பேராசிரியர் மு.நாகநாதன்
நான்கு தேர்தல்களுக்கும்
ஒரு முடிச்சுப் போடலாமா
என்று கேள்வி எழுகிறதல்லவா!
இந்த நான்கு தேர்தல்களிலும் மத, ஜாதிய உணர்வுகளைத் தூண்டி, திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் முறியடிக்க இந்துத்வா கூட்டம் முயன்றது என்பது தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத, மறக்க கூடாத நிகழ்வுகள்.
இதன் தொடர்பாக எனது முகநூலில் 1971- 2019 ஆண்டில் தேர்தல்களும் மக்களும் எனப் பதிவில் எழுதியிருந்தேன்.
2022 ஆம் ஆண்டில் வெளிவந்த “பொறிகள்” என்ற எனது நூலிலும் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது.
1970 ஆம் ஆண்டில் ஒரு ஆர்.எஸ்.எஸ் சார்பு காவல் துறை ஆய்வாளர், தியாகராயர் நகரில் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, மண்ணிற்கு அடியில் இரவில் ஒரு பிள்ளையார் சிலையைப் புதைத்தார். அப்பிள்ளையாரைச் சில நாட்கள் கழித்து வெளியே தலைக்காட்டச் செய்தார். சுயம்பு பிள்ளையார் தோன்றியுள்ளார் என்ற செய்தி பரப்பப்பட்டது. மத இருளில் சிக்கி அறியாமையில் வாழும் பெருங்கூட்டம் கூடியது. இந்து நாளிதழ் உட்பட அனைத்து இதழ்களும் இச்செய்தியைப் பரப்பின.
உண்டியலில் பணம் குவிந்தது. கோயில் கட்டவும் திட்டம் தீட்டப்பட்டது. முதலமைச்சர் கலைஞர் காவல்துறை புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
புலனாய்வு செய்த இந்தியக் காவல் பணியில் இருந்த நேர்மையான அதிகாரி, இப்புரட்டுச் செயலுக்குப் பின்புலமாக செயல்பட்டவர் ஆர் எஸ்.எஸ் சார்பு காவல் ஆய்வாளர் என்பதைக் கண்டறிந்தார்.
முதலமைச்சர் கலைஞர் எடுத்த உடனடி நடவடிக்கையால் இருட்டில் புதைக்கப்பட்ட புரட்டுப் பிள்ளையார் காணாமல் போனது.
தியாகராயர்நகர் பிள்ளையாரைத் திரும்பக் கொண்டு வா என்று ஆர்.எஸ்.எஸ் சுவரொட்டிகளைத் தமிழ்நாடு முழுவதும் ஒட்டியது. ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நீதிக்கட்சியின் தலைவரான தியாகராயரை முழுப்பெயரில் அழைக்கமாட்டார்கள் அல்லவா!
இதுதான் ஆர்.எஸ்.எஸ். ஆடிய தேர்தல் அரசியல் திருவிளையாடலின் தொடக்கம்.
1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் மதவாத அரசியலைப் புகுத்தினார்கள்.
இந்துக்கள் மனதைப் புண்படுத்தியது கலைஞர் ஆட்சி என்று துக்ளக் சோ இராமசாமி தலைமையில் தொடர் பரப்புரை மேற்கொள்ளப்பட்டன. சோ துள்ளல்கள் மிகப் பெரிய அளவில் ஊக்குவிக்கப்பட்டன. துள்ளுகிற மாடு பொதி சுமக்காதல்லவா!
தேர்தல் களத்தில் இராஜாஜி, காமராசர் ஒன்றுபட்டு விட்டார்கள். தேர்தல் முடிவிற்குப் பின்பு திமுக தொலைந்தது என்று எல்லாவிதக் கொட்டங்களையும் ஊடகங்கள் பெரிய அளவில் ஆடின.
பெரியார் உறுதியாக அமைதியாக இந்த வெற்றுக் கூச்சல் கூட்டத்தின் ஆணவத்தை எதிர் கொண்டார். திமுக – இந்திரா காங்கிரசுக் கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார். திமுகவிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துப் பரப்புரைகள் மேற்கொண்டார்.
முதலமைச்சர் கலைஞரும், அன்று திமுகவின் பொருளாளராகப் பணியாற்றிய எம் ஜி ஆரும் தமிழ்நாடு முழுவதும் தீவிர பரப்புரை மேற்கொண்டனர். திமுக பெரும் வெற்றியைப் பெற்றது.
கலைஞர் மறைந்த பிறகு திமுகவின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது.
செல்வி. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பாஜக சங்கிகள் கூட்டம் ஓ.பி.எஸ் – அணி இபிஎஸ் அணி என இரண்டாக அதிமுகவைப் பிளந்தது.
அன்றாடம் காலையில் மயிலையில் குரு மாமா தரிசனம் செய்தார் ஓ.பி.எஸ். – மீண்டும் ஆளுநர் முன்னிலையில் ஒன்று சேர்ந்தனர்.
அதிமுக ஆட்சி என்ற பெயரில் சங்கிகள் கூட்டம் ஆட்சி நிருவாகத்தில் ஊடுருவல் செய்தன.
பிரதமர் நரேந்திரர் ஓடோடி வந்தார். ஒரு முறை அல்ல! பல முறைகள். 40ம் நமதே என்றனர் சங்கிகள்.
ஒரே ஒரு தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மகன் மட்டுமே வென்றார்.
2021 சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதற்கு முன் வருமான வரி சோதனைகள் அமலாக்கத் துறையின் ஆட்டங்கள் அவ்வப்போது விட்டுவிட்டுத் தொடர்ந்தன.
ஆளும் அதிமுக அடிபணிந்தது. 2021சட்டமன்றத் தேர்தலில் அளவுக்கு அதிகமாக பாஜக வேட்பாளர்களுக்கு இடங்கள் வழங்கப்பட்டன. பா.ம.க வையும் சேர்த்துக் கொண்டார்கள். பெருங்கூட்டணி என்று முழங்கினார்கள்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார்.
நரேந்திரர் பாடினார்.
இரவி ஆடினார்.
திமுக ஆட்சியில் கொண்டு வந்த பல சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுத்தார். மறுத்து வருகிறார்.
ஒட்டப்பட்ட ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இணையரை மீண்டும் சங்கிகள் பிரித்தனர்.
புதுடில்லி, கொங்கு மண்டலத்திலிருந்து ஒரு குள்ள நரியைக் கொண்டு வந்தது. ஒரு குள்ள நரி தனியாக நின்றே பெரும் வெற்றியைப் பெற முடியும் என்று ஊளையிட்டது. ஊளைச் சத்தம் ஊடகங்களிலும் நாள்தோறும் ஒலித்தது.
நேர்மையற்ற ஊடகங்கள். ஊளைச் சத்தத்தை இனிய ஓசை என்றன.
நரி அல்ல! இது
பாய்ந்து செல்லும் பரி
என்றன ஊடகங்கள்.
தலை எது வால் எது என்று
தெரியவில்லை நரிக்கு.
சேலத்தைப் பாழும் கிணற்றில் தள்ள நரி ஊளையிட்டது.
தப்பிப் பிழைத்தோம் என்று மீண்டும் இ.பி.எஸ் தனி வழியில் சென்றார்.
ஓட ஓட அலைந்து
நரேந்திரரைப் பார்க்க முடியாமல்
கதறிய ஓபிஎஸ்க்கு
ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அனுமதி தந்தது உள்துறை சங்கி. தேர்தல் முடிவுகள் வந்து பிறகுதான் அந்த குள்ள நரிக்கு, ‘தான் ஒரு பலி ஆடு’ என்று தெரிந்தது.
எல்லாவித ஆர்ப்பாட்டங்களையும், ஊடகங்கள் எழுப்பிய சங்கி ஆதரவு கூச்சல்களையும் அமைதியாகப் பார்த்தனர் மக்கள்.
நாற்பது இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றியைப் பெற்றது.
1971 இல் தொடங்கிய ஸநாதன ஜாதிய எதிர்ப்பு தொய்வின்றித் தொடர்கிறது.
தமிழ்நாடு சுயமரியாதை மண்.
நீதிக்கட்சி சமூக நீதிக்கு வித்திட்ட மண்.
பெரியார் பக்குவப்படுத்திய மண்.
அறிஞர் அண்ணா வளர்த்த அரசியல் நிலைப்பெற்ற மண்.
கலைஞர் சமூக நீதியை உயர்த்திப் பிடித்த மண்.
முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் பாதுகாப்பு அரணாக இருந்து பணிபுரியம் மண்.
ஆசிரியர் வீரமணியார் 91 வயதிலும் தொய்வின்றித் தொண்டறம் தொடரும் மண்.
இதை உணர்ந்த, பல நடுநிலையாளர்கள், நாடு அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்பிய நல்லவர்கள் இந்தியா கூட்டணி பக்கம் நின்றனர் .
ஏற்றத்தாழ்வு, விலை உயர்வு, வேலையின்மை போன்ற பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய காலக்கட்டத்தில் நாடு உள்ளது.
தடைகள் பலபல. எதிர் கொள்ள வேண்டிய அறைகூவல்கள் பலபல. ஆற்ற வேண்டிய கடமைகள் பலபல. அடகு வைக்கப்பட்ட தமிழ் மண்ணின் உரிமைகளை மீட்டெடுக்க மக்கள் உணர்ந்து வாக்களித்து ஊக்கப் பரிசை வழங்கியுள்ளார்கள்.
கண்ணியத்துடன் கவனத்துடன் பொறுப்புடன் மக்கள் பணித் தொடர வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பமாகும். வேட்கையும் ஆகும்.