குற்றாலம், ஜூலை 4- குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மற்றும் சாம்பவர் வடகரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பொதுக் கூட்ட முன்னேற்பாட்டுப் பணிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.
திராவிடர் கழகம் நடத்தும் 45ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை குற்றாலத்தில் ஜூலை 4, 5, 6, 7 ஆகிய நாட்களில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
இன்று (04.07.2024) மாலை 6 மணி அளவில் தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்க விழா, குடிஅரசு நூற்றாண்டு விழா மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா முன்னேற்பாடு பணிகளை கழக பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.
02-07-2024 அன்று தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வே.ஜெயபாலன், சுரண்டை திமுக நகர செயலாளர் கணேசன், சாம்பவர் வடகரை திமுக பேரூர் செயலாளர் த.முத்து ஆகியோரை சந்தித்து சாம்பவர் வடகரையில் நடைபெறும் பொதுக் கூட்ட அழைப்பிதழை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார், தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரன், பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, வடகரை திராவிடர் கழக நகர செயலாளர் சண்முகம் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.
இன்று சாம்பவர் வடகரையில் பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தை நகரச் செயலாளர் முத்து அவர்களுடன் பார்வை யிட்டு ஏற்பாடுகள் குறித்து திட்ட மிடப்பட்டது.
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெறுகிற குற்றாலம் பேரூராட்சி திருமண மண்டபத்தை பார்வையிட்டு அதற்கு தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.