தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை முரசொலிக்கிறது

Viduthalai
3 Min Read

விகடன் இணையத்தில் (28.6.2024) ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
‘‘பெண் என்றால் பிள்ளை பெறும் எந்திரமா?’’ என்று தந்தை பெரியார் கேட்டார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ரெங்கநாத் மிஸ்ரா ‘பெண்கள் ஏன் வேலைக்கு வர வேண்டும்? வீட்டு வேலைக்குச் செல்லுவது தான் சரியானது’’ என்றார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ‘‘ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் படிக்கிறார்கள் – அதிக ஊதியம் பெற்ற நிலையில் கணவன் பேச்சை மனைவி கேட்பதில்லை. அத்தகைய மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.
‘‘வேலைக்குச் செல்லும் பெண்கள் பெரும்பாலும் ஒழுக்கக் குறைவானவர்கள்’’ என்றார் காஞ்சி சங்கராச்சாரியாராக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி. ஆனால் விகடன்இணையத்தில் வெளிவந்த தகவல் தந்தை பெரியார் குரலை எதிரொலிக்கிறது.
‘‘வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன்னை வீட்டில் இருக்கச் சொன்ன கணவரிடம், அவரது கம்பெனியில் 50% பங்கு கொடுக்கும்படி மனைவி கேட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தற்போது நகரங்களில் பெரும்பாலும் கணவர் மற்றும் மனைவி என இரண்டு பேரும் வேலைக்குச் செல்வது வழக்கமாகிவருகிறது. ஆனால், சில ஆண்கள் தங்கள் மனைவி வீட்டில் இருந்து குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவதுண்டு. அதை சில பெண்கள் விரும்புவதில்லை.

அப்படி, தன் மனைவியிடம் வேலையை விட்டுவிட்டு வீட்டில் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும்படி கணவர் கேட்க, அதற்கு அப்பெண் தெரிவித்த பதிலை, நெட்டிசன்கள் கலவையான எதிர்வினைகளுடன் பகிர்ந்து வருகின்றனர்.
அதாவது, தான் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருக்க வேண்டுமானால், கணவரின் கம்பெனியில் 50% பங்கை தனது பெயரில் எழுதிக்கொடுக்கும்படி கேட்டுள்ளார். இது தொடர்பாக, அப்பெண் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் (இணையத்தைப் பயன்படுத்து வோர்) ஆலோசனையையும் கேட்டுள்ளார்.
அப்பெண் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கும் என் கணவருக்கும் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கணவர், நான் செய்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். இது எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. இருவரும் வேலை செய்தால் நல்ல முறையில் வாழ முடியும் என்று கணவரிடம் விளக்கமளித்தேன். கணவரின் கோரிக்கை குறித்து சில வாரங்கள் ஆலோசித்து விட்டு அவரது கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்தேன்.

ஆனால், நான் வேலையை ராஜினாமா செய்ய வேண்டுமானால், என் கணவரின் கம்பெனியில் எனக்கு 50% பங்கு வேண்டும் என்று கேட்டேன். உடனே அவர் ஆச்சரியப்பட்டார். 50% பங்கு கேட்பதற்கான காரணத்தையும் சொன்னேன்.
‘‘நமக்கு ஒருவேளை விவாகரத்து ஏற்பட்டால், நான் வீட்டில் இருந்தால் அதிக ஊதியம் கிடைக்கும் வேலையைத் தேடுவது கடினம். ஆனால், நீங்கள் ஒவ்வோர் ஆண்டும் அதிக பணம் சம்பாதித்துக்கொண்டிருப்பீர்கள். எனவேதான், உங்கள் கம்பெனியில் பாதி ஷேர் கேட்டேன். ஒருவேளை விவாகரத்து ஆகாமல் இருந்தால், நான் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கான விலையாக 50% பங்கு இருக்கும். நீங்கள் எந்தவித மனக்கவலை மற்றும் மன அழுத்தம் இல்லாமல் இருப்பீர்கள்’’ என்றேன்.

‘‘இதை என் நண்பர்களிடம் சொன்னபோது, அவர்கள் என்னை கழுதை என்று சொன்னார்கள். என் நெருங்கிய நண்பர்கூட கோபப்பட்டார். நான் கொஞ்சம் திகைத்துப்போனேன்’’ என்று அந்தப் பெண் பகிர்ந்துள்ளார்.
அப்பெண்ணின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், ‘`உங்களது எதிர்காலத்துக்குக் கேட்கிறீர்கள். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது’’ என்று அவர் கோரிக்கைக்கு ஆதரவாகவே பதிவிட்டுள்ளனர்.’’
-விகடன் இணையம், 28.6.2024
விகடன் இணையத்தில் இந்தச் செய்தியை படிக்கும்போது ஆண் ஆதிக்கம் எப்படி இருக்கிறது; அதே நேரத்தில் பெண்களின் உரிமைக் குரலும் ஓங்கி ஒலிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
யார் தடுத்தாலும் தந்தை பெரியாரின் பெண் உரிமைச் சிந்தனைகளை நோக்கிப் பெண்கள் வீர நடை போடுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
மாற்றம் என்பதுதான் மாறாதது என்பது அறிவியல் வளர்ச்சியின் உண்மையான சிந்தனையன்றோ!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *