கடந்த ஒரு வார காலமாக ஒரு முட்டாள்தனமான மூர்க்கப் பாம்புக் கதை படம் எடுத்து ஆடியது. வெட்கம் கெட்ட ஏடுகளும் கிடைத்தது விறுவிறுப்பான தகவல் என்றுபோட்டிப் போட்டுக் கொண்டு அதனை நாலுபத்தி, அய்ந்து பத்தி என்று ஏதோ உண்மையில் நடந்த ஒரு செய்தி போல வெளியிட்டு கல்லாக் கட்டின.
40 நாட்களுக்குள் ஓர் இளைஞனை தொடர்ந்து ஒரு பாம்பு குறிப்பிட்ட இடைவெளியில் ஏழுமுறை கடித்ததாம்!
எத்தனை நாள்களுக்குத் தான் ஊரை ஏமாற்ற முடியும்?
கடைசிக் கடைசியாக இது ஜோடிக்கப்பட்ட கதை என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
இதுபற்றி ‘தினமணி’ (18.7.2024) ஏட்டில் வெளிவந்த செய்தி வருமாறு:
‘‘உ.பி.யின் பத்தேபூர் மாவட்டம் சவுரா கிராமத்தில் வசிப்பவர் விகாஸ் துபே (24). இவர் தன்னை கடந்த 40 நாட்களில் 7 முறை பாம்பு கடித்ததாக தமிழரான மாவட்ட ஆட்சியர் சி.இந்துமதியிடம் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக தீர விசாரிக்க முடிவு செய்த ஆட்சியர் இந்துமதி,மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ராஜீவ் நயன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டார். 48 மணிநேர விசாரணைக்குப் பிறகு அதன் அறிக்கை ஆட்சியர் இந்துமதியிடம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டது.
விசாரணை அறிக்கையில், “விகாஸை ஒரே ஒருமுறை பாம்பு கடித்துள்ளது. இதில் ஏற்பட்ட அச்சத்தால் அவருக்கு பாம்பு பீதி உருவாகி விட்டது. இதனால், அவர் அடிக்கடி தன்னை பாம்பு கடித்து விட்டதாக எண்ணி அச்சப்படுகிறார். இதனால் அவர் 6 முறை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
விகாஸை கடந்த ஜூன் 2-ஆம் தேதி பாம்பு கடித்த முதல் சம்பவத்துக்கு பிறகு அவர் பாம்புக் குற்றம் செய்துவிட்டதாக சவுரா கிராம வாசிகள் கூறினர். பாம்புகள் எப்படியும் கொல்லாமல் விடாது என விகாஸை அச்சுறுத்தி வந்தனர். அவர் பீதியடைய இதுவே காரணமாக கூறப்படுகிறது.
பாம்புக் கடி சிகிச்சைக்கு பணப் பற்றாகுறையால் விகாஸ் குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர். இதனால் எழுந்த சந்தேகத்திற்கு விசாரணை குழு அமைத்து ஆட்சியர் இந்துமதி, முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மதுரை மாவட்டம் பூலாம்பட்டியை சேர்ந்தவரான ஆட்சியர் இந்துமதியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதேபோல் உ.பி.யின் பூல்பூர் மாவட்டம் பத்வாபூர் கிராமத்தில் 2015 ஏப்ரலில் இச்சாதாரி பாம்பு என்று தன்னை கூறிக்கொண்ட சந்தீப் படேலுக்கு (27) திருமணம் நடைபெற இருந்தது. இவரது அருகில் மணப்பெண்ணாக ஒரு நாகம் இருந்துள்ளது. இவர்கள் முன் ஒரு பண்டிதரும் மந்திரம் கூற, பாம்புக்கு தாலி கட்டும் நேரத்தில் அங்கு உ.பி. காவல்துறையினர் வந்தனர். சந்தீப்பை கைது செய்தனர்.
2006 ஆகஸ்ட் மாதம் நடந்த மற்றொரு சம்பவத்தில் எட்டாவா கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் முன் ஜென்மத்தில் தான் ஒரு பெண் நாகமாக இருந்ததாக கூறினார். அருகிலுள்ள புஜுர் கிராமத்தின் சிவன் கோயில் கிணற்றில் ஆண் நாகத்துடன் வாழ்ந்து வந்ததாக கூறினார்.
தன்னுடன் சேர்த்து கொல்லப்பட்ட ஆண் நாகம், மீண்டும் இளைஞனாக அதே கிராமத்தில் பிறந்து வாழ்வதாகவும் அவருக்கு முதுகில் மச்சம் இருக்கும் என்று கூறி ஒரு இளைஞனை அடையாளம் காட்டினார்.
பிறகு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலிப்பதும், கவுரவக் கொலைக்கு அஞ்சி திட்டமிட்டு நாடகம் நடத்தியதும் தெரியவந்தது.’’ இது ‘தினமணி’ செய்தி.
உலகத்தில் பாம்பைப் பற்றிய கதைகள் போல வேறு எந்தக் கதைகளும் அதிகமாக இருக்க முடியாது. அவரவர்களுக்குத் தோன்றியது போல வண்ண வண்ணமாகக் கதைகளை அள்ளிக் கொட்டுவார்கள்! பொழுது போக வேண்டாமா?
பாம்புப் புற்றுக்குப் பால் ஊற்றுவார்கள் – உண்மையைச் சொல்லப் போனால் பாம்புக்கு இருப்பது பிளவுபட்ட நாக்கு; அதனால் பாலை உறிஞ்சிக் குடிக்கும் திறன் அதற்குக் கிடையாது.
அதுபோல இசை கேட்ட நாகம் என்றும், பாம்பாட்டி மகுடி வாசித்தால் பாம்பு ஆடும் என்றும் சொல்லுவதெல்லாம் அறிவியல் உண்மைக்கு எதிரானது.
பாம்புகளுக்கு அதிர்வுகள் மூலம்தான் கேட்கும் திறன் உண்டு. பாம்பாட்டி அசைந்தாடியபடி மகுடி ஊதும் போது பாம்பும் அதற்கேற்றாற்போல தலையை அசைக்கும்.
பாம்பு ரத்தினக் கல்லைக் கக்கும் என்பது ஒரு புரூடா!
இவற்றையெல்லாம் தெரிந்திருந்தும் ஏடுகள் கதை கதையாகப் பாம்பைப் பற்றி கதை வசனம் எழுதுவது மக்களை மடைமைக் குழிக்குள் தள்ளுவதே!
உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு காதல் நாடகத்தில் பாம்பு எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவல் ‘தினமணி’யில் வெளி வந்துள்ளது.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் காதலிப்பதும், கவுரவக் கொலைக்கு அஞ்சி திட்டமிட்டு பாம்பு நாடகம் நடத்தியதும் தெரிய வந்தது.
பகுத்தறிவுச் சிந்தனை மனிதனுக்கு எவ்வளவு அவசியம் என்பது புரியவில்லையா?