சென்னை ஜூன் 27 ‘குற்றவியல் சட்டங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் அவசியம்,” என, சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி நாகமுத்து தெரிவித்தார். ஒன்றிய அரசு, இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக் ஷா, பாரதிய சாட்சிய அதினியம் என்ற மூன்று புதிய சட்டங்களை இயற்றியுள்ளது.
இதற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததால் வரும் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.புதிய குற்றவியல் சட்டப்பிரிவுகள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அது தொடர்பான பயிலரங்கம், சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத் கர் சட்டப் பல்கலை வளாகத்தில், நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி நாகமுத்து பேசியதாவது: இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் காலத்தின் தேவை. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் காலனியாதிக்க காலத்து குற்றவியல் சட்டங்களை, நம் நாட்டின் நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. பத்திரிகையாளர்களுக்கு புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றிய, சரியான புரிதல்கள் இருக்க வேண்டும். இந்த சட்டங்கள் பற்றிய செய்திகள் வெளியிடும்போது, பொறுப்புடனும், கண்ணியத்துடனும் வெளியிட வேண்டும்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களின் அடையா ளங்களை, செய்திகளில் வெளியிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குற்றச் நிகழ்வுகள் தொடர்பான செய்தியை வெளியிடும் போது, மேம்போக்கான தகவல்களை மட்டும் வைத்து வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.புதிய சட்டங்கள் ஜூலை 1இல் நடைமுறைக்கு வருகின்றன. ஜூன் 30-ஆம் தேதி இரவு வரை பதிவு செய்யப்படும் வழக்குகள்,பழைய குற்றவியல் சட்டங்களின் கீழ்தான் பதிவு செய்யப்படும்.
புதிய சட்டங்களில், மரண தண்டனை விதிக்கப்பட்ட சில குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை; ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சில குற்றங்களுக்கு, குறிப்பிட்ட கால அளவு மட்டுமே சிறை தண்டனை விதிக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை, ஒன்றிய மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் லீனா மீனாட்சி, பத்திரிகை தகவல் அலுவலக இணை இயக்குனர் அருண்குமார், துணை இயக்குனர் திருமதி விஜயலட்சுமி, அம்பேத்கர் சட்டப் பல்கலை பதிவாளர் கவுரி ரமேஷ், டீன் பாலாஜி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.