‘நீட்’ தேர்வின் இலட்சணம்!

2 Min Read

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு முறைகேடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் குஜராத்தில் உள்ள குறிப்பிட்ட தேர்வு மய்யங்களில் ஏன் தேர்வு எழுதினர் என்பதன் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தாண்டு ‘நீட்’ நுழைவுத் தேர்வு மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்தன. ‘நீட்’ தேர்வின் முறைகேடுகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
‘நீட்’ தேர்வு முறைகேடுகள் வழக்கை சிபிஅய் விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றத்திலும் நீட் முறைகேடுகள் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று (18.7.2024) நடக்கிறது.

இந்த நிலையில் குஜராத்தில் குறிப்பிட்ட தேர்வு மய்யங்களில் பிற மாநில மாணவர்கள் அதிகமாக தேர்வு எழுதியதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. குஜராத்தில் தேர்வு மய்யங்களாக இருந்த பள்ளிகளின் உரிமையாளர்கள்தான் ‘நீட்’ மோசடி கும்பலின் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள்தான் ‘சொற்ப’ விலைக்கு ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களிடம் பேரம் பேசியிருக்கின்றனர். அத்துடன் பிற மாநில மாணவர்களுக்கு குஜராத் போலி முகவரிகளை ஏற்பாடு செய்து கொடுத்து விண்ணப்பிக்க வைத்து, தேர்வு மய்யங்களைத் தேர்ந்தெடுக்கவும் செய்திருக்கின்றனர். குஜராத்தி மொழியில்தான் வினாத்தாள் இருக்கும்.. ஆனால் தேர்வு மய்யமே மோசடியாளர்கள் கூடம்தானே.. அவர்கள் அப்படியே விடைகளை சொல்ல – பணம் கொடுத்தவர்கள் பதில் எழுதியிருக்கிறார்கள். இதற்கு வெறும் ரூ.10 லட்சம் மட்டும் வசூல் செய்துள்ளனர்.
குஜராத்தின் வதோதரா உள்ளிட்ட பல பெரு நகரங்களின் பள்ளிகளில் இத்தகைய மோசடிகள் பெருமளவு நடந்திருக்கிறது; ஆனால் சில பள்ளிகள்தான் சிக்கி இருக்கின்றன; பெரும்பாலான பள்ளிகள் காப்பாற்றப்பட்டுள்ளன என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

சிபிஅய் நடத்திய விசாரணையின் அறிக்கை நீதிமன்றத்தில் முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட பின்னர் கூடுதல் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதன் பின்னராவது நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பு.
உண்மை நிலை இவ்வாறு இருக்க, உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வில் முறைகேடு பெரிய அளவில் நடக்கவில்லை என்று ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது கைச் சோற்றில் முழுப் பூசணிக் காயை மறைப்பதாகும்.
‘நீட்’டின் நோக்கமே தலைமுறை தலைமுறையாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்டுக் கிடந்தவர்கள், தலை தூக்கும் நிலையைத் தரை மட்டமாக்கும் சூழ்ச்சிப் பொறிதான்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள சமூகநீதியை மனதிற் கொண்டு தீர்ப்பினை வழங்கினால் மட்டுமே – நீட்டின் பின்னணியில் முக மூடி போட்டு ஒளிந்திருக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை முறியடிக்க முடியும்.
10 விழுக்காடு இடஒதுக்கீட்டையும், (EWS)பெற்றுக் கொண்டு, திறந்த போட்டியில் உள்ள 40 விழுக்காட்டையும் சுளையாக விழுங்கத் திட்டமிட்டுள்ள திமிங்கலங்களின் கோரப் பிடியிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினர்தான்; அவர்களின் நலன்களும் உரிமையும் காப்பாற்றப்படட்டும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *