சென்னை, ஜூலை 5- மகாராட்டிர மாநிலம் புனேவில் 2 கர்ப்பிணிகள் உட்பட 7 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெங்கு, சிக்குன் குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் மூலமாகவே ஜிகா வைரஸ் பரவி வருகிறது.இந்நிலையில் ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மகாராட்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் துறை இயக்குநர் அதுல் கோயல் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை அதில் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜிகா வைரஸ் கர்ப்பிணியை பாதித்தால், வயிற்றில் இருக்கும் சிசுவும் பாதிக்கப்படும் என்பதால் மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அல்லது அதற்கு அருகில் உள்ள இடங்களில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி, கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸுக்கான பரிசோதனை செய்ய வேண்டும், இதில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருக்கும் பெண்களுக்கு கரு வளர்ச்சியை கண்காணிக்கவும் ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் ஏடிஸ் கொசுக்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, இதற்கென தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஒன்றிய அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிக கடன் சுமையில் இந்தியா
ஒன்றிய, மாநில அரசுகளின் கடன் மட்டும் 82 சதவீதம்!
புதுடில்லி, ஜூலை 5- இந்தியா அதிக கடன் சுமையை எதிர்கொள்கிறது என்று என்சிஏஇஆர் (NCAER) இயக்குநர் ஜெனரல் பூனம் குப்தா கூறியுள்ளார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒன்றிய, மாநில அரசுகளின் கடன் 82 சதவீதமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும், பெரும்பாலான கடன்கள் ரூபாய், உள்ளூர் நாணயம் மற்றும் நாட்டின் வளர்ச்சி விகிதம் அந்நிறுவனம் இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை என்று கூறுகிறார். NCAER ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய குப்தா, மொத்தக் கடனில் மூன்றில் ஒரு பங்கு அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் கடன் சுமை மேலும் அதிகரிக்கலாம் என்றார். ஆனால், ஒன்றிய அரசின் உத்தரவாதத்தால், மாநிலங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். 2022-2023 நிலவரப்படி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை அதிகக் கடன்பட்டுள்ள முதல் மூன்று மாநிலங்களாக உள்ளன, அதே சமயம் ஒடிசா, மகாராட்டிரா மற்றும் குஜராத் ஆகியவை கடன்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இருக்கை” அமைய உதவிய
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி
சென்னை, ஜூலை 5– தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை (3.7.2024) ஹூஸ்டன் டெக்சாஸ் பியர்லேன்ட் மேயர் கெவின் கோல் அவர்களும், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் Asia Studies Dean முனைவர் ஓ.கானர் அவர்களும் சந்தித்து “தமிழ் இருக்கை” அமைய உதவிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.