சென்னை, ஜூலை 2- தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தொடங்கப்பட்டது. இதன்படி இத்திட்டத்தில் தகுதியுடைய குடும்பத் தலைவிகளுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக செலுத்தப்படும் என்று கூறப்பட்டது. தற்போது 1.15 கோடி பேரின் வங்கி கணக்கில் மாதம் மாதம் ரூபாய் ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் இத்திட்டத்தில் பயன்பெற இரண்டு கோடிக்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பித்து இருந்தசூழலில், பல்வேறு காரணங்களால் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் இத்திட்டத்தின் மூலம் இன்னும் அதிகமான பெண்கள் பயன்பெறும் வகையில் இதனை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் நிராகரிக்கப்பட்டோர் மீண்டும் இ- சேவை மய்யங்கள் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
மேலும் புதியதாக இதில் விண்ணப்பிக்க முடியுமா? இது தொடர்பாக எதாவது அறிவிப்பு வருமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு சட்ட சபையில் நடந்த கூட்டத் தொடரில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் இதுவரை மேல்முறையீடு செய்த 1 லட்சத்து 48 ஆயிரம் பேருடைய விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விவரங்கள் சம்பந்தப்பட்ட பெண்களின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வரும் நிதி ஆண்டில், மகளிர் உரிமை தொகைத் திட்டத்திற்காக ரூபாய் 13,722 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், மேல்முறையீட்டில் நிராகரிக்கப்பட்டோர், புதியதாக விண்ணப்பிக்க விரும்புவோர் அடுத்த முப்பது நாட்களில் இ- சேவை மய்யங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.