காலனி ஆதிக்கத்தை விட ஒன்றிய பா.ஜ.க. அரசு மோசமாக திகழுகிறது மூன்று குற்றவியல் சட்டங்களை சட்ட ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்!

viduthalai
2 Min Read

தி.மு.க. சட்டத்துறை சார்பில் நடைபெற்ற பட்டினி அறப்போராட்டத்தில் ப.சிதம்பரம் எம்.பி. பேச்சு!

சென்னை, ஜூலை 8- காலனி ஆதிக்கத்தைவிட ஒன்றிய பா.ஜ.க. அரசு மோசமாக செயல்படுகிறது என்றும் 3 குற்றவியல் சட்டங் களை நிறுத்தி வைத்து, சட்ட ஆணை யத்திற்கு ஒன்றிய அரசு அனுப்பிட வேண்டும். என்றும் தி.மு.க. வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் புதிய குற்ற வியல் சட்டங்களை கண்டித்து நடைபெற்ற பட்டினி அறப்போராட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில் குறிப்பிட்டார்.

இந்திய குற்றவியல் சட் டம் (அய்பிசி), இந்திய குற் றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் (அய்இசி) சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய சாக்ஷியா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வழக்குரைஞர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த வகையில், திமுக வழக்குரைஞர் அணி சார்பாக சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் மைதானம் அருகே பட்டினி அறப்போராட்டம் (6.7.2024) நடைபெற்றது. இதில் தி.மு.கழக பொதுச்செயலாளர் – அமைச்சர் துரைமுருகன் மற்றும் தி.மு.கழக வழக்குரைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், பட்டினி அறப்போ ராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் பேசியதாவது, “சில விடயங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த சட்டம் எதற்கு? 95 சதவீதம் பழைய பிரிவுகள், பழைய வாசகங்கள், பழைய சொற்கள் அப்படியே புதிய சட்டத்தில் காப்பி அடித்துள்ளனர். இதை அரசு மழுப்புகிறதே தவிர, விவாதத்திற்கு தயாராக இல்லை. 513 பிரிவுகளில் 453 பிரிவுகளை ஏன் மாற்ற வேண்டும்?

என்ன காலனி ஆதிக்கத்தை நீங்கள் எதிர்க்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். மேலும், புதிதாக ஒரு பிரிவை சேர்க்க வேண்டும் என்றால் புதிதாக சேர்த்திருக்கலாம். அனைத்து சட்டங்களிலும் எண்களை மாற்றியுள்ளனர். வழக்குரைஞர்கள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் என அனைவரும் மீண்டும் இதனை புதிதாக நினைவு வைக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பல நீதிமன்றங்களில் இது புதிய குழப்பத்தை ஏற்படுத்தும். சட்டக் குழுவை ஆராயாமல் புறக்கணித்து இந்தச் சட்டத்தை நிறைவேற்ற என்ன காரணம்? சட்டக் குழுவிற்கு இதை பரிந்துரைக்காதது, ஆலோசனையை கேட்காதது மிகப்பெரிய தவறு.

மரண தண்டனை தேவை இல்லை. ஆயுள் முழுவதும் தண்டனை என திருத்தியுள்ளனர். இந்த சட்டங்களை நிறுத்தி வைத்து, சட்டக்குழுவிற்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், காலனி ஆதிக்கத்தை விட மோசமான அரசாக பாஜக அரசு உள்ளது என குற்றம் சாட்டினார்.

3 புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் வேண்டும் என்று ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையிலும் முடிவெடுக்கப்பட்டால், ஒன்றிய அரசு ஒப்புதல் தர வேண்டும், ஆனால் ஒப்புதல் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், அந்த சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *