சென்னை, ஜூன் 18- மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மய்யமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ,
சிறு புத்தகங்களின் மூலமாக மாணவர்களுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கி தொடர் வாசிப்பை செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். ஒரு கதை ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் இந்த புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மய்யமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து நூலக பாடவேளையில் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை மாணவர்களிடம் அளித்து அவர்கள் முறையாக வாசிக்கிறார்களா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். மாணவர் வாசிப்புத் திறன் மேம்பாட்டில் உயரதிகாரி முதல் ஆசிரியர் நிலை வரை ஒரு கூட்டு நடவடிக்கை அவசியமாகிறது. வாசிப்பு இயக்கத்தின் நோக்கம், தேவை, கதை வாசிப்புக்கான நேரம், தலைமை ஆசிரியர் பணிகள் போன்ற வழிகாட்டுதல்கள் இந்த கையேட்டில் இடம் பெற்றுள்ளன. இதை தலைமையாசிரியர்கள் முழுமையாக படிக்க வேண்டும்.
இதுதவிர 1 முதல் 12ஆம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கப் புத்தகத் தொகுப்புகள் வழங்கப்படும். 4 முதல் 9 வரை உள்ள வகுப்புகளுக்கான கால அட்டவணையில் நூலக பாடவேளைகள் இருப்பது உறுதி செய்யப்படும். இலக்கிய மன்ற செயல்பாடுகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வாசிப்பு இயக்க புத்தகங்கள் பயன்படுத்தப்படும். இதுகுறித்து ஆய்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘நீட்’ – தொடரும் தற்கொலை
கோட்டா, ஜூன் 18- ராஜஸ்தானில் நீட் மற்றும் பொறியியல் போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர், தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் மோதிஹாரியைச் சேர்ந்த 17 வயதான ஆயுஷ் ஜெய்ஸ்வால் என்பவர், ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள ஒரு கட்டண விடுதியில் இரண்டு ஆண்டுகளாகத் தங்கி, மருத்துவம் மற்றும் அய்அய்டி – ஜேஇஇ தேர்வுக்காக படித்து வந்தார். இந்நிலையில், ஜெய்ஸ்வால் 15.6.2024 அன்று இரவு வரையில் அறையை விட்டு, வெளியே வரவில்லை என அவரது நண்பர்கள் விடுதி உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர், விடுதிக்கு வந்த காவல்துறையினர் ஜெய்ஸ்வால் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, ஜெய்ஸ்வால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
ஜெய்ஸ்வாலின் உடலை மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் முன்னரே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அவரது குடும்பத்தினர் வந்த பிறகே உடற்கூராய்வு நடத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், ஜெய்ஸ்வாலின் அறையில் தற்கொலைக் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, 2024ஆம் ஆண்டில் ஜெய்ஸ்வால் உள்பட 11 போட்டித் தேர்வாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம், அய்க்கிய ஜனதா தள கட்சிகளை அமித்ஷாவும் மோடியும் உடைப்பார்கள்
சஞ்சய் ராவத் கணிப்பும் எச்சரிக்கையும்
புதுடில்லி, ஜூன் 18- ஏனைய கட்சிகளைப் போன்று, தெலுங்கு தேசம், அய்க்கிய ஜனதா தளம் கட்சிகளையும்மோடியும், அமித் ஷாவும் சேர்ந்து உடைப்பார்கள் என்று சிவசேனா (உத்தவ் பாலசாஹேப் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களி டம் அவர் மேலும் கூறியதாவது: நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான இந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014 மற்றும் 2019ஆம் ஆண்டைப் போலல்லாமல் நிலையற்றதாகவே இருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சேர்ந்து தெலுங்குதேசம், அய்க்கிய ஜனதா தளம், மற்றும் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியையும் விரைவில் உடைப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) இதனை ஒரு எச்சரிக்கையாகவே தெரிவிக்கிறேன்.
என்டிஏ கூட்டணிவேட்பாளருக்கு மக்களவை சபாநாயகர் பதவி கிடைக்காவிட்டால் இதனை அவர்கள் நிச்சயம் செய்து முடிப்பார்கள். பாஜகவின் தந்திரங்களை உணர்ந்தவன் என்ற அடிப்படையில்தான் நான் இதை கூறுகிறேன். சந்திரபாபு நாயுடுவின் கட்சிக்கு மக்களவைத் தலைவர் பதவி கிடைத்தால் அதை நாங்கள் வரவேற்போம். நிலைமை மாறினால், இந்தியா கூட்டணி மக்களவையில் தங்களது பலத்தை வெளிப்படுத்தும். ஒட்டுமொத்த இந்தியா கூட்டணி கட்சிகளும் ஒன்றுகூடி விவாதித்து சந்திரபாபுவின் பின்னால் நிற்கும்.
ஆர்எஸ்எஸுக்கு பங்கு
மணிப்பூரில் நிலைமை குறித்து ஆர்எஸ்எஸ் செய்த விமர்சனம் வரவேற்கத்தக்கது. அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் மோடி, அமித் ஷா ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் பாதிப் பங்கு உண்டு என்பதை ஆர்எஸ்எஸ் திறந்த மனதுடன் ஒப்புக் கொண்டுள்ளது. அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள விரும்பினால் அதுவே நல்ல விஷயம். இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.