‘நீட்’ வினாத்தாள் கசிவு, தேர்வு மய்யங்களில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அலகாபாத் பகுதியைச் சேர்ந்த மருத்துவர், தனது மகனுக்குப் பதில் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வரும் தனது நண்பரின் மகனை நீட் தேர்வு எழுத வைத்த மோசடி வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது.
அலகாபாத் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஆர்.பி. பாண்டே, நைனி பகுதியில் தனியார் மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவர் தனது மகன் ராஜ் பாண்டேவுக்குப் பதிலாக மருத்துவரான தனது நண்பரின் மகனை நீட் தேர்வெழுத வைத்திருக்கும் நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பீகார் மாநிலம் முசாபர் நகர் பகுதியில் இயங்கி வரும் டிஏவி பப்ளிக் பள்ளியில் நடந்த நீட் தேர்வின்போது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹக்மா ராம் என்பவர் தேர்வெழுதியிருக்கிறார். இவர் ஜோத்பூர்-எய்ம்ஸ் மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர்.
இப்படி ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தேர்வு மய்யத்தில் பயோ மெட்ரிக் பதிவை மேற்கொள்ளாமல், ஹக்மா ராமை தேர்வெழுத அனுமதித்தது எப்படி என்று தேர்வு மய்ய மேலாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
வழக்கை விசாரித்து வரும் பீகார் காவல்துறை, மாணவர் ராஜ் பாண்டே மற்றும் அவரது தந்தையைத் தேடி வருகிறார்கள். விசாரணையில், ராஜ் பாண்டே, கோட்டா என்ற ஊரில் (நீட் பயிற்சிக்கு முக்கியமான பகுதியாகக் கருதப்படும் இடம்) தங்கி நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுத்து வந்ததாகவும், அங்கு தனது தந்தையின் நண்பர் ஒருவரின் மகனாக மூன்றாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் ஹக்மா ராமை தனக்கு பதிலாக தேர்வெழுத முதலில் ரூ.8 லட்சம் பேரம் பேசப்பட்டு ரூ 4 லட்சம் தொகை கைமாறிய பிறகு, அவர் தேர்வெழுதியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மெட்ரிக் முறையில் (கண் உட்பட) சோதனை செய்யப்பட்டுதான் தேர்வு மய்யத்திற்குள் அனுப்புவதாகக் கூறப்படுவது எல்லாம் எத்தகைய மோசடி – விஞ்ஞானத்துக்குள்ளேயே மோசடித் திருவிளையாடல்களை ஆடிக் காட்டுகிறார்களா?
‘நீட்’டைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேச்சை எடுத்தாலே எதிர்க்கட்சித் தலைவரின் ஒலி வாங்கியை அணைப்பதும் விஞ்ஞான ரீதியானதுதானோ!
இந்த அஞ்ஞான மவுடீகக் கூட்டத்தின் கையில் இந்த விஞ்ஞானம்தான் என்ன பாடுபடுகிறது பார்த்தீர்களா?
பார்ப்பனீயம் அங்கு இங்கு எனாதபடி தன் ‘சித்து’ வேலையில் ஈடுபடுகிறது.
‘நீட்டை’ ஒழித்தால் ஒழிய, ஒடுக்கப் பட்டவர்களின் மருத்துவ எண்ணம் வெறும் கனவாகத்தான் இருக்கும். இது கல்லின்மேல் எழுத்து! இதில் கட்சியில்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை. காலம் காலமாகக் கல்வி மறுக்கப்பட்டவர்கள் என்ற முறையில் எரிமலையாக வெடித்து எழுவீர்! கல்விக் கண்ணைத் திறந்த காமராசர் பிறந்த நாளில் (ஜூலை 15) ஆர்ப்பரிக்கும் கடலாய் சேலத்திற்குத் திரண்டு வாரீர்! வாரீர்!!