* நந்தன்
“படிங்க.. படிங்க… படிச்சுக்கிட்டே இருங்க. படிப்பு ஒன்று தான் நம்மிடமிருந்து யாராலும் பறித்துக்கொள்ள முடியாத சொத்து” – தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த வாரம் நடத்தப்பட்ட அய்ம்பெரும் விழாவுக்குத் தலைமையேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய சொற்கள் இவை. கல்வியின் முக்கியத்துவத்தை முதல மைச்சர் இந்த அளவுக்கு வலியுறுத்திப் பேசுவது இது முதல் முறையல்ல. பேச்சோடு நின்றுவிடுவதும் அல்ல. 2021இல் ஆட்சிப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கல்வித் துறை மீது சிறப்புக் கவனமும் ஆழ்ந்த அக்கறையும் செலுத்திவருகிறது. கல்வித் துறை சார்ந்து அரசு முன்னெடுத்துவரும் பல்வேறு திட்டங்கள் கல்வியாளர்களின் வரவேற்பைப் பெற்றிருப்பதோடு, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்கும் வழிவகுத்துள்ளன.
காலைப் பசி போக்கும் திட்டம்
தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இந்த அரசின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்று. நீதிக் கட்சி ஆட்சிக் காலம் தொடங்கி, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்படுவதற்கு நெடிய வரலாறு உண்டு. ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் முதல் முறையாக மதிய உணவைத் தாண்டி,காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு அது 31,008 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் காலை உணவு உண்ணாமல் பள்ளிக்கு வரும் அவலநிலையைப் போக்கியிருக்கும் இந்தத் திட்டம், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்துள்ளது. 2024-25 கல்வியாண்டில் இந்தத் திட்டம், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மேலும் 2.50 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். காலை உணவுத் திட்டத்துக்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர் பசி போக்கும் இந்தத் திட்டத்தை தெலங்கானா மாநில அரசு வரவேற்றுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது நாட்டில் உள்ள பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்போவதாக அறிவித்தார்.
அடித்தளத்தை உறுதியாக்குதல்
எண்ணறிவும் எழுத்தறிவும் கல்வியின் அடிப்படைகள். மாணவர்கள் கல்வியில் சாதிக்க வேண்டுமென்றால், அடித்தளம் உறுதியாக அமைக்கப்பட வேண்டும். அதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம். ஒவ்வொரு குழந்தையும் 2025ஆம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல், அடிப்படை எண் கணிதத் திறன்கள் பெறுவதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் மூலம் 37,866 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 22.27 லட்சம் மாணவர்கள் பயனடைந்துவருகின்றனர்.
கரோனா பொதுமுடக்கக் காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்வதற்காக அறி முகப்படுத்தப்பட்டது ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம். மூன்று ஆண்டுகளாக ரூ.590.27 கோடியில் செயல்படுத்தப்பட்டுவரும் இந்தத் திட்டத்தில், 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 24 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றுவருவதாக அரசு வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.
ஏட்டுக் கல்வியைத் தாண்டி…
மாணவர்களிடம் பாடப் புத்தகங்களைத் தாண்டி வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்திவருகிறது. குழந்தைகள் அணுகக்கூடிய எளிய மொழியில், வாசிப்பின் மீது குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஈடுபடுத்தும் வகையில் வண்ணப்படங்களுடன் ‘நுழை’, ‘நட’, ‘ஓடு’, ‘பற’ என நான்கு தனித்தனி வாசிப்பு நிலைகளைக் கொண்ட 53 புத்தகங்கள் உருவாக்கப்பட்டு, அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அடுத்து, 50 புத்தகங்கள் அச்சிடப்பட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட இருக்கின்றன. ஊராட்சி ஒன்றியத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களிடம் நற்பண்புகளை வலுப்படுத்தும் பொருட்டுக் கதை மய்யங்களை ஏற்படுத்தி, 160 பள்ளிகளில் ரூ.121.75 லட்சம் செலவில் கதை நூல்கள் உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
மேலும், கோடை விடுமுறைக் காலத்தில் குழந்தை களிடையே தமிழ், ஆங்கிலக் கதைகள் அடங்கிய சிறு நூல்கள் மூலம் தொடர் வாசிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் தமிழ்நாடு முழுவதிலும் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாணவர்களின் கற்பனைத் திறன். படைப்பாற்றல் திறன், சிந்திக்கும் திறன் ஆகியவற்றை வெளிக்கொணரும் விதமாக இல்லம் தேடிக் கல்வி மய்யங்களில் ‘குறும்படக் கொண்டாட்டம்’ 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்டது. இதிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தேவை உள்ளோருக்குச் சிறப்புக் கவனம்
காட்டுப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும் பள்ளி களுக்குச் சென்று வருகின்ற குழந்தைகள் பல சிரமங்களையும் ஆபத்துகளையும் எதிர்கொள்கின்றனர். இதனால் 2023-2024இல் தொலைதூர/அடர்ந்த காடு/மலைப் பகுதி களில் உள்ள 1,692 குடியிருப்புகளைச் சேர்ந்த தொடக்க நிலை முதல் உயர்நிலை வரையில் படிக்கும் 27,707 மாணவர்கள் பள்ளிக்குப் பாதுகாப்பாகச் சென்றுவர போக்குவரத்துப் பாதுகாவலர்களுடன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதனால், குழந்தைகள் அச்சமில்லாமல் பள்ளிகளுக்கு வந்து கல்வி பயில முடிகிறது.
தொடக்கக் கல்வி பயிலும் அறிவுசார் குறைபாடுள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவுத் திறன்களை உறுதிசெய்யும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மாணவர் பயிற்சி நூல், ஆசிரியர் கையேடு போன்ற கற்றல், கற்பித்தல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களைச் சிறப்புப் பயிற்று நர்கள் மூலம் அடையாளம் காணும் வகையில் ‘நலம் நாடி’ என்னும் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் நவீன வசதிகள்
நல்ல வகுப்பறைச் சூழல் குழந்தைகளின் படிப்பார்வத்தை அதிகரிக்க வைக்கும். எனவே, அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classroom) ரூ.435.68 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து அரசுத் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் 100 எம்.பி.பி.எஸ். (MBBS) அதிவேக இணைய இணைப்பைப் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்பத் தங்களைச் சிறப்பாக மெருகேற்றிக்கொள்வதற்கு உதவும் வகையில் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.101 கோடியே 48 லட்சம் செலவில் கைக்கணினிகள் (Tablet) வழங்க ஆவன செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளைச் சிறப்பாக ஏற்படுத்த ‘பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புப் பணிகளுக்கென ரூ.1,887 கோடியே 76 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைப்பெற்றுவருகின்றன.
ஊராட்சி ஒன்றியத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 3,374 வகுப்பறைக் கட்டிடங்களையும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 227 வகுப்பறைக் கட்டிடங்களையும் முதலமைச்சர் திறந்துவைத் துள்ளார். மேலும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்கென மொத்தம் ரூ.667 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கற்பித்தல் மேம்பட…
ஏழை, எளிய மக்களும் நாடிச் செல்லும் அரசுப் பள்ளிகளில் கல்விப் பணிகள் தடையின்றி சிறப்பாகத் தொடர 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,876 முதுகலை ஆசிரியர்களுக்கான 14,019 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசின் திட்டங்கள் அனைத்தையும் பள்ளிகளில் சிறப்பாகச் செயல்படுத்தும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுடன், பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் சிறப்பு அக்கறையின் காரணமாக தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை நடைமுறைப் படுத்தியுள்ள பல்வேறு புதிய திட்டங்களின் மூலம் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, அரசுத் திட்டங்கள், நடவடிக்கைகளின் மூலம் இன்னும் பல உயரங்களைத் தொடும் என்று எதிர்பார்க்கலாம்.
நன்றி: ‘இந்து தமிழ் திசை’, 20.6.2024