பன்னாட்டு அளவில் காவல் துறை, தீயணைப்பு மீட்பு படையினருக்கான ‘போலீஸ் அண்ட் ஃபயர்’ விளை யாட்டுப் போட்டிகள் கனடாவின் வின்னிபெக் நகரில் ஜூலை 28இல் தொடங்கி கடந்த 6ஆம் தேதி வரை நடந்தன.
இப்போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை சார்பாகப் பலரும் கலந்துகொண்டு பதக்கங் களை வென்றுள்ளனர். இதில் சென்னையைச் சேர்ந்த தலைமைக் காவலர் லீலாசிறீ, ஹெப்டத்லான் (Heptathlon – 100 மீட்டர் தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட தடகள விளையாட்டுகளை ஒன்றிணைத்தது) பிரிவில் தங்கம், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளி, உயரம் தாண்டுதலில் வெண்கலம் என 3 பதக்கங்களைப் பெற்று நம்பிக்கை நட்சத்திரமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
மாவட்ட, மாநில, தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு தமிழக காவல்துறை பதக்கங்களை லீலாஸ்ரீ வென்றிருக்கிறார். இவரது சொந்த ஊர் சிதம்பரம். தந்தை முன்னாள் ராணுவ வீரர். சிறு வயதிலேயே காவல் துறை மீது ஈர்ப்பு இருந்ததால் இவரது கனவும் அதனை நோக்கியே பயணப்பட்டது. 2003ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் உத்தரவில் பணியில் நியமிக்கப்பட்ட மகளிர் காவலர்களுள் இவரும் ஒருவர்.
இவரது கணவரும் காவல் துறையைச் சேர்ந்தவர்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோய் காரணமாக அவரை இழக்க நேரிட்டது. இவருக்கு பொன் கோதை என்ற மகள் இருக்கிறார்.
தடகள விளையாட்டில் ஆர்வம்
சிறுவயதில் இருந்தே தடகள விளையாட்டுகளில் இவருக்கு ஈடுபாடு இருந்தது. பள்ளியில் படித்தபோது எஸ்தர் என்கிற உடற்பயிற்சி ஆசிரியர் தந்த ஊக்கத்தால் பள்ளியில் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். ஆனால், குடும்பச் சூழல் காரணமாக விளையாட்டை அவரால் தொடர முடியவில்லை. எனினும் காவல் துறையில் சேர்ந்த பிறகு தடகள விளையாட்டு மீதான தனது ஆர்வத்தை மெருகேற்றிக் கொண்டார். பணியில் சேர்ந்தது முதலே பல்வேறு விளையாட்டுப் போட்டி களில் பங்கேற்றுப் பதக்கங்களை வெல்லத் தொடங்கினார். இவரது திறமையைத் தமிழகக் காவல் துறையும் ஊக்குவித்தது. அதன் காரணமாய்த் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
விளையாட்டுப் போட்டிக்காக சென்ற கனடா பயணத்தில்தான் முதல் முதலாக வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த காவலர்களை இவர் கண்டுள்ளார். “அந்த அனுபவமே எனக்குப் பிரமிப்பாக இருந்தது. அமெரிக் காவைச் சேர்ந்த காவலர்கள் நன்கு உயரமாகவும், சிக்ஸ் பேக்கும் வைத்திருந்தனர். அவர்களைப் பார்த்த பிறகு நாம் இதில் வெற்றி பெறுவோமா என்கிற பயம் இருந்தது” எனத் தயக்கத்தைப் பகிர்ந்துகொண்டார் லீலா.
பயிற்சியளர் வழங்கிய தீவிரப் பயிற்சியாலும் விடா முயற்சியாலும் நம்பிக் கையுடன் விளையாடிப் பதக்கங்களை வென்றுள்ளது இவர்களது அணி.
2008க்கு பிறகு லீலாவுக்கு நடந்த, தொடர் அறுவைச் சிகிச்சை வாழ்க்கையையே தலைகீழாகத் திரும்பிப் போட்டு விட்டது. காலில் அறுவைச் சிகிச்சை, கர்ப்பப்பை நீக்கம், சிறுநீரக அறுவைச் சிகிச்சை உட்பட நான்கு அறுவைச் சிகிச்சைகள் அடுத்தடுத்து நடந்தன. அந்தக் காலக்கட்டத்தில் குடும்பத்திலும் பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளார். இதனால் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டாலும் தன் கவனத்தை விளையாட்டுப் பயிற்சிகள் பக்கம் திருப்பி மீண்டுள்ளார். விளையாட்டு, வாழ்க்கை சார்ந்து ஓர் ஒழுங்கை கற்றுக் கொடுத்ததாகச் சொல்கிறார் லீலா.
மகளிர் காவலர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதைக் கேள்விப் படும்போது வேதனை அளிப்பதாகவும் சொல்கிறார். மகளிர் காவலர்களும் பெண்களும் மனத் தைரியத்துடன் பிரச்சினை யிலிருந்து மீண்டு அவர்களுக்குப் பிடித்த துறைகளில் சாதிக்க வேண்டும். நமக்கு நாமே உந்துவிசையாக இருக்க வேண்டும் என்கிறார் நம்பிக்கையுடன் லீலா!