தமிழ்நாட்டிலிருந்து அமைச்சர்கள் – முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
பேராசிரியர் ப.சுப்பிரமணியம்
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை.
கடந்த 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பேரவைக்கு 2,600–க்கும் மேற்பட்ட தமிழர்கள் (இந்த ஆண்டு குறைவு – கடந்த ஆண்டுகளில் 5000–த்திற்கும் மேற்பட்டோர்) குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டிலிருந்து அமைச்சர்கள் –
முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
தமிழ்நாட்டிலிருந்து தமிழ்நாடு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, வெளிநாடுவாழ் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி, பாவலர் அறிவுமதி, தமிழ் கேள்வி செந்தில்வேல், முனைவர் ஜெயரஞ்சன், பாலச்சந்திரன் அய்.ஏ.எஸ்., பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்., எழுத்தாளர் வெண்ணிலா, சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், தமிழ் சொற்பெருக்காளர் கலியமூர்த்தி அய்.பி.எஸ். உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், பறை இசைக் கலைஞர்கள், நடனக் கலை ஞர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் என பல நூறு பேர் கலந்துகொண்டனர். பேரவை நடைபெற்ற பகுதி முழுவதும் தமிழ் பேச்சுதான். இது அமெரிக்காவா அல்லது தமிழ்நாடா என வியக்கும் வண்ணம் இருந்தது.
மருத்துவர் இளங்கோவன் அவர்களின்
அழைப்பின் பேரில்!
“டாலஸ்”சில் இருந்து நான், மருத்துவர் இளங்கோவன் அவர்களின் அழைப்பின் பேரில், பேரவைக்குச் சென்றிருந்தேன். பேரவை நடைபெற்ற சான் ஆன்டானியோவிற்கு என்னை திருநெல்வேலியைச் சார்ந்த மறைமலை அவர்களும், அவரது வாழ்விணையரும் அவர்களது காரில் அழைத்துச் சென்றனர். 7 மணி நேர பயணம். பயணத்தில் மறைமலை தென் இந்திய நல உரிமை சங்கத்தின் செயல்பாடுகளில் அவரது முன்னோர்களின் பங்கு பற்றி கூறிக் கொண்டு வந்தார்கள்.
பல லட்சம் சதுர அடிகளும், மூன்று அடுக்கு தளங்களையும் கொண்ட மிகப்பெரிய கட்டடத்தில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. 5000 பேர் அமரக்கூடிய ஒரு பெரிய அரங்கம், 200 பேர் அமரக்கூடிய 20–க்கும் மேற்பட்ட துணை அரங்குகள், 100 பேர் அமரக்கூடிய 10–க்கும் மேற்பட்ட சிறிய அரங்குகள் 10,000 ச.அடிகளுக்கும் மேல் உள்ள கண்காட்சி அரங்கம் என குளிரூட்டப்பட்ட பல்வேறு அரங்குகள் கொண்ட கட்டடத்தில் தமிழ்ச் சங்கப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
மருத்துவர் சோம.இளங்கோவன் –
சரோஜா இளங்கோவன்
தனது 78 வயதில் 54 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்து வருபவரும், பெரியாரின் தொண்டரும், தமிழர் தலைவர் ஆசிரியரின் உடல் நலம் பேணும் மருத்துவரும், “பெரியாரை பேசாத நாட்கள் பிறவாத நாட்களே” என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவரும், அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பெரியார் பற்றாளர்களை உருவாக்கியவரும், அமெரிக்கா செல்கின்ற தமிழர்கள் பலருக்கு அடைக்கலம் கொடுப்பவரும், தன்னுடைய நகைச்சுவை பேச்சால் அமெரிக்கத் தமிழர்களின் அன்புக்கு பாத்திரமானவரும் என பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தக்காரருமான மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களும், அவர்களின் வாழ்விணையர் சரோஜா இளங்கோவன் அவர்களும் இணைந்து பெரியாரின் கொள்கைகளை உலகெங்கும் எடுத்துச் செல்கின்ற பாங்கு பாராட்டுக்குரியது.
“பெரியார் புத்தக நிலையம்”
பேரவைக் கூட்டக் கட்டடத்திற்குள் நுழைந்தவுடன் அனைவரின் பார்வையும் படுகின்ற இடம் “பெரியார் புத்தக நிலையம்.”
தன்னுடைய 78 வயதிலும் 100க்கணக்கான பெரியார் புத்தகங்களை பெரிய பெட்டியில் கொண்டு வந்து கடை விரிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களின் எளிமையும், பெரியார் பற்றும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நானும் புத்தகக் கடையின் விற்பனையாளராக அமர்ந்திருந்தேன். வருகின்றவர்களுக்கு புத்தகங்களைப் பற்றி விளக்கம் சொன்னோம். சிலருக்கு சில புத்தகங்களை நன்கொடையாகக் கொடுத்தார். எவ்வளவு என கேட்டவர்களுக்கு “விலை இல்லாத புத்தகங்கள்” நீங்கள் எது வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று கூறி புத்தகங்களை கொடுத்தோம். புத்தகங்களின் உள்ளடக்கங்களைக் கூற பலரும் வியந்தனர். எடுத்துக்காட்டாக, “இனி வரும் உலகம்”, “பெண் ஏன் அடிமையானாள்?”, “கோயில்கள் தோன்றியது எப்படி?”, “பெரியாரின் பொன்மொழிகள்” போன்ற புத்தகங்கள்.
ஆசிரியர் அவர்களின் உடல் நலன்குறித்து
கேட்டறிந்தனர்!
மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் முதிய வயதிலும், முதிர்ந்த அறிவோடு அமெரிக்காவில் பெரியாரின் கொள்கைகளை கொண்டு செல்ல புத்தகக் கடை வைத்து புத்தகங்களை விற்ற பாங்கு, எல்லோரிடமும் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை நகைச்சுவையோடு பேசி அவர்களை பகுத்தறிவின் பக்கம் கொண்டு வந்தது எனக்கு வியப்பையும், மகிழ்வையும் தந்தது.
அங்கு வந்த பலர், ஆசிரியர் அவர்களின் உடல் நலன்குறித்து கேட்டு, ஆசிரியர் அவர்களின் உழைப்பைப் பற்றியும் கூறினார்கள். ‘‘அவர்தான் எனக்கு திருமணம் நடத்தி வைத்தார்’’ என்று கூறி, பலர் மகிழ்ந்தனர்.
அவர்களில் சிலர் தஞ்சை மாவட்டம் – மறைந்த பெரியார் பெருந்தொண்டர் மாயவரம் கோபால் அவர்களின் அண்ணன் மகன் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். (அய்யா கரம்பக்குடி முத்துவை கேட்டவுடன் மகிழ்ந்தார்).
திருச்சி, திருவரங்கத்தைச் சேர்ந்த தோழர், காரைக்குடியைச் சேர்ந்த தோழர்கள், மதுரையைச் சேர்ந்த தோழர் என பலரும் ஆசிரியர் பற்றி நலம் விசாரித்தனர். பலர் நமது புத்தகக் கடையின் முன்பு நின்று நிழற்படம் எடுத்துக் கொண்டனர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞரின்
நூற்றாண்டு பிறந்த நாள் விழா!
ஜூலை 5 ஆம் தேதி துணை அரங்கில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதில் பல்வேறு அறிஞர்கள், முத்தமிழிறஞர் கலைஞரை பாராட்டி, அவரது வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகளைப் படம் பிடித்துக்காட்டினர். அதில், கார்த்திகேய சிவசேனாதிபதி அவர்களின் உரை அனைவரையும் கவர்ந்தது. அவர் தனது உரையில், ‘‘பெரியார் அவர்கள் சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தையாரோடு வண்டியிலே சென்ற பாங்கையும், வழக்குரைஞரிடம் காட்டிய பணிவையும், அதுதான் பிற்காலத்தில் பெரியாரை சுயமரியாதைக்காரராக மாற்றியதையும்’’ எளிமையாகவும், விரிவாகவும் எடுத்துச் சொன்னார்.
குமரியில் வள்ளுவருக்கு வானளாவிய சிலை வைத்ததையும், சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கியதையும் பலரும் பாராட்டினர். வெளிநாடுகளில் கலைஞரின் தொண்டை புரிந்து கொண்ட அளவிற்கு தமிழ்நாட்டில் சிலர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது.
‘‘சுயமரியாதை நூற்றாண்டுகள்’’
ஜூலை 6 ஆம் தேதி துணை அரங்கு ஒன்றில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக ‘‘சுயமரியாதை நூற்றாண்டுகள்’’ என்ற தலைப்பில் இணை அமர்வு ஒன்று நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக மருத்தவர் சோம.இளங்கோவன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
“சுயமரியாதைச் சுடரொளிகள்”
பின்பு மதுரையைச் சேர்ந்த ஜெயாமாறன் “சுயமரியாதைச் சுடரொளிகள்” என்ற தலைப்பில் மிக அருமையாக அக்காலத்தில் இருந்த அடக்குமுறைகள் பற்றியும், இரட்டைமலை சீனிவாசன் முதல் பெரியார் வரை மிக அருமையாக ஒளிப்படம் காட்டி உணர்ச்சிப் பெருக்கோடு உரையாற்றியது அனைவரது கண்களிலும் நீரை வரவைத்தது. அவரை மருத்துவர் சோம.இளங்கோவன் பெரியாரின் குரலிலேயே பாராட்டிப் பேசி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அடுத்து Happy Birthday என ஆங்கிலத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்குப் பதிலாக தமிழில் “நீண்ட நீண்ட காலம் நீடுவாழ வேண்டும்…” எனத் தொடங்கும் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை தந்த கவிஞர் அறிவுமதி, ‘‘அவரது ஊரின் பெயரைச் சொல்லி “உத்தமதானபுரம்” எப்படி பார்ப்பனர்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட ஊர் என்பதையும், சுயமரியாதைச் சுடரொளிகள் எப்படி எங்களை மாற்றினார்கள்’’ எனவும் விளக்கினார்.
அனைத்தும் மக்களுக்காக,
மக்களின் சுயமரியாதை உணர்வு ஓங்குவதற்காக…
சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள், ‘‘தந்தை பெரியார் அவர்கள், காந்தியாரை எதிர்த்தார். அவர் மறைவிற்குப் பிறகு ‘காந்தி தேசம்’ என இந்தியாவிற்குப் பெயர் வைக்கச் சொன்னார். அம்பேத்கர் எழுதிய சட்டத்தை எரித்தார். அம்பேத்கரைப் பாராட்டினார்’’ என்று கூறிய அவர், இது போன்று பல முரண்பாடுகளைக் கூறி இவை அனைத்தும் மக்களுக்காக, மக்களின் சுயமரியாதை உணர்வு ஓங்குவதற்காக என கூறினார்.
தமிழ் கேள்வி செந்தில்வேல் “தமிழ்நாட்டில் ஜாதிப் பெருமை பேசுவது, ஆண்ட பரம்பரை என பேசுவது தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதனை முறியடிப்பதற்கு சுயமரியாதை – 100 நிகழ்வுகள் தேவை” என்றார்.
“ஜாதி மறுப்பு ஆண்டாக
ஓர் ஆண்டை அறிவிக்க வேண்டும்!”
அடுத்து மரியாதைக்குரிய இலக்குவன்தமிழ், தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். அதாவது “ஜாதி மறுப்பு ஆண்டாக ஓர் ஆண்டை அறிவிக்க வேண்டும்” என்றார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உயர் பதவியில் பணி புரியும், ஆசிரியர் தலைமையில் வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்திக் கொண்டவர், செசில் சுந்தர், “பாடத்திட்டத்தில் (curriculum) அதிக அளவில் பெரியாரின் கொள்கைகள், பெரியாரின் போராட்டங்கள் இடம் பெற வேண்டும்” என்றார். ‘‘செயற்கை நுண்ணறிவை (Artificial Inteligence) அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். பெரியாரின் பேச்சுகளை எனக்கு கொடுத்தால், நான் செயற்கை நுண்ணறிவால் அவற்றை பெரியார் பேசுவது போல் ஒலி, ஒளிப்படமாக மாற்றித் தருகிறேன்” என்றார்.
எழுத்தாளர் சகோதரி வெண்ணிலா, ‘‘எவ்வாறு கதைகள் வரலாறு ஆக்கப்படுகின்றன’’ என்பதை விளக்கினார். எடுத்துக்காட்டாக வேலு நாச்சியாரின் வரலாற்றில் குயிலி என்ற கதாபாத்திரம் எப்படி வந்தது என்பது போன்ற எடுத்துக்காட்டைக் கூறி பேசினார்.
எதிர்கால இந்தியா எப்படி இருக்கும்?
பெரியார் உலகமாக இருந்தால் நன்றாக இருக்கும்!
முனைவர் ஜெயரஞ்சன், பாலச்சந்தர் அய்.ஏ.எஸ். ஆகியோரிடம் பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பான பதில் கூறினார்கள். எதிர்கால இந்தியா எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பெரியார் உலகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றார். அம்பேத்கருக்கு இல்லாத சிறப்பு, பெரியாருக்கும், வி.பி.சிங்க்கும் உண்டு! எப்படி? என்பதை விளக்கினார். பல்வேறு கேள்வி, பதிலுக்குப் பின்பு இணை அமர்வு இனிதே நிறைவு பெற்றது.
இரவு 11 மணி வரை நிகழ்ச்சிகள்!
ஒவ்வொரு நாள் இரவும், இசைக் கச்சேரிகள், பறையாட்டம், நடனங்கள் என இரவு 11 மணி வரை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.
பெரியாரை உலகெங்கும் எடுத்துச் செல்லும் ஆசிரியர் அவர்களின் அயராத பணிகளில் உற்ற துணையாக இருப்பவர்களுள் முனைவர் இலக்குவன் தமிழ் அவர்களும், அவரது இணையரும் ஆவர். என்னை அவர்கள்தான் தங்களது காரிலே அழைத்து வந்து டாலசில் விட்டனர். இலக்குவன் தமிழ் அவர்களின் வாழ்விணையர் கடுமையான மழையிலும், வெயிலிலும் 8 மணி நேரம் வாகனத்தை இயக்கிய விதம் மிகவும் பாராட்டுக்குரியது. அவ்விருவரின் அன்பான, கனிவான, செறிவான உரையாடலோடு வீடு வந்து சேர்ந்தோம்.