சென்னை, ஜூலை 8 சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் தவறாமை 2022-2023 ஆண்டுகளில் 92 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக குறைந்துள்ளது. சென்னை கோட்டத்தில் நாள்தோறும் சுமார் 300 மெயில் மற்றும் விரைவு ரயில்களும், 170 பயணிகள் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான ரயில்கள் சென்ட்ரல் மற்றும் எழும்பூரிலிருந்து இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் சேகரித்த தரவுகளின்படி, மெயில் மற்றும் விரைவு ரயில்களின் நேரம் தவறாமை 2022 – ஜூலையில் 92.67 சதவீதமாக இருந்த நிலையில், 2023- ஜூலையில் 79.58 சதவீதமாக சரிந்துள்ளது. மேலும், 2022 ஆகஸ்டில் 96.15 சதவீதத்திலிருந்து 2023- ஆகஸ்டில் 88.49-ஆக குறைந்துள்ளது. அதேபோல், 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2023 ஆகஸ்ட், டிசம்பா் மற்றும் பிப்ரவரி மாதங்களில் பயணிகள் ரயில்களின் நேரம் தவறாமை சுமார் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இந்த நிலையில், ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனா். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: 2023-2024-ஆம் நிதியாண்டில் சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருவதால், ரயில்கள் தாமத மாக இயக்கப்படுகின்றன. அதேபோல், குண்டூா், ரேணிகுண்டா ஆகிய ரயில்நிலையங்களிலும் இதுபோன்ற மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதும், சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாவதற்கு முக்கிய காரணம். இந்த நிலையில், சென்னை கோட்டத்தில் ரயில்கள் இயக்கப்படும் நேரங்களைத் தொடா்ந்து கண்காணிப்பதுடன், இனி வரும் காலங்களில் ரயில்கள் தாமதமாவதைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.
தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளில் அடிக்கடி சிக்கி ஊடகங்களில் இடம் பெறும் முக்கிய நிறுவனங்களில் தென்னக ரயில்வே முதலிடம் பெற்றுள்ள நிலையில் நேரம் தவறாமையில் அனைத்து கோட்டத்தையும் விட தென்னக ரயில்வே முதலிடம் பிடித்திருந்தது. தற்போது அந்தப் பட்டியலிலும் இருந்து நீங்கி வடக்கு ரயில்வேக்களோடு இதுவும் இணைந்துள்ளது.