நமது உடலில் இன்சுலின் சரியாகச் சுரக்காதபோது சர்க்கரை நேரடியாக ரத்தத்தில் கலந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
இரு வகை நீரிழிவு நோய்களுக்கும் நாள்தோறும் சிலமுறை இன்சுலினை ஊசி வாயிலாக நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாள்தோறும் ஊசி போட்டுக்கொள்வது சற்றுக் கடினமானது. பயன்படுத்தப்பட்ட ஊசிகள் தீங்கு தரும் கழிவுகளாகக் குவிவதும் ஒரு பிரச்சினையாகிறது.
இதற்கு மாற்றாகப் பல்வேறு வழிகளை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இவற்றுள் மிக எளிமையானது வாய்வழியே மருந்தை எடுத்துக் கொள்வது தான். மாத்திரை வடிவில் இன்சுலின் தந்தாலும் அதன் முழுப்பயன் கிடைப்பதில்லை.
ஏனென்றால், வயிறு உள்ளிட்ட செரிமான உறுப்புகளில் உள்ள அமிலங் களால் இன்சுலின் சிதைக்கப்படும். இதற்குத் தீர்வு காண விஞ்ஞானிகள் முற்பட்டனர்.
அந்த வகையில் கனடா நாட்டைச் சேர்ந்த பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை ஆய்வாளர்கள் ஒரு புது முறையைக் கண்டுள்ளனர். இதன்படி இன்சுலின் மாத்திரை வடிவில் அல்லாமல் சொட்டு மருந்து வடிவில் தரப்படும்.
நேரடியாக வாய்க்குள் எடுத்துக் கொள்ளாமல் நாக்கின் அடியில் சில சொட்டுகள் தரப்படும். இவ்வாறு நாக்கின் அடியில் மருந்து வைக்கும் முறைக்கு ‘சப்லிங்குவல் அட்மினிஸ்ட்ரேஷன்’ என்று பெயர். நாக்கின் அடியில் உள்ள திசுக்களில் உள்ள துளைகள் வழியே இன்சுலின் நேரடியாக ரத்த ஓட்டத்தை அடையும்.
இப்படியாக இன்சுலின் தந்தாலும் கூட முழுப்பயன் கிடைக்கவில்லை. இன்சுலினின் மூலக்கூறுகள் அளவில் பெரியவை என்பதால் நமது செல் களுக்குள் செல்ல முடியவில்லை.
இதனால் விஞ்ஞானிகள் இன்சுலி னுடன் மீனிலிருந்து எடுக்கப்படும் ‘செல் லுக்குள் ஊடுருவும் பெப்டைட்’ (CPP) என்ற பொருளைக் கலந்தனர்.
இது, இன்சுலின், செல்களுக்குள் ஊடுருவ உதவுகிறது. இந்த முறையில் எலிகள் மீது சோதிக்கப்பட்டபோது அவற்றின் சர்க்கரை அளவு குறைந்தது. விரைவில் மனிதர்களின் பயன்பாட்டிற்கு சந்தைக்கு வர உள்ளது.