மதுரை, ஜூலை 9- மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடலில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி கூறும் பொதுக்கூட்டம் 5-7-2024 அன்று மிகச்சிறப்பாக திராவிடர் கழகத்தின் சார்பாக நடைபெற்றது.
பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதி யில் திராவிட முன்னேற்றக்கழகப் பொறுப்பாளர்கள், குறிப்பாக திமுக இளைஞரணி தோழர் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழிகாட்டுதலின் உண்மையை உணர்ந்து செயலாற்றும இரகுவரன், திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பொறுப்பாளர் சேது ஆகியோர் பெரிதும் துணை புரிந்தனர். அதுபோலவே இக்கூட்டம் சிறக்க திமுக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் பெரிதும் துணை நின்றனர்.
கூட்டத்திற்கு தலைமை ஏற்ற, கழக தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் கூட்டத்தின் நோக்கம் பற்றியும், இந்தத் தேர்தல் வெற்றியில், திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெரும் பங்களிப்பையும் குறிப்பிட்டுப் பேசினார். ஒவ்வொரு பேச்சாளரும் பேசுவதற்கு முன் அவர்களைப் பற்றி அறிமுகம் செய்தும் உரையாற்றினர். அனைவரையும் வரவேற்று மதுரை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் இரா.லீ.சுரேசு உரையாற்றினார்.
பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் உருவப்படத்தை திராவிட முன்னேற்றக்கழகத்தின் மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து வீரவணக்க முழக்கங்களை வே.செல்வம் எழுப்ப, அனைவரும் வீர வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து வி.சி.க.வின் தோழர் மாலின், தோழர் ஷேக் இப்ராகீம், தி.இ.த. பேரவைத் துணைப் பொதுச்செயலாளர் இராம.வைர முத்து, சி.பி.எம். தலைமைக்குழு உறுப்பினர் தோழர் விஜயராசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு ஆகியோர் உரையாற்றினர்.
தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேனாள் அமைச்சர், எந்நாளும் மானமிகுவாளர் என்று ஆசிரியர் அவர்களால் அழைக்கப்படும் பொன்.முத்துராமலிங்கம் ‘திராவிட மாடல்’ ஆட்சி பற்றியும், தேர்தலில் நாம் 40/40 வெற்றி பெற்றாலும் வட இந்தியாவில் மாற்றம் ஏற்படாததால், மோடி மீண்டும் பிரதமராகி இருக்கிறார். ஆனால், நாம் விழிப்பாக இருப்போம் என்று குறிப்பிட்டு, நூற்றாண்டு காணும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றிய அருமையான செய்திகள் பலவற்றைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.
தொடர்ந்து திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதினி சிறப்புரையாற்றினார். நான் வரும் நேரமெல்லாம் மதுரையில் மழை பெய்கிறது என்று ஆரம்பித்த அவர் நாட்டு நடப்புகளைப் பல்வேறு கோணங்களில் மக்களுக்கு எடுத்துரைத்தார். ‘திராவிட மாடல்’ ஆட்சி யின் சிறப்புகளைக் குறிப்பிட்ட அவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களைக் குறிப்பிட்டு உரையாற்றினார். இந்தியாவிலேயே பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தை இயற்றிவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், அதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார்,அவர் 1929 செங்கல்பட்டு மாநாட்டில் போட்ட தீர்மானம்தான் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்பதையும்,1952 இல் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இச்சட்டத்தினை நிறைவேற்ற முயன்றும் முடியாததால் பதவி விலகினார்.
ஆனால் முத்தமிழறிஞர் கலைஞர்தான் முதன்முதலில் இந்தியாவில் பெண்களுக்கு சொத்துரிமைச்சட்டத்தை நிறைவேற்றினார் என்றார். அதனைப்போல் தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தீர்மானங்களை எல்லாம் எப்படி சட்டமாக்கினார் முத்தமிழறிஞர் கலைஞர் என்று மக்களிடத்தில் மிக எளிமையாக நடைமுறை எடுத்துக்காட்டுகளோடு விளக்கி உரையாற்றினார்.இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி எப்படி எல்லாம் சிறப்பாக நடைபெறுகிறது என்பதையும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறை அனுபவங்களை மக்களொடு பகிர்ந்து கொண்டார்.எப்படிப்பட்ட சாதனைகளை திராவிட இயக்கம் செய்து கொண்டிருக்கிறது என்பதையும், திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அய ராத உழைப்பையும், இந்த ஆட்சிக்குத் துணையாக இருப்பதையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் அழைப்பினை ஏற்று மா.கணேசன்(சிபிஎம்), ரவிக்குமார் (விசிக) மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். திராவி டர் கழகப் பொறுப்பாளர்கள் காப்பா ளர் சே.முனியசாமி, மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், ம.தி.மு.க. பொறுப்பாளர் மகபூப்ஜான் மற்றும் பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சே.மெ.மதிவதனிக்கு பொன்னாடைகள்,புத்தகங்கள்,மற்றும் சிறப்பான வரவேற்பை அனைத்து கட்சித் தோழர்களும் வழங்கினர்.நிறைவாக இளைஞரணி பொறுப்பாளர் விராட்டிபத்து சிவா நன்றி கூறினார்.திமுக இளைஞரணிப் பொறுப்பாளர் ஜெ.ரகுவரன் அவரது பகுதியில் கூட்ட ஏற்பாடுகளைச் செய்வ தற்கு பெரிதும் துணை நின்றார்.