வினா: சுயமரியாதைத் திருமணம் என்பது எது?
விடை: நமக்கு மேலான மேல்ஜாதிக்காரன் என்பவனை (பார்ப்பானை)ப் புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுயமரியாதைத் திருமணமாகும்.
வினா: பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன?
விடை: நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம் என்று அறிந்துகொள்ளாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியானதுமான காரியங் களைச் (சடங்குகளை) செய்யாமல் நடத்தும் திருமணம் பகுத்தறிவுத் திருமணம் ஆகும்.
வினா: தமிழர் (திராவிடர்) திருமணம் என்றால் என்ன?
விடை: புருஷனுக்கு மனைவி அடிமை (தாழ்ந்தவள்) என்றும், புருஷனுக்கு உள்ள உரிமைகள் மனைவிக்கு இல்லை என்றும் உள்ள ஓர் இனத்திற்கு ஒரு நீதியான மனு நீதி இல்லாமல் வாழ்க்கையில் கணவன் மனைவியும் சரி சம உரிமை உள்ள நட்பு முறை வாழ்க்கையை ஒப்பந்தமாகக் கொண்ட திருமணம் தமிழர் திருமணமாகும்.
வினா: சுதந்திரத் திருமணம் என்றால் என்ன?
விடை: ஜோசியம், சகுனம், சாமி கேட்டல், ஜாதகம் பார்த்தல் ஆகிய மூடநம்பிக்கை இல்லாமலும், மணமக்கள் ஒருவருக்கொருவர் நேரில் பார்க்காமல், அன்னியர் மூலம் ஒருவரைப்பற்றி ஒருவர் தெரிந்தும், அல்லது தெரிந்து கொள்வதைப்பற்றிக் கவலையேயில்லாமல், மற்றவர்கள் கூட்டி வைக்கும் தன்மை இல்லாமலும், மணமக்கள் தாங்களாகவே ஒருவரை ஒருவர் நன்றாய் அறிந்து திருப்தி அடைந்து காதலித்து நடத்தும் திருமணம் சுதந்திரத் திருமணமாகும்.
வினா: புரட்சித் திருமணம் என்றால் என்ன?
விடை: தாலி கட்டாமல் செய்யும் திருமணமாகும்.
வினா: சிக்கனத் திருமணம் என்றால் என்ன?
விடை: கொட்டகை, விருந்து, நகை, துணி, வாத்தி யம், பாட்டுக் கச்சேரி, நாட்டியம், ஊர்வலம் முதலிய காரியங்களுக்கு ஆக பணம் செலவு செய்வதும், ஒருநாள் ஒரு வேளைக்கு மேலாகத் திருமண நிகழ்ச்சியை நீட்டுவதுமான ஆடம்பரக் காரியங்கள் இல்லாமல் சுருங்கின செலவில், குறுகிய நேரத்தில் நடத்துவது சிக்கனத் திருமணமாகும்.
வினா: இவைகளையெல்லாம் சேர்த்து நடத்துகிற திருமணத்திற்கு ஒரே பேராக என்ன சொல்லலாம்.?
விடை: 1950 ஆம் வருடத்திய மாடல் திருமணம் அல்லது தற்கால முறை திராவிடர் திருமணம் என்று சொல்லலாம்.
– 14.3.1950 – ‘விடுதலை’ இதழில்
தந்தை பெரியார் அவர்கள் சித்திரபுத்திரன்
என்ற புனைபெயரில் எழுதியது