ஒரே தீர்வு ‘நீட்’டை ஒழிப்பதே!

2 Min Read

‘‘நீட் வினாத்தாள் கசிவு – 23 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை ஏமாற்றும் செயல்’’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த மே மாதம் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த புகாரில் 2 மருத்துவ மாணவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியாகி வரும் நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது அம்பலமாகியுள்ளது.

இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு குறித்து காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:

“நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்ற செய்தி 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கனவுகளை ஏமாற்றும் செயல் ஆகும். 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர வேண்டும் என்று கனவு காணும் மாணவர்களாக இருந்தாலும் சரி, அரசு வேலைக்காக போராடும் நம்பிக்கைக்குரிய இளைஞர்களாக இருந்தாலும் சரி, மோடி அரசு அனைவருக்கும் சாபமாகி விட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், நீட்டிலிருந்து விலக்குக் கோரும் மாநிலங்களுக்கு அந்த உரிமை அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
இவ்வாண்டு மே மாதத்தில் நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் இந்தியா முழுமை யும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யுள்ளது.

பிஜேபி கட்சி ஆளும் மாநிலங்கள்கூட எதிர்ப்புக் குரலை ஓங்கி ஒலித்துள்ளன. ‘நீட்’ அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளன.

அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள நீட் பயிற்சி மய்யத்தில் பயின்ற 7 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றதுகூட அதிசயமல்ல; இந்த 7 பேரின் வரிசை எண்களும் தொடர்ச்சியாக உள்ளதுதான் – மோசடியின் முழு முகவரியையும் அம்பலப்படுத்துகிறது – சந்தேகத்தின் ஆழத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

இவை எல்லாவற்றையும்விட பெரிய அதிர்ச்சிக்குரிய தகவல் அடுத்தடுத்து 719, 718 மதிப்பெண்கள் பெற்றதாக அறிவிக்கப்பட்டதுதான்.

ஒரே ஒரு கேள்விக்குச் சரியான விடை அளிக்காவிட்டாலும் நான்கு மதிப்பெண்கள் குறைந்து 716 மதிப்பெண்கள்தான் பெற்றிருக்க முடியும். எப்படி 719, 718 பெற முடியும் என்பது அறிவார்ந்த கேள்வியாகும்.

ஏதோ கருணை மதிப்பெண்கள் கொடுக்கப் பட்டுள்ளனவாம்! ‘நீட்’ தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இப்படி ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டதில்லை.

தென்னை மரத்தில் ஏன் திருட்டுத்தனமாக ஏறினாய் என்று கேட்டால் புல் பிடுங்கப் போனேன் என்றானாம். அந்தக் கதையாக அல்லவோ இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் தலை முறையாக மருத்துவக் கல்லூரியில் சேரக் கனவு காணும் – சமூக அநீதியால் காலம் காலமாக உரிமை மறுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் குதிகால் எலும்பை முறிக்கும் ‘நீட்’டை அறவே ஒழிப்பதுதான் ஒரே தீர்வு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *