலிகளாக்கப்படுவீர்கள்.
உரிமைகள் முழுமையும் பறிக்கப்படும் – எதிர்ப்பு தெரிவித்தால் தடியால் அடிப்பார்கள்.வரி என்ற பெயரில் உங்கள் உழைப்பு சூறையாடப்படும், பாசிச அரசின் ஆசைகள் நிறைவேறும். ஆனால் உங்களால் எதுவும் சொல்ல முடியாது.
எல்லாவற்றையும் தலைகுனிந்து தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும், எல்லாவற்றையும் பார்த்த பிறகும் அமைதியாக இருக்க வேண்டும்.
இப்படி நடக்கவில்லை என்று நினைக்கவேண்டாம். கடந்த 2 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசம் உத்தரப்பிரதேசம், மகராட்டிரா போன்ற மாநிலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று கூறி சிறுபான்மையின மக்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினார்கள். கேள்வி கேட்பார் யாருமில்லை.
குற்றச்செயல்கள் புரிந்தார்கள் என்று கூறி நீதிமன்றத்திலும் காவல் பாதுகாப்பிலும் இருக்கும் போதே ஜெய் சிறீராம் என்று கூவிக்கொண்டே கொலை செய்கிறார்கள். அவர்களின் செயலுக்கு பாராட்டு தெரிவிக்கும் பெருங்கூட்டம் கூட சேர்ந்து பாரத் மாதாக்கு ஜே என்கிறது.
பண்ணை விவசாயம் என்ற பெயரில் சட்டம் போட்டு ஏழை விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி அவர்களது நிலத்திலேயே அவர்களை கூலியாட்களாக மாற்றிவிடுகின்றனர்.
இப்பாதகமான விவசாய சட்டம் தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போராடும் விவசாயிகள் கொடூரமாக அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். ஏற்கெனவே, விவசாயிகள் கொடூரமான அடக்குமுறைக்கு ஆளானார்கள். டிரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இன்று கண்ணீர் புகைகுண்டுகள் வீசப் பயன்பட்ட அதே டிரோன்கள் நாளை சிங்கள் ராணுவத்தினர் ஈழத் தமிழர் முகாம்களில் எரிகுண்டுகளை வீசியது போல் வீசப் பயன்படாது என்பதற்கு உத்திரவாதமில்லை.
விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்களின் உடல் உழைப்பு கொடூரமாக இருக்கும். ஆனால், அவர்களால் அவ்வளவு சம்பாதிக்க முடியாது. இந்த ஜனநாயக விடுதலை என்பதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு ஒவ்வாத ஒன்றாகவே உள்ளது. ஆகவேதான் மோடி என்ற ஒருவரை உருவாக்கி அதன் மூலம் அவர்களின் பாசிச ஆட்சியை நடைமுறைப்படுத்திகொண்டு இருக்கின்றனர். மக்கள் அனைவரும் அடிமைகளாகி விடுவார்கள்.
கோடிக்கணக்கான மக்கள் ஒரு சிலரின் செல்வச் சேர்ப்பிற்காக உழைக்கின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் 11 விழுக்காடு செல்வந்தர்களுக்காக 77 விழுக்காடு மக்கள் உழைத்திருக்கின்றனர் என்று புள்ளிவிபரம் கூறுகிறது
மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்துவிட்டார். முழுப்பெரும்பான்மை இல்லாத நிலையில் தெற்கு கிழக்கு என்ற இரண்டு பகுதி மாநிலக் கட்சித் தலைவர்களின் தயவில் தான் இந்த மூன்றாவது முறை பதவி கிடைத்தது என்பதை மோடி இன்னும் உணரவில்லையோ என்று தோன்றுகிறது.
சமீபத்தில் இடைத்தேர்தல் முடிவுகளும் மோடிக்கு எச்சரிக்கைப் பாடம் சொல்லிவிட்ட்து இருப்பினும் மோடி 400 இடத்தை பெற்றுவிட்டது போன்ற மிதப்பில் இருக்கிறார்.
எப்போதும் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருக்கும் – ஜனநாயகம் என்பது இருக்கும் வரை.