மாநிலங்களவையில் வர்ணாசிரமம் பற்றிய சர்ச்சை வெடித்துக் கிளம்பியுள்ளது 3.7.2024 நாளிட்ட ‘தினமணி’ (பக்கம் 9)யில் வெளிவந்த செய்தி வருமாறு:
‘‘வர்ணாசிரமம்’ முறையை கொண்டுவர முயல்வதாக, அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் மீது எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்வைத்த குற்றச்சாட்டால் இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது செவ்வாய்க்கிழமை (2.7.2024) விவாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் உறுப்பினர் பிரமோத் திவாரி பேசிக் கொண்டிருந்தபோது, ‘உறுதிப்படுத்தப்படாத விவரங்களைக் கூற வேண்டாம்’ என்று அவரிடம் அவைத் தலைவர் தன்கர் அறிவுறுத்தினார்.
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ‘பிரமோத் திவாரி கூறிய விவரங்களுக்கு உரிய ஆதாரங்கள் காட்டப்படும்’ என்றார்.
இதையடுத்து,ஜெய்ராம் ரமேஷை நோக்கி பேசிய தன்கர், ‘அவையில் எதிர்க்கட்சித் தலைவர் (கார்கே) இருக்கிறார். ஆனால், அவரது பணியை பெரும்பாலும் நீங்கள் தான் (ஜெய்ராம் ரமேஷ்) செய்கிறீர்கள். நீங்கள் மிகவும் புத்திசாலி, மிகவும் திறமையானவர்; எனவே, கார்கேவுக்கு பதில் அவரது இருக்கைக்கு உடனடியாக நீங்கள் வந்துவிடுங்கள்’ என்று கிண்டலாக குறிப்பிட்டார்.
தன்கரின் இந்தப் பேச்சுக்கு பதிலளித்த கார்கே, ‘ஜெய்ராம் ரமேஷை மிகவும் புத்திசாலி என்றும், என்னை மந்தமானவர் என்றும் அழைப்பதன் மூலம் அவையில் ‘வர்ணாசிரம’ முறையை கொண்டுவர முயற்சிக்க வேண்டாம். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் நாட்டு மக்களால் ‘நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்’ என்றார்.
கார்கேவின் குற்றச்சாட்டுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தன்கர், ‘எனது கருத்தை திரித்துக் கூறுகிறீர்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் மாநிலங்களவை வரலாற்றில் அவைத் தலைவருக்கு இத்தகைய அவமதிப்பை யாரும் ஏற்படுத்தியதில்லை’ என்றார்.
மாநிலங்களவையில் ஜூன் 28-ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் தொடங்கப்பட்டபோது, நீட் தேர்வு முறைகேடு குறித்து அவையில் உடனடியாக விவாதம் நடத்தக் கோரி, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அவையின் மய்யப் பகுதியை மல்லிகார்ஜுன கார்கே முற்றுகையிட்டார். ‘இது நாடாளுமன்றத்தின் மீதான கறை’ என்று தன்கர் கூறினார்.
‘அவையில் பேச வாய்ப்புக் கேட்டு நீண்ட நேரம் கையை தூக்கியபடி நின்றும் வாய்ப்பு அளிக்காததால் முற்றுகையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது’ என்று கார்கே குற்றம் சாட்டினார்.
இதேபோல், கடந்த திங்கள்கிழமை (1.7.2024) சுமார் 90 நிமிடங்கள் பேசிய கார்கேவின் உரையில், பிரதமர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சித்த கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து தன்கர் நீக்கினார்’’ என்பதுதான் தினமணியில் வெளிவந்த செய்தியாகும்.
குடியரசுத் துணைத் தலைவராக இருக்கக் கூடியவர் தான் மாநிலங்களவையின் தலைவர் ஆவார். அத்தகையவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு மூத்த உறுப்பினர்களின் பேச்சுகளை மித்திர பேதம் செய்து விமர்சிப்பது எந்த வகையில் சரி?
அவைத் தலைவரின் விமர்சனத்தைப் புரிந்துகொள்ளக் கூடிய அனுபவசாலிதான் மல்லிகார்ஜுன கார்கே! நீண்டகால அரசியலிலும் நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் நீண்டஅனுபவமும் கொண்டவர்.
மாநிலங்களவையில் எந்த கட்சியைச் சார்ந்தவர் யார் பேச வேண்டும் என்றுமுடிவு செய்பவர்கள் அவைத் தலைவர்.
குறுக்கிட்டுப் பேசுவது என்பது முன்பே திட்டமிடப்படுவதும் அல்ல. யார் பேசுகிறார்களோ, அவர்களின் பேச்சுக்கிடையே எதிர்க்கட்சியினர் குறுக்கிடுவதும் இயல்பானதே!
அப்படி இருக்கும் போது கார்கே அவர்களையும் ஜெய்ராம் ரமேைஷயும் ஒப்பிட்டு அவைத் தலைவர் வித்தியாசப்படுத்தி, யார் புத்திசாலித்தனமானவர் என்றெல்லாம் எடை போடுவது எந்த அடிப்படையில்?
பெரிய பதவியில்இருக்கும் ஒரே காரணத்தால் எதையும் பேசலாம், எப்படியும் விமர்சிக்கலாம் என்று நினைப்பதும், விமர்சிப்பதும் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல!
‘‘ஜெய்ராம் ரமேைஷ மிகவும் புத்திசாலி என்றும், என்னை மந்தமானவர்!’’ என்றும் அழைப்பதன் மூலம் அவையில் ‘வர்ணாசிரம’ முறையைக் கொண்டு வர முயற்சிக்கவேண்டாம்! என்று நறுக்கென்றும் சுருக்கென்றும் தைக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் கார்கே தன் கருத்தைவெளிப்படுத்திய விதம் அவரின் அறிவு நுட்பத்தையும் சமூக நிலையைப் புரிந்து வைத்திருக்கின்ற அனுபவத்தையும் காட்டுகிறது.
எந்தக் கோணத்தில் கார்கே பார்க்கப்படுகிறார் என்பது மிக முக்கியமானது.
மாநிலங்களவையில் காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 90 நிமிடங்கள் உரையாற்றியிருக்கிறார்.
அவ்வுரையில் பிரதமர் பற்றியும், ஆர்.எஸ்.எஸ். பற்றியும் அவர் பேசிய பகுதிகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவது எல்லாம் ஜனநாயக உயர் நெறி முறைக்கு உகந்ததுதானா?
மாற்றுக் கருத்துகளைப் பேசுவதற்கு நாடாளுமன்றத்தில் இடமில்லையா?
இன்னும் சொல்லப் போனால், எதிர்க்கட்சியினர் என்ன கருத்தைக் கூறுகின்றனர்? எந்தக் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர் என்பதை ஆளும் தரப்பினர் கவனமாக செவிமடுக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளையும், ஆலோசனை களையும் பரிசீலிக்க வேண்டும் – தேவையானவற்றைச் செயல்படுத்தவும் முன் வர வேண்டும்.
ஆனால் கடந்த 10 ஆண்டு கால பிஜேபி ஆட்சியில் ஜனநாயகம் என்பது இடம் பெயர்ந்து விட்டது.
நாடாளுமன்றம் நடந்துகொண்டு இருக்கும்போதே பிரதமர் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களை மேற்கொள்வார்.
டில்லியில்இருந்தாலும் நாடாளுமன்றத்திற்கு வருவதைத் தவிர்ப்பது அவரதுவாடிக்கை – அப்படியே நாடாளுமன்றம் வந்தாலும் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்க மாட்டார்.
செய்தியாளர்களைச் சந்திக்க மாட்டார் – உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று பேசுவதில் மட்டும் குறைச்சல் இருக்காது.
பிஜேபியின் 10 ஆண்டுகள் ஆட்சிக்கு நடந்து முடிந்த மக்களவையில் மக்கள் நல்ல வகையில் பாடம் கற்பித்திருந்தும்கூட பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றால், இவர்கள் திருந்தப் போவதில்லை.
ஆனால் ஒன்று இந்நாட்டின் பெரும்பாலான மக்கள் தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மையினரும்தான்
கடவுளைக் காட்டி, மதத்தைக் காட்டி, ஜாதியைக் காட்டி, மூடநம்பிக்கைகளைப் பரப்பி நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தமுடியாது.
ஒடுக்கப்பட்டோர் ஒன்றிணைந்து உரிமைக் கொடி தூக்கி எரிமலையாகக் கிளர்ந்துஎழக் கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை – எச்சரிக்கை!