இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்று 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் 2014 ஆகஸ்ட் 15 செங்கோட்டையில் கொடி ஏற்றும் போதும் கூறினார். ஆனால் வட இந்தியாவில் பெரும்பான்மை ஹிந்து இளைஞர்கள் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்து பயிற்சி அளித்து கலவரத்தில் தான் இறக்கினார்கள்
2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்துவேன் என்றார் ஆனால் விவசாயிகளின் தற்கொலைப் புள்ளிவிபரங்களைக் கூட வெளியிடாமல் எங் களிடம் டேட்டா இல்லை என்று நாடாளுமன்றத்தில் கூறி விட்டார்கள். விவசாயிகள் நாடெங்கும் அழுது கண்ணீர் வடிக்கின்றனர்.
விலைவாசியை கட்டுப்படுத்தி உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்றார். ஆனால், பெரும் பணக்கார அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கூட நடுவீதிக்கு வந்து தக்காளி வாங்க அடிதடியில் இறங்குமளவிற்குச் செய்து விட்டார்.
அமெரிக்காவிற்குச் சென்ற மோடி ஆண்டுக்கு ஒரு அய் அய் எம், அய் அய் டி இந்தியாவில் கட்டுகிறோம் என்றார். 2015ஆம் ஆண்டு மும்பைக்கு அருகில் உள்ள அலிபாக் என்ற பகுதியில் அங்கு தேர்தல் வருவதை முன்னிட்டு அய் அய்டி உள்ளிட்ட பல தொழிற்கல்வி நிறுவனங்கள் குட்டி விமானநிலையத்தோடு கட்டப்படும் என்று அறிவித்தார். அதுவும் மதுரை எய்ம்ஸ் போலவே இன்றுவரை அப்படியே கட்டாந்தரையாகவே உள்ளது.
“பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்” என்றார் – அதாவது (பெண் குழந்தைகளைப் படிக்க வைத்து அவர்களை மேம்படுத்துவோம்) ஆனால், நடந்தது என்ன உத்திரப்பிரதேசம் ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட சமூகச் சிறுமி பாலியல்வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார், குற்றவாளி முக்கிய பாஜக அரசியல் தலைவரின் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் கொல்லப்பட்ட சிறுமியின் உடலை பெற்றோர்களைக் கூட பார்க்கவிடாமல் ஊருக்கு வெளியே குப்பைமேட்டில் எரித்தனர் காவல்துறையினரின் பாதுகாப்போடு.
8 வயது சிறுமி ஆசிபா, உள்பட நாடுமுழுவதும் தொடர்ந்து சிறுமிகள் கொல்லப்பட்டுக்கொண்டே இருந்தனர். இப்போதும் தொடர்கிறது.
2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, “நான் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை மீட்டு அனைவரது வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் போடுவேன்” என்று இரண்டு இடங்களில் கூறினார்.
தெளிவான ஹிந்தியில் தான் பேசினார்,
ஆனால் இன்றுவரை கருப்புப் பணமும் வரவில்லை. ஆனால், கருப்புப் பணத்தை எல்லாம் வெள்ளையாக்க பெரும் பண முதலைகளுக்காக பண மதிப்பிழப்பைக் கொண்டுவந்து அனைத்துக் கருப்புப் பணத்தையும் அவர்கள் வெள்ளையாக்குவதற்கு பெரும் துணை புரிந்தார் என்பதுதான் உண்மை.
“சப்கா சாத், சப்கா விகாஸ்” என்றார், (அதாவது அனைவருடன் சேர்ந்து அனைவருக்குமான வளர்ச்சி என்றார்) மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், அரியானா, மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சிறுபான்மையினரின் வாழிடங்களை இடித்துத் தள்ளி வணிகத்தலங்களை தீயிட்டு கொளுத்தி மகிழ்கின்றனர்.
இன்னொரு 5 ஆண்டு ஆட்சியை என்னிடம் கொடுங்கள்… இந்தியாவை மேலும் சிறப்பானதாக்கிக் காட்டுகிறேன்…