அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்பர்
திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, ஆக. 29 “விஸ்வகர்மா யோஜனா” என்ற பெயரில் பரம்பரைப் பரம்பரையாக செய்து வந்த ஜாதித் தொழிலை ஊக்குவிக்கும் வர்ணாசிரம – குலக்கல்வி திட்டத்தை ஒன்றிய பி.ஜே.பி அரசு கொண்டு வந்துள்ளது. 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது அப்பன் தொழிலை மகன் செய்வதற்கான சூழ்ச்சியாகும் – மேற்படிப்பைத் தடுப்பதும் ஆகும்.
இதனக் கண்டிக்கும் வகையிலும், எதிர்க்கும் வகையிலும் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று திராவிடர் கழகம் சென்னை பெரியார் திடலில் இன்று (29.8.2023) கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் வருமாறு:
குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவமான ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் சதித் திட்டத்தைக் கண்டித்து இன்று (29.08.2023) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம்:
‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் திட்டமும். அதில் அடங்கியுள்ள குலத் தொழில் பக்கம் இளைஞர்களை ஈர்க்கும் சூழ்ச்சியும்
பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசு, அண்மையில் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் சுதந்திர தினக் கொடியேற்று நிகழ்ச்சியிலும் (15.08.2023) இத்திட்டத்தை அறிவித்துள்ளார்.
செருப்பு தைப்பவர் உள்பட பரம்பரை பரம்பரையாக 18 வகையான ஜாதித் தொழில்களைச் செய்பவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகக் கூறி ரூபாய் 13 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. (ஜாதிப் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
‘குரு – சிஷ்யப் பரம்பரை’ என்றும் வெளிப்படையாகவே கூறப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பெறுவதற்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பது 18 வயது அடைந்த பிள்ளைகளை மேற்கொண்டு கல்லூரியில் படிக்கவிடாமல் பரம்பரை ஜாதித் தொழிலையே செய்யத் தூண்டும், குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சியாகும்.
இது 1952-1954இல் சென்னை மாநில முதலமைச்சராக இருந்த திரு.ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பாகும்.
ஆண்டாண்டு காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட பிள்ளைகள் கல்வியில் உயர்நிலையை எட்டுவதைத் தடுத்து நிறுத்தி, 18 வயது அடைந்தவுடன் அவர்களைப் பரம்பரை ஜாதித் தொழிலை நோக்கியே நகர்த்திடத் திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசின் இந்த வருணாசிரம சதித் திட்டத்தை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
நாக்கில் தேன் தடவுவது போல, நிதியை ஒதுக்கி, காலம் காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட மக்கள், தப்பித் தவறிக் கல்லூரியில் அடியெடுத்து மேற்படிப்பு படிக்க முன் வந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் அதனை முறியடிக்கும் சூழ்ச்சிப் பொறிதான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்பதை எடுத்துக்காட்டி இக்கூட்டம் இந்தக் குலக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறது.
பரம்பரை பரம்பரையாக ஜாதி தொழிலையே செய்ய வேண்டும் என்று பிள்ளைகளின் கல்விக் கண்ணைக் குத்தும் இந்தத் திட்டத்திற்குத் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், எதிர்க்க முன்வர வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
முதற்கட்டமாக இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவமான விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து அனைத்து சமூகநீதிக் கொள்கை சார்ந்த கட்சிகளும் ஒருங்கிணைந்து மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தை வரும் செப்டம்பர் 6ஆம் தேதியன்று சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைப்புகளின் பிரதிநிதிகள்:
· ஆசிரியர் கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
· ஆ.ராசா எம்.பி, துணைப்பொதுச்செயலாளர், தி.மு.க.
· கே.எஸ். அழகிரி, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
· தொல்.திருமாவளவன் எம்.பி., தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
· கே.எம். காதர் மொகிதீன், தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
· மு. வீரபாண்டியன், மாநிலத் துணைச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
· ஆ. வந்தியத்தேவன், அமைப்புச் செயலாளர், ம.தி.மு.க.
· க. கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சி.பி.அய்.எம்.
· ப. அப்துல் சமது எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர், மனித நேய மக்கள் கட்சி
· பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பொதுச்செயலாளர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை
· பொன்.குமார், தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி
· கோ. கருணாநிதி, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு
· பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச்செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை
· துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி மற்றும் அனைத்துக் கட்சிகளின் மேலும் பல பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.