நம்மைச் சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்தவர் தந்தை பெரியார் அவர்கள்!
பெண்களின் குனிந்த தலையை நிமிர்த்தியவர்கள் இரண்டு பேர்தான் –
ஒருவர் தந்தை பெரியார், மற்றொருவர் (போட்டோ கிராபர்) ஒளிப்படக் கலைஞர்!
குனிந்த தலையை நிமிர வைத்ததுபோல், வளைந்த சமூகத்தை நிமிர வைத்த இயக்கம் தந்தை பெரியாருடைய இயக்கம்!
புவனகிரி, ஜூன் 18 நம்மைச் சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்தவர் தந்தை பெரியார் அவர்கள். அதுதான் சுயமரியாதைத் திருமணம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக நம்முடைய தாய்மார்கள், பெண்கள், மகளிர், சகோதரிகளின் குனிந்த தலையை நிமிர்த்தியவர்கள் இரண்டு பேர்தான். ஒருவர் தந்தை பெரியார், மற்றொருவர் போட்டோ கிராபர். குனிந்த தலையை நிமிர வைத்ததுபோல், வளைந்த சமூகத்தை நிமிர வைத்த இயக்கம் தந்தை பெரியாருடைய இயக்கமாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மணமக்கள்: யாழ்வீரமணி – த.ரஞ்சிதா
கடந்த 10.6.2024 அன்று புவனகிரியில் கழகச் சொற்பொழிவாளரும், சிதம்பரம் மாவட்ட கழக இணை செயலாளருமான யாழ்திலீபன் – இளமதி இணையரின் மகன் யாழ்வீரமணி அவர்களுக்கும், பெ.தமிழ்ச்செல்வம் – தனலட்சுமி ஆகியோரின் மகள் த.ரஞ்சிதா அவர்களுக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார். அவரது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அவன் சேற்றில் காலை வைக்கவில்லை என்றால், நாமெல்லாம் சோற்றில் கைவைக்க முடியாது!
ஆனால், சமூகத்தில் அதிகமான வேலை செய்யக்கூடிய தொழிலாளிக்குப் பெயர்தான் எங்கள் ஆதிதிராவிட சகோதரர். எங்கள் சகோதரர். அவன் சேற்றில் காலை வைக்கவில்லை என்றால், நாமெல்லாம் சோற்றில் கைவைக்க முடியாது.
இன்றைக்கு இவ்வளவு பேர் சாப்பிடுகிறோம், தலைவாழை இலை போட்டு. அவன் சாப்பிடவில்லை என்பதற்காக நாம் அரிசியாகவே கொடுத்துவிடுகிறோம், மூட்டைக்கட்டி.
அவர்களுடைய உழைப்புதான் இந்த சமுதாயத்தை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றது!
அந்தப் பணியை செய்கின்றவர்களை, ‘‘எட்டி நில்! தொடாதே! கீழ்ஜாதி, கிட்டே வராதே!” என்று சொன்ன வழக்கத்தை ஒழித்து, அவர்தான் மனிதர்! அவர்களுடைய உழைப்புதான் இந்த சமுதாயத்தை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றது என்று சொன்ன, சொல்லுகின்ற, நிலை நிறுத்துகின்ற தலைவர் தந்தை பெரியார். வடக்கே இந்நிலை இருக்காது.
தந்தை பெரியார் அவர்கள்தான் இதை நடை முறைப்படுத்தினார்.
யாழ்திலீபன் அவர்களை நான் 40 ஆண்டுகளாக அறிவேன். இளைஞராக இருந்த காலத்திலிருந்து அவர் இயக்கத்திற்கு வந்ததைப்பற்றி சொன்னார்கள்.
அதேமாதிரி உங்களுக்கெல்லாம் என்னைப்பற்றியும் தெரியும். 10 வயதிலிருந்து இன்றைக்கு 91 வயது வரையில், 80 ஆண்டுகளாக மக்களை நான் சந்தித்துக் கொண்டிருக்கின்றேன். மற்றவர்களை விட்டுவிடுங்கள், எங்கள் தோழர்களுக்கே நான் என்ன ஜாதி? என்று தெரியுமா? யாருக்கும் தெரியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கற்பனையை செய்துகொண்டிருப்பார்கள்.
இதில் ஒன்றும் ஒப்பனை இல்லை, நடிப்பில்லை, போலித்தனம் இல்லை!
அதேபோன்று, யாழ்திலீபனை 40 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். உண்மையாகச் சொல்கிறேன், இதில் ஒன்றும் ஒப்பனை இல்லை, நடிப்பில்லை, போலித்தனம் இல்லை.
அவர் என்ன ஜாதி என்று எங்களுக்குத் தெரியாது. நம்முடைய மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் போன்று இருப்பவர்கள், தேர்தலில் நிற்கிறார்கள். அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஜாதி தெரிந்தாகவேண்டும். ஏனென்றால், ஜாதி ஓட்டுக்கள் வாங்கவேண்டும் என்பதற்காக. கிருஷ்ணமூர்த்தி தேர்தலில் நின்றாலும், நம்முடைய அமைச்சர் எம்.ஆர்.கே. தேர்தலில் நின்றாலும், கணக்குப் போட்டுப் பார்க்கவேண்டும். எந்தெந்த ஓட்டு எப்படி வரும்? அந்த ஓட்டுகளுக்கு யார் குறி வைக்கிறார்கள்? என்று.
தமிழ்நாட்டில் அவர்களால்
டெபாசிட்டே வாங்க முடியவில்லை!
ஆனால், இன்றைக்கு நன்றாகத் தெளிவாகத் தெரிந்து போய்விட்டது. ஜாதியை வைத்துக்கொண்டு, தேசியம் பேசி, கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதுபோன்று கிட்ட நெருங்கினாலும், அந்தக் கதையெல்லாம் தமிழ்நாட்டில் நடக்காது என்று தெரிந்துவிட்டது. தமிழ்நாட்டில் அவர்களால் டெபாசிட்டே வாங்க முடியவில்லை.
ஜாதி இல்லாதவர்கள்தான் தமிழ்நாட்டில் தொடர்ந்து
வெற்றி பெறுகிறார்கள்!
40-க்கு 40 என்று, ஜாதியே இல்லாதவர்தான் வெற்றி பெற்றிருக்கிறார். இன்னுங்கேட்டால், பெரும்பான்மை ஜாதி இல்லாதவர்கள்தான் தமிழ்நாட்டில் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள்.
இதுதான் தமிழ்நாடு – இதுதான் பெரியார் மண் – இதுதான் திராவிட மண்ணினுடைய பெருமையாகும்.
எங்கள் உறவுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
ஒன்று, தோழர்கள் இங்கே சொன்னதுபோன்று, குருதி உறவு – ரத்தப் பாசம் – அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று ரத்தப் பாசம் – அந்தக் குடும்பத்தில் பிறந்ததினால்.
அதுகூட 100-க்கு 100 சரியில்லை. ஏனென்றால், குருதிக் கொடை அளித்தால், செட்டியார் ரத்தம் செட்டியாருக்கு, வன்னியர் ரத்தம் வன்னியருக்கு, நாடார் ரத்தம் நாடாருக்கு என்றா கொடுக்கிறார்கள். ஆதலால், அப்படியொன்றும் இல்லை.
பார்ப்பான் உண்டாக்கினான், ஆரியன் உண்டாக்கினான்!
ஜாதி என்பது கற்பனை. பார்ப்பான் உண்டாக்கினான், ஆரியன் உண்டாக்கினான். அதை நம்மாட்கள் பிடித்துக்கொண்டு, மயக்க மருந்து உட்கொண்டவர்கள் போன்று ஆட்டம் ஆடுகிறார்கள்.
ஜாதி வெறியை உண்டாக்கி, அதனைத் தேர்தல் வரையில் கொண்டுபோகலாம் என்று நினைத்தார்கள், அது நடக்கவில்லை தமிழ்நாட்டில்.
இவர் ஜாதித் தலைவர், அவருக்கு அதிகமான செல்வாக்கு இருக்கிறது தமிழ்நாட்டில் என்று, மோடி சான்றிதழ் கொடுத்தார். ஆனால், அவருக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் காட்டிவிட்டார்கள்.
ஜாதி குறித்து ஒரு உதாரணம்!
ஜாதி குறித்து ஒரு உதாரணம் சொல்கிறேன், நான் அடிக்கடி சொல்கின்ற உதாரணம்தான் இது.
அய்யங்கார் ஒருவர் கார் ஓட்டிக்கொண்டு செல்லும்பொழுது, சாலை விபத்து ஏற்பட்டு, ஒரு நர்சிங் ஹோமில் சேர்க்கிறார்கள். முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, அவர் காப்பாற்றப்படுகிறார். ஆனால், அவருடைய காலில் அடிபட்டு இருப்பதால், உடனே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும்.
அந்த அய்யங்காரிடம் டாக்டர் வந்து, ‘‘உங்கள் உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால், உங்கள் காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டும்” என்கிறார்.
‘‘சரி, டாக்டர் செய்யுங்கள்” என்று அந்த அய்யங்காரும் சொல்கிறார்.
‘‘உங்களுடைய ரத்தப் பிரிவு என்னவென்று தெரியுமா?” என்று டாக்டர் கேட்டார்.
அந்த அய்யங்கார், ‘‘இந்த வகை ரத்தப் பிரிவு” என்று அவரும் சொல்கிறார்.
இங்கே அமர்ந்திருக்கக்கூடியவர்களில்கூட அவர வர்களுடைய ரத்தப் பிரிவு என்னவென்று தெரிந்து வைத்திருக்கிறார்களா? என்றால், கிடையாது. எதை நினைவில் வைத்திருக்கவேண்டுமோ, அதை மறந்து விடுகிறார்கள். எதை மறக்கவேண்டுமோ, அதை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் இன்ன ஜாதி; முதலியார் சமுதாயத்தில், நாங்கள் இன்ன முதலியார் பிரிவைச் சார்ந்தவர்கள். அவர்களிலேயே உயர்ந்த பிரிவு நாங்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
‘‘நான் அய்யங்கார் ரத்தப் பிரிவு’’
என்றா சொல்வார்?
அப்படி வரும்பொழுது, அந்த அய்யங்காரிடம் உங்களுக்கு என்ன ரத்தப் பிரிவு என்று டாக்டர் கேட்கும்பொழுது, அந்த அய்யங்கார், ‘‘நான் அய்யங்கார் ரத்தப் பிரிவு” என்றா சொல்வார்? அப்படி ஒரு ரத்தப் பிரிவும் கிடையாது.
ஏ1 பாசிட்டிவ், பி பாசிட்டிவ், ஓ பாசிட்டிவ் என்று ஏதாவது ஒன்றைத்தான் அவர் சொல்வார்.
‘‘சரி, உங்கள் ரத்தப் பிரிவுப்படி இரண்டு பாட்டில் ரத்தம் தேவைப்படுகிறது. அதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம், ரத்தம் கிடைத்தால்தான், அறுவைச் சிகிச்சை செய்ய முடியும்; இப்பொழுது ஒருவர் வந்திருக்கிறார் ரத்தம் கொடுப்பதற்கு” என்று டாக்டர் சொல்கிறார்.
‘‘சரி டாக்டர், நீங்கள் அறுவை சிகிச்சையை செய்ய லாம்” என்று அய்யங்கார் சொல்கிறார்.
‘‘உங்களிடம் அனுமதி கேட்பதற்காகத்தான் வந்திருக்கின்றேன்” என்று டாக்டர் சொல்கிறார்.
‘‘என்னிடம் என்ன அனுமதி கேட்கவேண்டி இருக்கிறது?” என்று அய்யங்கார் கேட்கிறார்.
‘‘உங்கள் ரத்த வகை ஏ1 பாசிட்டிவ் பிரிவு – அந்த ரத்தப் பிரிவு என்பது அரிய வகை பிரிவாகும். அந்த ரத்தப் பிரிவு உள்ள ஒரு இளைஞர் குருதிக் கொடை அளிப்பதற்காக வந்திருக்கிறார். அதற்காகத்தான் உங்கள் அனுமதியைக் கேட்க வந்திருக்கிறேன்” என்று சொல்கிறார் டாக்டர்.
‘‘பிறகு என்னங்க, ரத்தம் கொடுக்கத்தான் ஒருவர் வந்திருக்கிறாரே, என்னிடம் என்ன அனுமதி கேட்கவேண்டி இருக்கிறது; அறுவைச் சிகிச்சையை செய்யலாமே?” என்று சொல்கிறார் அய்யங்கார்.
‘‘அது இல்லீங்க. நீங்கள் அய்யங்கார். ரத்தம் கொடுக்க வந்தவர் ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்தவர். அவருடைய ரத்தத்தை உங்கள் உடலில் ஏற்ற லாமா? ஏனென்றால், அவர்கள் தொட்டாலே, நீங்கள் குளிக்கவேண்டும் என்று சொல்வீர்களே? ஆகவே, உங்கள் அனுமதி இல்லாமல், உங்கள் உடலில் அவருடைய ரத்தத்தை ஏற்றலாமா? என்றுதான் கேட்க வந்தேன்” என்கிறார் டாக்டர்.
‘‘இல்லீங்க, நான் இறந்து போனாலும் பரவாயில்லை; ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்தவருடைய ரத்தத்தை என் உடலில் ஏற்றவேண்டாம்” என்றா சொல்வார்.
நான் பெரியார் கட்சியில் எவ்வளவோ நாட்களுக்கு முன்பு சேர்ந்துவிட்டேன்!
உடனே, டாக்டர் கையைப் பிடித்துக்கொண்டு, ‘‘இப்பொழுதெல்லாம் யாருங்க, ஜாதியைப் பார்க்கிறார்கள். நான் பெரியார் கட்சியில் எவ்வளவோ நாட்களுக்கு முன்பு சேர்ந்துவிட்டேன். உடனே அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்” என்று சொல்கிறார் அந்த அய்யங்கார்.
அப்படியென்றால், இங்கே எங்கே ஜாதி இருக்கிறது? இதிலிருந்து என்ன தெரிந்து கொள்கிறீர்கள்?
குருதிக்கொடை – உடற்கொடை கொடுக்கும்பொழுது
மதமோ, ஜாதியோ பார்ப்பதில்லை!
ரத்தம் கொடுக்கும்பொழுது மதமோ, ஜாதியோ பார்ப்பதில்லை. அதேபோன்று, உடல் உறுப்புக் கொடை பெறும்பொழுது, இன்னின்ன மதத்துக்காரருக்கு, இன்னின்ன மதத்தைச் சார்ந்தவர்களின் உடல் உறுப்புகள்தான் பொருத்தப்படும் என்று இருக்கிறதா? அல்லது இன்னின்ன ஜாதியைச் சார்ந்தவருக்கு, இன்னின்ன ஜாதியைச் சேர்ந்தவர்களின் உடல் உறுப்புகள்தான் பொருத்தப்படும் என்று இருக்கிறதா?
அப்படியென்றால், அங்கே ஜாதி எங்கே போயிற்று?
ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவருடைய ரத்தம்தானே, அய்யங்கார் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது.
ஆகவே, ஜாதி என்ற ஒன்று கிடையாது.
மூன்று உறவுகள் இருக்கிறது என்று சொன்னேன்.
ஒன்று, குருதி உறவு.
குருதி உறவு என்பது சாதாரணம்தான். அது ஒரு விபத்து. எந்த ஜாதியில் பிறக்கிறோம், யார் அப்பா, அம்மா என்பது அவரவர்களைப் பொருத்தது.
ரத்த உறவைவிட, எங்கள் கொள்கை உறவு கெட்டியானது!
இரண்டாவது, கொள்கை உறவு! கொள்கை உறவு என்பது இருக்கிறதே, அது நாம் விரும்பி இணைந்தது.
இந்த உறவுதான் எங்களைப் பொறுத்தவரையில், கெட்டியான உறவாகும். எனக்கு யார் நெருக்கம் என்றால், கொள்கைத் தோழர்கள்தான் எனக்கு நெருக்கம்.
எங்கள் இல்லத் திருமணத்திற்கு நேற்று சென்றோம். அங்கே எல்லா பிள்ளைகளும் வந்தார்கள். நிறைய பேரப் பிள்ளைகள் வந்தார்கள். நான் சொன்னேன், ‘‘நீங்கள் யார், யாரென்று எனக்குத் தெரியாது. ஆகவே, யார், யாரென்று முதலில் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், பொதுவாழ்க்கையில், எப்பொழுதோ ஒருமுறைதான் உங்களையெல்லாம் சந்திக்கின்றேன்” என்றேன்.
ஆனால், இதை நம்முடைய இயக்கத் தோழர்களிடம் சொல்லமாட்டேன். ஏனென்றால், ஒவ்வொரு தோழரும் எங்கள் இயக்கத்தில், யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களுடைய கஷ்ட நஷ்டங்கள் என்ன? அவர்களுடைய நிலைமை என்ன? என்பதைப்பற்றி, அவர்களிடம் அன்றாடம் பழகிக்கொண்டு இருக்கக்கூடிய, அவ்வளவு நெருக்கமான உறவு என்றால், அது கொள்கை உறவு.
மூன்றாவது கல்விக் குடும்ப உறவு!
மூன்றாவது உறவு எதுவென்றால், எங்களுடைய கல்விக் குடும்ப உறவு.
வெளிநாடுகளுக்குச் செல்லும்பொழுது, அங்கே என்னை சந்தித்து, ‘‘நான் பெரியார் மணியம்மை கல்லூரியில் படித்தேன்” என்று சொல்லக்கூடியவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.
ஆகவே, அந்த வகையில், இந்த மணவிழா எங்கள் இல்ல மணவிழாவாகும். ஓர் எளிய தோழராக இருந்து, நேர்மையான வாழ்க்கை வாழ்பவர் யாழ்திலீபன் அவர்கள். திட்டமிட்ட வாழ்க்கை வாழ்ந்து, தன்னுடைய பிள்ளை யாழ்வீரமணியை படிக்க வைத்திருக்கிறார்.
அதேபோன்று மணமகளுடைய குடும்பத்தாரையும் பாராட்டவேண்டும். மணமக்கள் இரண்டு பேரும் பட்டயப் படிப்புப் படித்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில், அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்று கேட்டனர். ஆனால், இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் மணமக்களைப் பாருங்கள்; நான் பார்த்து, மகிழ்ச்சியடைகின்ற விஷயம் என்னவென்றால், மணமகளாக இருக்கக்கூடிய அருமைத் திரு.ரஞ்சிதா -மணமகன் யாழ்வீரமணி இரண்டு பேரும் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டு, சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நம்மைச் சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்தவர் தந்தை பெரியார்!
இதே புரோகித முறையில் நடைபெறும் மணவிழா என்றால், மாஞ்சுள்ளிகளைப் போட்டுக் கொளுத்தி, புகை எழுந்து மணமக்கள் கண்களில் கண்ணீர்தான் வரும். இதுபோன்று சிரித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
நம்மைச் சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்தவர் தந்தை பெரியார் அவர்கள். அதுதான் சுயமரியாதைத் திருமணம்.
இங்கே அமர்ந்திருக்கும் பாட்டிமார்களிடம் கேட்டுப் பாருங்கள், 50 ஆண்டுகாலத்திற்கு முன்பு இங்கே இருக்கும் மணமகள்போன்று சிரித்துக்கொண்டு மணமகள் இருப்பாரா? என்று.
இல்லவே இல்லை என்று சொல்வார்கள். மணமேடை யில் அமர்ந்தால், தலையை கீழே குனிந்து, நட்டுக் கொண்டுதான் இருக்கவேண்டும். இந்தப் பயிற்சியை மணவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே சொல்லிக் கொடுப்பார்கள். தலையை நிமிர்ந்து பார்த்தால், திமிர் பிடித்தவள் என்று நினைத்துவிடுவார்கள் என்று சொல்லி, கழுத்தை குனிவதற்காகவே பயிற்சி கொடுப்பார்கள். இது சுயமரியாதை இயக்கம் வருவதற்கு முன்பு.
குனிந்த தலையை நிமிர்த்தியவர்கள் இரண்டு பேர்தான்!
ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக நம்முடைய தாய்மார்கள், பெண்கள், மகளிர், சகோதரிகளின் குனிந்த தலையை நிமிர்த்தியவர்கள் இரண்டு பேர்தான்.
ஒருவர் தந்தை பெரியார்.
இன்னொருவர் போட்டோ கிராபர்.
மணவிழாவில், தலையைக் கொஞ்சம் நிமிருங்கள்; இன்னும் கொஞ்சம் நிமிருங்கள் என்று மணமகளைப் பார்த்துச் சொல்வார் போட்டோ கிராபர்.
இப்படி குனிந்த தலையை நிமிர வைத்ததுபோல், வளைந்த சமூகத்தை நிமிர வைத்த இயக்கம் தந்தை பெரியாருடைய இயக்கமாகும்.
மணமக்களைப் படிக்க வைத்திருக்கிறார்கள். மணமகன் துபாய் நாட்டில் பணி செய்கிறார். யாழ்திலீபன் அவர்களுடைய வாழ்க்கைத் துணைவியாரைப் பாராட்டுகிறோம். இவ்வளவு வெற்றிக்கும் காரணம் அந்த அம்மையார்தான். அதேபோன்று, அவருடைய தாயார்.
ஆகவே, பெற்றோரிடம் அன்பு காட்டவேண்டும் பிள்ளைகள். வாழ்வில் நீங்கள் எவ்வளவு உயர்ந்தாலும், பெற்றோருடைய தியாகத்தால்தான் நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள், பட்டதாரிகள் ஆகியிருக்கிறீர்கள். ஆகவே, அவர்களை நீங்கள் மறக்கக்கூடாது.
உங்களிடமிருந்து உங்கள் பெற்றோர் பணத்தை எதிர்பார்க்கவில்லை, பாசத்தைத்தான் எதிர்பார்க்கிறார்கள். எங்கள் இயக்கக் குடும்ப பிள்ளைகளுக்காக இதை நான் சொல்லவில்லை; எங்கள் இயக்கப் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள். மற்றவர்களுக்காக இதை நான் சொல்கிறேன்.
வீரமணி என்ற பெயருக்கே பஞ்சமில்லை!
இந்தப் பகுதியில், வீரமணி என்ற பெயருக்கே பஞ்சமில்லை. மணமகன் பெயர் வீரமணி; மணவிழாவிற்குத் தலைமை தாங்குகின்றவருடைய பெயர் வீரமணி. மேடையில் இன்னொரு வீரமணி என்று ஏகப்பட்ட வீரமணிகள் இருக்கிறார்கள்.
வீரமணி தலைமையில் வீரமணிக்குத் திருமணம் என்று அழைப்பிதழில் இருப்பதைப் பார்த்து, சிலர் குழப்பமடைவார்கள்.
இந்தப் பகுதிக்கு வரும்பொழுது எனக்கு ஓர் உணர்ச்சி ஏற்படுகிறது. அய்யா புவனகிரி நமச்சிவாயம், பெருமாத்தூரைச் சேர்ந்தவர். அந்த ஊர்தான் இயக்கத்திற்குப் பாசறை. நாங்கள் எல்லாம் பிறக்காத காலத்தில், புவனகிரியில் கழகத்தை வளர்த்தவர்.
புவனகிரி அய்யா நமச்சிவாயம்!
ஏழாவது சர்வாதிகாரியாக இருந்தவர் ஹிந்தி எதிர்ப்பில் – நம்முடைய புவனகிரி அய்யா நமச்சிவாயம் அவர்கள். சிதம்பரம் கிருஷ்ணசாமி அவர்கள்தான் அவரோடு கடைசி வரையில் நெருக்கமாக இருந்தவர்.
சிதம்பரநாதன் என்பவர் இருந்தார். இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. வயதானவர்களுக்குத் தெரியும்.
1938 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழர் பெரும்படை – ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், இராஜகோபாலாச்சாரியார் ஆட்சியில், தண்டிக்கப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
கையில் இரும்பு உலக்கையைக் கொடுத்து நெல்லுக் குத்தச் சொன்னார்கள்!
முதலில் ஹிந்தியை ஆதரித்தார்; பிறகு அவரே ஹிந்தியை ஒழித்தார். அவரே ஹிந்திக்கு எதிராக மாறினார், தி.மு.க.வில் சேர்ந்தவுடன். கையில் இரும்பு உலக்கையைக் கொடுத்து நெல்லுக் குத்தச் சொன்னார்கள்.
சிங்காரவேலு அடிகளார்!
இவற்றையும் தாண்டி சிங்காரவேலு அடிகளார் என்பவர் இருந்தார். ‘விடுதலை’யில், பழைய செய்திகளையெல்லாம் வெளியிடுகிறோம். அப்படி பழைய செய்தி வெளிவரும்பொழுது, நேற்று முன்தினம் வெளியிட்ட ஒரு புத்தகம் இது. விடுதலைக் களஞ்சியம் 2, 3 தொகுதிகள்.
இந்தப் புத்தகத்தில், ‘‘கலப்பு சுயமரியாதைத் திருமணம்” என்ற தலைப்பில் ஒரு செய்தி.
12.2.1937 ஆம் ஆண்டு வெளிவந்த ஏ.கே.இராமநாதன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை இது.
நான் அப்பொழுது மூன்று வயது குழந்தை.
இன்றைய இளைஞர்களுக்கு அந்த வரலாறு தெரியவேண்டும்.
கலப்பு சுயமரியாதைத் திருமணம்
(ஒரு நிருபர்)
மேல்புவனகிரி, பிப். 10
தாது வருஷம் தை மாதம் 25ஆம் தேதி (7.2.1937) ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு மேல் புவனகிரி பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கத்தின் ஆதரவில் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் எஸ்.சோமசுந்தர பாரதியார் எம். ஏ. பி. எல். அவர்கள் தலைமையில் மேல் புவனகிரி ஸ்கூல் உபாத்தியாயர் கே. சேதுபதி அவர்களுக்கும் ஸ்கூல் உபாத்தியாயினி எஸ்.தனக்கோடி அவர்களுக்கும் கலப்பு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. அதுசமயம் உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் ஆண்களும் பெண்களுமாக சுமார் 500க்கு மேற்பட்ட ஜனங்கள் விஜயம் செய்திருந்தார்கள்.
பாரதியார் அவர்கள் தமிழர் திருமணம் என்பது பற்றிச் சொற்பொழிவாற்றிவரும் போது தமிழர் தோன்றிய நாள் தொட்டே இத்திருமணங்கள் உண்டென்றும், சுயமரியாதைக்காரருக்குப் பின்னால் தோன்றியதல்ல வென்றும். சுயமரியாதைக்காரருக்கு மாத்திரம் தனிப்பட்டதல்லவென்றும் சொல்லி, இதே மாதிரி உயர்ந்த ஸ்தாபனமாகிய காங்கிரஸ் கட்சி இருக்கும் போது சிறுபான்மையராகிய ஜஸ்டிஸ் கட்சி வேண்டியதில்லை என்றும் பார்ப்பனரல்லாதார் சீர்திருத்தத்தினால் பார்ப்பனர்கள் தானே போய் விடுவார்களென்றும், அதற்கென தனிகட்சி வேண்டியதில்லை என்றும் பேசி வரும்போது கூட்டத்திலிருந்த பார்ப்பனரல்லாதாருக்கு மனமாற்றம் ஏற்பட்டது.
உடனே திரு. சிங்காரவேல் சுவாமிகள் அவர்கள் எழுந்து திரு. பாரதியார் அவர்கள் சொற்பொழிவில் சிற்சில மாற்றங்கள் காணப்படுவதால் அது தகுதியுடைமையன்றென்றும், இத்திருமணம் நடைபெறுவதற்கும் பார்ப்பனியக் கொடுமை ஒழிவதற்கும், காரணம் தோழர். திரு. வெ. ராமசாமியும், அவரது தனிக் கட்சியுமேயாகு மென்றும் அவர் (ஈ.வெ.ரா.) ஒருவர் இல்லாவிட்டால் இன்று நாம் தாசி மகனாய்ப் பார்ப்பன ஆதிக்கத்தால் படு குழியில் தள்ளப்பட்டு பார்ப்பன அடிமையாய் இருக்க வேண்டுமென்றும், அந்தத் தனிப் பெருமை அவருக்கே உரியதென்றும், அவர் தொண்டு நீண்டு நிலவுக வென்றும் பாராட்டி மணமக்களை ஆசி கூறி, காங்கிரசினின்றும் இன்னும் பல தமிழர் வெளியேற வேண்டுமென்றும் பாரதியாராகிய நீங்களும் வெளியேற வேண்டுமென்றும் விளக்கமாகப் பேசி முடித்தார்.
பின் கற்கண்டு, சந்தனம், தாம்பூலம் வழங்கி மணமக்களுக்கு ஆசி கூறி திருமணம் இனிது நிறைவேறியது.
இங்ஙனம்,
ஏ.கே. ராமநாதன்,
காரியதரிசி.
– ‘விடுதலை’ 12.02.1937
தமிழ்நாடு பெரியார் மண்!
இன்றைக்கு அதுதான் நடந்திருக்கிறது. காங்கிரசே நம் வழிக்கு வந்தாகிவிட்டது. ராகுல் காந்தி, மோடியை வைத்துக்கொண்டே சொன்னார், ‘‘மோடி ஜி, இன்னும் நூறு முறை தமிழ்நாட்டிற்குச் சென்றாலும், நீங்கள் ஆட்சியை அங்கே பிடிக்க முடியாது. காரணம், தமிழ்நாடு பெரியார் மண்” என்று சொன்னார்.
ஆகவே, இந்த இயக்கத்தின் வேர் எவ்வளவு பலமானது என்பதைப் பாருங்கள். திடீரென்று வெற்றி பெறவில்லை இந்த இயக்கம்.
90 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு இது.
அப்படிப்பட்ட அற்புதமான ஒரு கொள்கை. அந்தக் கொள்கையின்படி யாழ்திலீபன் வாழ்ந்ததினால்தான், பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்திருக்கிறார். எல்லா வகையிலும் நேர்மையாக, நாணயமாக, மற்றவர்கள் மதிக்கக்கூடிய அளவிற்கு இக்குடும்பம் இருக்கிறது.
கொள்கைப் பல்கலைக் கழகம்!
இன்றைக்கு இந்த மணவிழாவினை நடத்தி வைப்பதில் நான் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன். இது நம் குடும்பம் – எங்கள் குடும்பம் – நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்றார் புரட்சிக்கவிஞர் அவர்கள்.
இது ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம். இவர்களைப் பாராட்டி, மணமக்கள் இப்போது உறுதிமொழி சொல்லி, வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சியை நடத்திக் கொள்வார்கள்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
வாழ்க மணமக்கள்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.