மக்கள் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஆரியர் – திராவிடர் பிரச்சினை இப்பொழுது நாடாளுமன்றத்திலும் புயலாக வீச ஆரம்பித்து விட்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நடப்புத் தொடரிலும் இதனைப் பேசினார் – பேச வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.
ஏதோ இப்பொழுது தான் இவர் பேசினார் என்று கூற முடியாது 27.11.2015இல் அன்றே பேசினார்.
இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாள் மற்றும் இந்த சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த நாள் போன்றவற்றைக் கொண்டாடும் விதமாக மழைக்கால
கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாள்களும் விவாதத்தின் போது மக்களவையில் இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் குறித்த சிறப்பு விவாதம் துவங்கியது. மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனுக்குப் பின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது; அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட நேரத்தில் சமதர்மம் மதச்சார்பின்மை என்ற வாரத்தைகளே கிடையாது. ஆனால், 42 ஆவது திருத்தமாக அவை சேர்க்கப்பட்டன. அம்பேத்கருக்கே தோன்றாத இந்த வார்த்தைகள், அரசியல் காரணங்களுக்காகப் புகுத்தப்பட்டன. மதச்சார்பின்மை என்ற வார்த்தையே ஒழிக்கப்பட அம்பேத்கரின் சிந்தையில் உதித்தது தான் கூட்டாட்சித் தத்துவம். அதை முழுமையாகப் பின்பற்றுகிறது மோடி அரசு. சட்டமேதை அம்பேத்கர், மிகுந்த அவமானங்களை சந்தித்த போதிலும் நாட்டை விட்டு வெளியேறுவேன் என ஒரு போதும் கூறியதில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
இதற்குப் பதிலளித்த மல்லிகார்ஜுன கார்கே மதச்சார்பின்மை என்ற வார்த்தைகளை அம்பேத்கர் சேர்க்க நினைத்தார். ஆனால் அதை ஏற்கவில்லை. கடுமையாக எதிர்த்தார்கள். காரணம் நீங்கள் ஆரியர்கள், வெளியிலிருந்து இங்கே வந்தவர்கள் – நாங்கள் திராவிடர்கள் இம்மண்ணின் மைந்தர்கள். உங்களால் (ஆரியர்களால்) இம்மண்ணின் மைந்தர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். இன்றும் ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறோம். இருந்தாலும் நாங்கள்இந்த மண்ணை விடவில்லை. காரணம் இந்தத் திராவிட பூமி எங்கள் மண் ஆகும். தொடர்ந்து இங்கு தான் வசிக்கிறோம். இனியும் இங்கு தான் வசிப்போம்‘ என்றார் (27.11.2015).
ஒன்பதாண்டுகளுக்குப்பிறகு இதே கருத்தை இப்பொழுதும் (1.7.2024) பேசி இருக்கிறார்.
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை தி.மு.க. கொறடாவுமான மானமிகு ஆ.இராசா அவர்களும் இந்தக் கருத்தை முரசொலியாக அதிர வைத்தார்.
தொடங்கும்போது தந்தை பெரியார் மண்ணி லிருந்து வந்தவன் நான் என்றாரே! அதுபோதும் பிற்போக்குவாதிகளுக்கும் இன எதிரிகளுக்கும், வீடணர்களுக்குமான மூச்சை அடைக்கும் வீச்சு!
600 ஆண்டுகளுக்குமுன்பு முகலாயர்கள் அந்நியர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்றால், அதற்கு முன்பாக, கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களும் அந்நியர்கள்தானே!’’ என்ற வரலாற்று ரீதியான ‘வெடி குண்டு’வீச்சுதானே இது!
தந்தை பெரியார் இந்தியாவுக்கே தேவைப்ப டும் நிலை உருவாகி விட்டது.மதவாதம் பேசப் பேச, இந்து ராஜ்யம் பேசப் பேச, பெரியார் தானாகவே அங்கு தலை தூக்குகிறார் வெடித்துக் கிளம்புகிறார். அது தான் இப்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒலிக்கிறது – வாழ்க பெரியார்!