செய்தியாளர்: ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு, ஒன்றிய அரசிற்கும் அனுப்பி வைத்துள்ளதே, மாநில அரசே அதனை நடத்த முடியாதா?
தமிழர் தலைவர் பதில்: மாநில அரசு நடத்தினாலும், அதனால் பயன் இருக்காது. ஜாதிவாரியாகக் கணக்கெடுக்கவேண்டும் என்பதற்காக நீண்ட நாள்களாகப் பேசிக் கொண்டு வருகிறோம்.
மக்கள் தொகை பொதுக் கணக்கெடுப்பு எடுக்கவேண்டும் என்பது யாருடைய உரிமை? முழுக்க முழுக்க ஒன்றிய அரசினுடைய உரிமை, கடமையாகும்.
அந்த ஒன்றிய அரசுதான் இதனை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், பீகாரிலிருந்து நிதிஷ்குமார் தலைமையில், பா.ஜ.க.வினர் உள்பட அனைவரும் சென்று, பிரதமர் மோடியை சந்தித்துச் சொன்னார்கள்.
மராட்டியத்தில் வழக்குப் போட்டாலும், இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தினாலும், அதேபோன்று வேறு வேறு மாநிலங்களில் வழக்குப் போட்டு, இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தினாலும், வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவிகிதம் என்று இட ஒதுக்கீடு கொடுத்திருக்கின்ற சட்டமாக இருந்தாலும், உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதி கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ‘‘அதி காரப்பூர்வமாக தயாரிக்கப்பட்ட புள்ளி விவர கணக்குகள் இருக்கிறதா?‘‘ என்று கேட்கிறார்கள்.
பொருளாதார அடிப்படையில், உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு பிரச்சினையில் இதுபோன்ற கேள்விகள் நீதிமன்றத்தில் வரவில்லை. இது நீதிபதி களுக்குத்தான் வெளிச்சம்.
இதுபோன்ற கேள்விகளை கேட்பதினால், ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மாநிலத்தில் நடத்தினாலும், பீகாரில் எப்படி செல்லாது என்று சொன்னார்களோ, அதுபோன்ற நிலைமைதான் ஏற்படும்.
ஆகவே, உள்ளபடியே தமிழ்நாடு அர சாங்கத்திற்கு சமூகநீதியில் அக்கறை உள்ள காரணத்தினால்தான், முறையாக செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்போது அதை வலியுறுத்தியும் இருக்கிறார்கள்.
இன்றைக்கு உள்ள ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசுக்கு முழு மெஜாரிட்டி இல்லை. இரண்டு பேரைத்தான் அவர்கள் நம்பி இருக்கிறார்கள். ஒன்று, ஆந்திராவில் உள்ள சந்திரபாபு நாயுடு கட்சியான தெலுங்குதேசம்; இன்னொன்று பீகாரில் இருக்கக்கூடிய நிதிஷ்குமார், அய்க்கிய ஜனதா தளம்.
பீகாரில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தி ருக்கிறது. அதே நிலைமை நமக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான், செய்வதைத் திருந்தச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் முதலமைச்சர் இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறார்.
69 சதவிகித இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் நிலைபெற்றிருப்பது எப்படி?
69 சதவிகித இட ஒதுக்கீடு தமிழ்நாட்டைத் தவிர, வேறு எங்கேயும் இல்லை. தமிழ்நாட்டைக் காட்டி, 69 சதவிகித இட ஒதுக்கீட்டை மேற்கொண்டார்கள். ஆனால், அது அங்கே நிற்கவில்லை.
ஏனென்று கேட்டால், நாம் செய்திருக்கும் அஸ்திவாரம் என்பது பலமானதாகும். 9 ஆவது அட்டவணை பாதுகாப்பிற்காக, அரசமைப்புச் சட்டமே திருத்தப்பட்டு, அது நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.
முழுக்க முழுக்க அதற்கு யார் காரணம் என்பது உலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
நல்ல பலத்தோடு செய்தால், அது வெற்றி அடையும்!
ஆகவேதான், ஒரு மாநில அரசு ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தினால், அது நீதிமன்றத்திற்குச் சென்றால், அது செல்லாமல் போய்விடும் என்பதற்காகத்தான், நம்முடைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள், எங்களைப் போன்றவர்களையெல்லாம் கலந்தாலோசித்து, ஜாதி வாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசுதான் நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.
ஒன்றிய அரசிற்கு, நிதிஷ்குமார்தானே முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அந்த முட்டை அவர் கொஞ்சம் இழுத்தால் போதுமே! ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று சொல்லட்டுமே!
அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத் தேர்த லின்போது, பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாசு அவர்களை, மோடி அவர்கள் அணைத்துப் பேசினார்; விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடட்டும் என்று மேலே இருந்து உத்தரவு வந்திருக்கிறது. இவ்வளவு நெருக்கமான உறவு இருக்கக்கூடியவர்கள், ஜாதிவாரிக் கணக்கெடுப்புப் பிரச்சினையில், சீக்கிரமாக நடவடிக்கை எடுங்கள் என்று ஏன் சொல்லவில்லை?
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தச் சொல்லி
கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தலாமே!
2021 ஆம் ஆண்டில் செய்திருக்க வேண்டியதை, 2024 ஆம் ஆண்டுவரையில் செய்யவில்லை. தேர்தலைக் காரணம் காட்டினார்கள்; சாக்கு போக்குகளைச் சொன்னார்கள் இதுவரையில். இன்றைக்கு ஒன்றியத்தில் தனியாக பா.ஜ.க. அரசாங்கம் நடைபெறவில்லையே – கூட்டணி அரசாங்கம்தானே நடைபெறுகிறது. கூட்டணியினுடைய அங்கங்கள்தானே இவர்கள். எனவே, இந்தத் தங்கங்கள், ஒன்றியத்தில் அங்கமாக இருக்கக்கூடியவர்கள் பா.ஜ.க.வை வலியுறுத்தி ஏன் இதனை மேற்கொள்ளக்கூடாது என்பதுதான் நம்முடைய கேள்வி.
ஆகவேதான், சமூகநீதியைப் பொறுத்த வரையில், அதனுடைய அடித்தளம் என்ன வென்றால், ஒரே வரிதான் ‘‘அனைவருக்கும் அனைத்தும்‘‘ என்பதுதான்.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும்படி செய்வதென்றால், ஆதாரத்தோடு செய்யவேண்டும்.
ஒருமுறை ஏற்கெனவே தோற்றுப் போனார்கள் – அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோல், வன்னிய சமுதாயத்தினருக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவித்தார் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மாலை 4 மணிக்குப் பொதுத் தேர்தல் நடைபெறப் போகும் தேதி அறிவிப்பு வரவிருக்கின்ற சூழ்நிலையில், 3.30 மணிக்கு மேற்கண்ட அறிவிப்பை அறிவித்தார்.
ஆகவே, சட்டப்படியான, அது சரியான நடவடிக்கை அல்ல அது. அதிலுள்ள ஓட்டை களையெல்லாம் எடுத்துச் சொன்னார்கள் பிறகு.
– மதுரையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் அளித்த பேட்டியிலிருந்து (27.6.2024)