சேலம், ஜூலை 7- சேலம் மாவட்டத் தில் 108 நீர்நிலைகள் வண்டல் மண், களிமண் எடுக்க தகுதி வாய்ந்தவையாக கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
ஏரி, நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய் போன்ற நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல், களிமண், மண் போன்றவற்றை அகற்றி விவ சாய நிலங்களை மேம்படுத்தவும், மண்பாண்டத் தொழிலுக்கு பயன்படுத் திக் கொள்ளவும் இலவசமாக அனுமதி வழங்க ஏதுவாக தமிழ்நாடு அரசு அர சாணை வெளியிட்டுள்ளது. மேலும், வண்டல், களிமண், மண் போன்றவற்றை வெட்டியெடுத்து செல்வது தொடர்பாக நிலையான இயக்க முறைகள் தெரிவிக்கப் பட்டுள்ளன.
அரசாணைகளில் தெரிவித்துள்ளபடி, விவசாய பயன்பாட்டுக்கு வண்டல், களிமண் போன்றவற்றை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றுக்கு நன்செய் நிலமெனில் 75 கன மீட்டா், அதாவது 25 டிராக்டர் லோடுகள், புன்செய் நிலமெனில் 90 கன மீட்டா் அதாவது 30 டிராக்டர் லோடுகள் என்ற கணக்கீட்டின் படியும், மண்பாண்டத் தொழிலுக்கு நபர் ஒன்றுக்கு 60 கன மீட்டா் அதாவது 20 டிராக்டர் லோடுகள் வீதம் இலவசமாக வெட்டியெடுத்துச் செல்ல 30 நாள்களுக்கு மிகாமல் நிபந்தனைகளுக்குள்பட்டு அனுமதி வழங்கப்படும்.
விவசாய பயன்பாடு, மண்பாண்டத் தொழிலுக்கு வண்டல், களிமண் போன்ற வற்றை இலவசமாக வெட்டியெடுத்துச் செல்ல விரும்புவோா் அருகிலுள்ள இ-சேவை மய்யங்களில் தொடா்புடைய ஆவணங்களுடன் இணையதள வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதள வழியில் பெறப்படும் விண்ணப்பங்களை தொடர்புடைய வட்டாட்சியரால் பரிசீலிக்கப்பட்டு, அதில் விவசாய பயன்பாட்டுக்கென வரப் பெற்ற விண்ணப்பமெனில், விண்ணப்ப தாரரால் சமா்ப்பிக்கப்பட்ட தகவல்கள் வருவாய்த் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இணையதள தரவுகள் மூலம் சரி பார்க்கப்படும்.
மண்பாண்டத் தொழிலாளர்களிடமி ருந்து களிமண் வேண்டி வரப்பெற்ற விண்ணப்பமெனில், விண்ணப்பதாரரின் வசிப்பிடம், மண்பாண்டத் தொழில் குறித்த மெய்த்தன்மை போன்றவற்றை சரிபார்த்து சான்றளிக்க கிராம நிருவாக அலுவலருக்கு மாறுதல் செய்யப்படும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கிராம நிருவாக அலுவலா் 7 நாட்களுக்குள் சரிபாா்த்து அனுமதி அளித்தல் தொடா்பாக வட்டாட்சியருக்கு பரிந்துரைப்பார்.
விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் அளித்த விவரங்கள் திருப்திகரமாக இருப்பின் விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து 10 நாள்களுக்குள் சம்பந்தப் பட்ட ஏரி, நீா்த்தேக்கத்திலிருந்து வண்டல், களிமண், சாதாரண மண் போன்றவற்றை இலவசமாக அகற்ற வட்டாட்சியரால் அனுமதி வழங்கப்படும். வட்டாட்சியரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை கிடைத்தவுடன் பயனாளிகள் சம்பந்தப்பட்ட ஏரி, நீா்த்தேக்கத்தின் பொறுப்பு அலுவலரை அணுகி, அவரால் குறியீடு செய்து காட்டப்படும் பகுதியில் மட்டும் குறிப்பிட்ட ஆழத்துக்கு மிகாமல் அனுமதிக்கப்பட்ட அளவு வண்டல், களிமண், சாதாரண மண் சொந்த செல வில் அகற்றி எடுத்துச் செல்ல வேண்டும்.
எனவே, இந்த அரிய வாய்ப்பினை விவசாய பெருமக்கள், மண்பாண்டத் தொழிலாளா்கள் பயன்படுத்தி தங்களது விவசாய நிலங்களை மேம்படுத்திக் கொள்ளவும், தங்களது தொழிலை தங்கு தடையின்றி சிறப்புறுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.