கள்ளக்குறிச்சி விஷசாராய சாவு ஒரு நபர் ஆணைய விசாரணை தொடங்கியது

viduthalai
2 Min Read

கள்ளக்குறிச்சி, ஜூன் 22- கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சாவு குறித்து ஒரு நபர் ஆணைய நீதிபதி விசாரணை தொடங்கியது. அப்போது 3 மாதத்திற்குள் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் கூறினார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்ததில் 50 பேர் உயிரிழந்தனர். 100- க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நேற்று (21.6.2024) காலையில் கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இறப்பதற்கு முன் அவர்களுக்கு எவ்வாறு உடல் நலக்குறைவு ஏற்பட்டது?,வேறு ஏதேனும் நோய்கள் இருந்ததா? உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சைபெற்று வருபவர்களை நேரடியாக சந்தித்து விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்தேன். அதேபோன்று கிராமத்தில் இருப்பவர்களையும் சந்தித்தேன். ஆணையம் எடுத்துவரக் கூடிய நடவடிக்கை தொடர்பாக செய்தி விரைவில் தெரிவிக்கப்படும். தமிழ்நாடு அரசு விசாரணை ஆணையம் அமைத்ததில் 3 மாதம் அவகாசம் இருக்கிறது. அதற்குள் முழுமையாக அறிக்கை தயாரிக்கப்படும் என்றார். முன்னதாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல் தாஸ் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவத்துறை உள்ளிட்ட அரசு துறை அலுவலர்க ளிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரஜித் சதுர்வேதி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மீண்டும் விடைத்தாள் மோசடி
இவ்வாரம் நடக்கவிருந்த நெட் தேர்வு ஒத்தி வைப்பு

புதுடில்லி, ஜூன் 22 சிஎஸ்அய்ஆர் யுஜிசி நெட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 25 முதல் 27 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த சிஎஸ்அய்ஆர் யுஜிசி நெட் தேர்வு, மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவதாவது, “ஜூன் 25,26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்ட சிஎஸ்ஐஆர் நெட் 2024 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தேர்வு வினாத்தாள், டார்க்நெட் என்னும் ரகசிய வலைதளத்தில் கசிந்துள்ளது; மற்றும் சமூக ஊடகமான டெலிகிராமிலும் காட்டுத்தீ போல பரவியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் வினாத்தாள் கசிந்த விவகாரம் உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *