அகில இந்திய காங்கிரஸ் தலைவர், கல்விக் கண்ணைத் திறந்த இரட்சகர் காமராசரைப் பற்றி அவரது பிறந்தநாளில் இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ள கருத்து வியப்பைத் தருகிறது. காமராசரின் மதசார்பற்ற தன்மையும், மோடி தன்னை வயப்படுத்திக் கொண்டிருக்கின்ற சிந்தனையும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவையாகும்.
காமராசரைப்பற்றி மோடி கூறியது வருமாறு:
‘‘காமராசரின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமைப் பண்பு மற்றும் ஏழைகளை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதற்காக அவர் பலராலும் மதிக்கப்படுகிறார். கல்வி உள்ளிட்ட துறைகளில் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது லட்சியங்களை நிறைவேற்றவும், நீதியும், கருணையும் உடைய சமுதாயத்தை உருவாக்கவும் நாங்கள் உறுதி எடுத்துக் கொள்கிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்’’ என்று காமராசரின் பிறந்த நாளில் பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது ஏதோ காமராசரின் பிறந்தநாளில் அவரைப் புகழ்ந்து தீர வேண்டும் என்கின்ற அரசியல் நோக்கத்தோடு ‘சம்பிரதாயமாக’ சொல்லப்பட்ட கருத்ததாகுமே தவிர, காமராசருக்கும், மோடிக்கும் எந்த வகையிலும் கருத்து ரீதியாக ஒற்றுமை என்பது அசல் கற்பனையாகும்.
குறிப்பாக இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்ற மதச்சார்பற்ற தன்மை என்ற கருத்தில் இருவரும் இரு துருவமாகும். பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராசரை டில்லியில் அவர் இருந்த வீட்டைக் கொளுத்திப் படுகொலை செய்ய முயன்ற கூட்டம் எது என்பது உலகத்திற்கே தெரிந்த ஒன்றாகும்.
ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நிலையில் மோடியை பிரதமராக கொண்ட பாஜக பாசிச அரசு எத்தனையோ சட்டத்தை கொண்டு வந்தது. பல மாநிலங்களில் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வந்து செயல்படுத்திக் கொண்டிருக்கவில்லையா? மாட்டிறைச்சிக்கு எதிராக பாஜகவும், காவி பரிவாரர்களும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கவில்லையா? சந்தைகளுக்குக் கொண்டு செல்லும் மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வழிமறித்து, உரிமையாளர்களே அடித்துக் கொன்ற கொடுமைகளெல்லாம் நாட்டில் நடந்து கொண்டு தானே இருக்கின்றது. செத்துப்போன பசு மாட்டுத் தோலை உரித்த தாழ்த்தப்பட்ட தோழர்களை அடித்துக் கொன்றவர்கள் யார்? சங்பரிவார்கள் தானே! அதை தூக்கி சுமக்கும் தலைவர் தானே பிரதமர் நரேந்திர மோடி!
‘‘கல்வி உள்ளிட்ட துறைகளில் காமராசரின் பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது லட்சியங்களை நிறைவேற்றவும், நீதியும், கருணையும், உடைய சமுதாயத்தை உருவாக்கவும் நாங்கள் உறுதி எடுத்துள்ளோம்’’ என்று கூறுகிறாரே பிரதமர் மோடி – இதில் உள்ள முரண்பாடு புரியாமல் போகுமா?
ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்துத் தந்தை பெரியார் போர்க்களம் கண்ட நிலையில், அவர் பதவி விட்டு விலகிய அந்த இடத்தில் முதலமைச்சராக வந்த காமராசர் என்ன செய்தார்? முதலமைச்சர் ராஜாஜி மூடிய 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததுடன் புதிதாக 12 ஆயிரம் பள்ளிகளைத் திறந்தார். ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டமான ‘‘அரைநேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழில் செய்ய வேண்டும்’’ என்ற குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடி தந்தை பெரியார் வெற்றி பெறவில்லையா? ராஜாஜி பதவி விலகவில்லையா?
ஆட்சிப் பொறுப்புக்கு வந்த முதலமைச்சர் காமராசர் முதற்கட்டமாக என்ன செய்தார்? ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். ஆச்சாரியார் இழுத்து மூடிய 6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார். புதிதாக 12 ஆயிரம் பள்ளிகளையும் திறந்தார். மதிய உணவை அறிமுகப்படுத்தினார்.
இலவச உடை இலவச புத்தகங்கள் என்று கல்வியில் அடித்தட்டு மக்களை மேலே ஏற்ற மகத்தான கல்விப் புரட்சியில் ஈடுபட்டார். தந்தை பெரியார் கல்விக்கண் திறந்த காமராசர் என்று பாராட்டவில்லையா? குழந்தைகளுக்கு காமராசர் என்று பெயர் சூட்டவில்லையா? அந்த காமராசர் எங்கே? ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற பெயரில் மீண்டும் குலக்கல்வித் திட்டத்தை புதிய வடிவில் கொண்டு வரும் பிரதமர் மோடி எங்கே? இருவருக்கும் ஏணி வைத்தாலும் எட்ட முடியாது. சமூக நீதிப் பிரச்சினையிலும் காமராசர் தந்தை பெரியாரின் கருத்துகளையும், வழிகாட்டுதலையும் ஏற்று தீவிரமாக செயல்பட்டவர். சமூக நீதிக்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டு வருவதற்காக தந்தை பெரியார் களத்தில் நின்று போராடிய போது அதற்கு உறுதுணையாக இருந்தவர் காமராசர். ஆனால் மோடி அரசு சமூக நீதியை ஒழிப்பதற்குத் தந்திரமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை நாடே அறியும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் நன்றாகவே அறிவார்கள். ‘நீட்’ என்ற பெயரால் அடித்தட்டு மக்கள் மருத்துவ கல்லூரிக்குள் நுழையாமல் தடுப்பதற்கான சூழ்ச்சி ஒரு பக்கத்தில் செய்து கொண்டு மறுபக்கத்தில் காமராசர் புகழ் பாடுவது கடைந்தெடுத்த முரண்பாடும், ஏமாற்றும், சூழ்ச்சியும் ஆகும்.
மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு தகுதித் திறமை வேண்டாமா? என்று நீட்டின் ஆதரவாளர்கள் குழுப் பாட்டு பாடுகிறார்கள். இந்த தகுதித் தேர்வு பற்றி காமராசரின் கருத்து என்ன என்பது மோடிகளுக்குத் தெரியுமா? பார்ப்பனர்கள் நன்றாக அறிவார்கள். அதனால் தான் காமராசரை ‘கதர் சட்டைக்குள் கருப்புச் சட்டை’ என்று பார்ப்பன ஏடுகள் கேலிச்சித்திரங்கள் வரைந்தன – தகுதித் தேர்வு பற்றி காமராசர் என்ன பேசினார். ‘‘தாழ்த்தப்பட்டவரை படிக்க வைத்தேன். டாக்டர் ஆனார், ஊசி போட்டார், எந்தப் பிள்ளை செத்தது, சொல்? தாழ்த்தப்பட்டவரை என்ஜினியர் ஆக்கினேன், அவர் கட்டிய எந்தப் பாலம் இடிந்தது, சொல்? நீங்கள் கூறும் தகுதித் திறமை என்பது என்ன என்று எங்களுக்குத் தெரியும்! இதை வைத்து என்னை ஒழித்து விடலாம் என்று கருதாதீர்கள்.
என்னை அழிக்க நினைத்தால் உங்கள் அஸ்திவாரத்தையே கலைத்து விடுவேன்’’ என்று சொன்னவர் காமராசர் என்பதை மோடி போன்றவர்கள் தெரிந்து கொள்ளட்டும்!
ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டவர் காமராசர் என்று கூறும் மோடி அரசில் தான், உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் என்று கூறி பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டு வந்ததை மறுக்க முடியுமா? நாள் ஒன்றுக்கு 2,100 ரூபாய் சம்பாதிப்பவர் உயர் ஜாதியில் பிறந்தால் ஏழைகள் என்று சொல்லி அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதுதான் காமராசரைப் பின்பற்றும் தன்மையா?
ஏழைப் பங்காளர் காமராசர் எங்கே? அதானி, அத்வானிகளைத் தோளில் சுமக்கும் மோடி ஜி எங்கே? வரலாற்றை மறைக்க வேண்டாம், மக்கள் விழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் நடந்து முடிந்த தேர்தலிலும் சரியான பாடத்தையும் கற்பிக்கத்தான் செய்தார்கள். பாஜக ஆட்சி என்பது பச்சையான பார்ப்பன மேலாண்மை ஆட்சியே அதற்கு எதிரானது தான் காமராசரின் சிந்தனையும், ஆட்சியும் என்பது தான் வரலாறு!