‘நீட்’ தேர்வை விலக்கக்கோரி தமிழ்நாடு சட்ட மன்றம் இருமுறை நிறைவேற்றி அனுப்பிய சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கிறது பாஜக ஒன்றிய அரசு. இதனால் பணம் உள்ளவர்கள், பல ஆண்டுகள் பயிற்சி மய்யத்தில் படித்து தேர்ச்சி பெறுபவர் கள் மட்டுமே மருத்துவக் கல்வியைப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறுக்கு வழியில் பயிற்சி மய்யங்கள், பல வகையிலும் செல்வாக்குள்ள நபர்கள் மூலம் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட் டம் போன்றவை மூலம் பயன்பெறுவது அரங்கேறுகிறது. அதுமட்டுமின்றி, தேர்வு முகமையே ,1563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கி முழு மதிப்பெண்கள் பெறக் காரணமாகவும் இருந்திருக்கிறது. இந்த வலைப் பின்னல், தேர்வு எழுதிய 23 லட்சம் மாண வர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளது.
இதற்கு எதிராக நீதிமன்றம் சென்ற பின் முதலில் மறுத்த ஒன்றிய அரசும் தேசிய தேர்வு முகமையும் சில கண் துடைப்பு நடவடிக்கைகளை எடுத்து- தங்களை நியாயவாதிகள் போல் காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றன. அதுமட்டு மின்றி, ஒரு சில மாணவர்கள் தூண்டிவிடப்பட்டு நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது என்றும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தேசிய தேர்வு முகமையின் நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்தது. அத்துடன் வினாத்தாள் கசிந்தது தெளிவாகத் தெரிகிறது என்றும், இது சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவியிருக்கும் என்றும், இதனால் பலனடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டிருப்பது மிக முக்கியமானது. அது மட்டுமின்றி தேர்வு முகமையின் நடைமுறைகள் குறித்தும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்தும் முகமையும், ஒன்றிய அரசும் தனித்தனியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டு மெனக் கூறி ஜூலை 11ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறுவது சகஜமாகிவிட்டது. சமீபத்திய அதன் அறிவிப்பு, தேவைப்பட்டால் கியூட் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்கிறது. ஒரு வகையில் பிளஸ்-2 மதிப்பெண்கள் கல்லூரிக் கல்விக்கும் மருத்துவக் கல்விக்கும் தேவையில்லை என்று மறுதலிப்பது அறிவுப்பூர்வமானதல்ல; சாதாரண ஏழை எளியவர்களுக்கு கல்வியை மறுக்கும் நடவடிக்கையே இத்தகைய தேர்வுகள். எனவே இந்த ஆண்டின் நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமல்ல, நிரந்தரமாகவே நீட் தேர்வை ரத்து செய்வதுதான் எதிர்காலத் தலைமுறைக்கு நியாயம் வழங்குவதாகும். அதுமட்டுமின்றி, தேசிய தேர்வு முகமையையும் கலைத்திடுவதே ஆரோக்கியமான கல்விக்கு உத்தரவாதமாகும்.
நன்றி: ‘தீக்கதிர்’, தலையங்கம் – 9.7.2024