கோவைத் தீர்மானமும் மந்திரிகள் பிரச்சாரமும்

viduthalai
3 Min Read

கோவை மகாநாட்டுத் தீர்மானங்களின் பலன் என்னவானாலும், அதனால் நாட்டில் ஒரு பெரிய தடபுடல் ஏற்பட்டு விட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதாவது, பஞ்சாப் படுகொலையின்போது இராஜப் பிரதிநிதி அவர்களைத் திருப்பி அழைக்க வேண்டும், திரு.ஒட்வியரைத் திருப்பி அழைத்துவிட வேண்டும், திரு.டயரை தண்டிக்க வேண்டும் என்பதாக நாட்டாரெல்லோரும் ஒன்றுகூடி காங்கிரசில், கான்பரன்சில், சந்து பொந்துகளில் எல்லாம் தீர்மானித்த காலங்களில், திரு.ராஜப் பிரதி நிதிக்காவது, திரு.ஒட்வியருக்காவது, திரு டயருக்காவது சிறு கலக்கமும், கவலையும் இல்லாமல் இத்தீர்மானங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால், கோயமுத்தூர் மகாநாட்டில் ‘‘உத்தியோகம் கிடைக்காமல் ஏமாந்து போன யாரோ சிலர்” கூடி செய்தார்கள் என்று சொல்லும் படியான திரு.கவர்னர் மீது ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கவர்னரை தலையெடுக்க வொட் டாமல் இன்னும் படுக்க வைத்து விட்டது.

யார் என்ன செய்தாலும் பயப்பட மாட் டோம் என்று சொல்லிக்கொண்டு இருந்த மந்திரிகளை, ஊர் ஊராய்ச் சுற்றி தங்கள் சொந்த செலவில் பிரச்சாரம் செய்யவும், மந்திரி உத்தியோகத்திற்கு எப்போது சாவு வரப்போகிறதோ என்று பயந்து, அதிகாரங்களை இப்பொழுதே இன்ஷூர் செய்துவிட்டு உயில் சாசனம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். ஒன்றுக்கும் அஞ்சோம் என்ற பார்ப்பனர்களே, காங் கிரஸ் வாசற்படியில் வேட்டை நாய்கள் போல் காவல் காத்துக்கொண்டு வேறு யாரையும் உள்ளே விடக்கூடாது, விட்டால் நமக்கு ஆபத்து என்பதாக இரவும், பகலும் கண் விழித்துக் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கொரு கால், அங்கொரு கால் வைத்துக்கொண்டு ஏமாற்றிப் பிழைக்கலாம் என்று எண்ணியிருந்த அரசியல் மேதாவிகளுக்கு, உள்ளதும் போய் விடும் போலிருக்கிறதே என்கிற நடுக்கம் ஏற்பட்டு விட்டது. பார்ப்பனர்கள் காங்கிரசில் பல பொய்த் தீர்மானங்களைப் போட்டு ஜனங்களையும், சர்க்காரையும் ஏமாற்றிப் பிழைக்கிறார்களே அது போல் நாமும் பொய்த் தீர்மானங்களைப் போட்டு ஜனங்களையும், சர்க்காரையும் ஏமாற்றி உத்தியோகம் சம்பாதிக்கலாம் என்று இருந்த சில பார்ப்பனரல்லாதார்களுக்கும் இத்தீர்மானம் ஒரு பரிட்சைக்காலமாய் ஏற்பட்டு விட்டது. மற்றபடி சர் சி.பி. போன்ற உத்தியோகப் பார்ப்பனர்களுக்கும் ஒரு பெரிய கலக்கத்தை உண்டாக்கி விட்டது.

இந்த நிலையில், அய்யோ பாவம்! ஆகாச மந்திரிகள் பயந்து தங்கள் உத்தி யோகங்களை நிலை நிறுத்த ஊர் ஊராய்ப் போய் பிரச்சாரம் செய்வது ஒரு அதிசய மாகுமா? ஆகாதென்றே சொல்லுவோம். அவர்கள் தங்கள் நடவடிக்கை நியாய மானது என்று நிரூபிக்க பல இடங்களில் பிரசங்கம் செய்யப் போகிறார்கள். இந்தச் சமயங்களில் நமது மக்கள் யாதொரு கலகமும் தடையும் இன்றி அமைதியாக அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்க வேண்டும். அவர் யோக் கியதையை நிரூபிக்க நாம் சந்தர்ப்பம் கொடுத்தோம் என்கிற கவுரவம் நமக்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டுமே அல்லாமல், அவர்களைப் பேச விடாமல் தடுத்தோம் என்கிற பெயர் ஏற்படும்படி நடந்து கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்ளுகிறோம்.

இதுவிஷயம் நாம் பல தடவை எழுதி வந்திருக்கிறோம். ஏனெனில் இதுசமயம் நமது நாட்டு வாலிபர்களின் நடவடிக்கைகள் பெரும்பான்மைக்கும், நம்மையே பொறுப்பாளியாக்குகிறார்கள். ஆனதால் நாம் இதை எழுத நேர்ந்தது. தவிர, எப்படியும் இந்த மந்திரிமார்கள் நிலைத்து விடுவார்கள் போலவே தோன்றுகிறது. எப்படி என்றால், சென்ற வாரம் மந்திரிகளின் நிலையென்பதாக நாம் எழுதியிருந்த வியாசத்தின் பின்பாகம் அவ்வளவும் ஏறக்குறைய உண்மையாகவே நடந்து வருகிறது. பார்ப்பனரல்லாதார் கட்சி உட்பட ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பலரை மந்திரிகளும், சர்க்காரும், காங்கிரஸ் சுயராஜ்யக்கட்சி முதலியதுகளைச் சேர்ந்த பார்ப்பனர்களும் சரிசெய்து கொண்டார்கள் என்பதாகவே தெரிகிறது. தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியும், சட்ட சபை காங்கிரஸ் கட்சி உபதலைவரும், சுயராஜ்யக் கட்சி காரியதரிசியும், இன்னமும் என்னென்னவோ பெருமை உடையவருமான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களும் 4 நாளைக்கு முன் மேன்மை தங்கிய கவர்னர் வீட்டுக்கே நேராகப் போய் கவர்னருக்கு “நீங்கள் பயப்பட வேண்டாம், மந்திரிகள் கலையாமலிருப்பதற்கு வேண்டிய வேலை செய்தாய் விட்டது” என்பதாகத் தைரியம் சொல்லி விட்டு வந்ததாய் விட்டதாக தெரியவருகிறது. ஆதலால் அதைப்பற்றி யாருக்கும் இனி சந்தேகம் வேண்டியதில்லை என்பதே எமதபிப்பிராயம்.
– குடிஅரசு – கட்டுரை – 31.07.1927

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *