ப.சிதம்பரம் கருத்து
சென்னை, ஜூன் 17- விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் (15.6.2024) தொடங்கியது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித் துள்ளது.
இந்நிலையில் பா.ஜ.க. கூட்ட ணியில் உள்ள பா.ம.க.வை வெற்றி பெற வைக்கவே அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது என்று ஒன்றிய மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விக்கிர வாண்டி தொகுதி இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் (பா.ம.க.) வெற்றி பெறவேண்டும் என்பதற்காக, மேலிடத்தில் இருந்து பெறப்பட்ட உத்தரவின் அடிப்படையில் அ.தி.மு.க. இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்தியா’ கூட்டணியை எதிர்த்து பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் போட்டியிடாமல், பா.ம.க.வை மோத வைத்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணியினர் தி.மு.க. வேட்பாளர் மிகப்பெரிய வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.”