பெரியார் திடலில், செய்திப் பிரிவில் நுழைந்த போது அந்த அய்யாவைப் பார்க்கிறேன். சட்டென்று மனதிற்கு நெருக்கமான முகம்! ஆனால் பெயர் நினைவுக்கு வரவில்லை! அருகில் இருந்த தோழரிடம் மெதுவாகக் கேட்கிறேன்.
பின்னர் அந்த அய்யாவின் அருகில் சென்று வணக்கம் கூறுகிறேன். மெதுவாக நிமிர்ந்து பார்த்தவர், என் பெயரை உடனடியாகக் கூறினார். அதுவும் முகப்பெழுத்தோடு கூறினார். ஒரு ஆழ்ந்த பணியாளருக்கும், மேலோட்டமாகச் செயல்படும் இன்றைய தலைமுறைக்குமான வேறுபாடு இதுதான்!
அவர்களின் அனுபவங்கள் தான், நமக்கான பொக்கிசங்கள்; அறிவுக் கொள்முதல்!
ஆம்! அந்த அய்யாவின் பெயர் ந.துரைராஜ். சொந்த ஊர் சென்னை, புரசைவாக்கம். இவர் பிறந்தது 12.06.1948. இப்போது வயது 75 ஆகிறது. தள்ளாடும் நடை, நிமிர்ந்து நிற்க முடியாத சூழல், பிசிர் தட்டும் குரல். இப்படியான சிரமங்களுடன் விடுதலை செய்திப்பிரிவில் என்ன செய்கிறார்? ஆம்! அதைச் சொல்வது தான் இந்தச் செய்தியின் நோக்கம்!
பழைய எஸ்.எஸ்.எல்.சி (11 ஆம் வகுப்பு) முடித்து, இவர் வேலை தேடிக் கொண்டிருக்கிறார். அப்போது “விடுதலை” நாளிதழில் சங்கர் என்கிற இவரின் உறவினர் “கம்போசிங்” பிரிவில் பணியாற்றியுள்ளார். அதுசமயம் பிழை திருத்துநர் வேலை ஒன்று இருப்பதாகக் கூறி, துரைராஜ் அவர்களை விடுதலையில் சேர்த்துள்ளார்.
இவர் தனது 30 ஆவது வயதில், 1978 ஆம் ஆண்டு பெரியார் திடல் பணிக்கு வருகிறார். புதிய வேலை என்றாலும், சிறுகச் சிறுகக் கற்றுக் கொண்டு, சில மாதங்களிலே முழுமையாகப் பணி செய்யத் தொடங்கியுள்ளார். விடுதலை, ஞாயிறு மலர், உண்மை, இயக்க நூல்கள் என அனைத்தையுமே பிழை பார்ப்பேன் என்கிறார்.
“ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவன் நான். ஆனால் கடவுள் மறுப்பு, ஜாதி, மத ஒழிப்பு, சாஸ்திர, புராண மூடநம்பிக்கைகள் எனத் தினம், தினம் இதையே படிக்கும் சூழல் இருந்தது. தொடக்கத்தில் ஒரு மாதிரியாகவும், சற்றுப் பயமாகவும் இருந்தது. பின்னர் நமக்கான தொழில் இதுதான் என்கிற அளவில் பழகிக் கொண்டேன். அதேநேரம் இந்த எழுத்துகள் என்னிடமும் கேள்விகளை எழுப்பி, சிந்தனைகளைத் தூண்டிவிட்டு, பகுத்தறிவு உள்வர காரணமாக இருந்தது”, என்கிறார்.
30 வயது இளைஞராகப் பணிக்கு வந்தவர், 32 வயதில் கோயிலுக்குப் போவதை நிறுத்திவிட்டார்! தொடர்ந்து தமது பிழை திருத்துநர் பணியை 35 ஆண்டுகள் இடையறாது செய்துள்ளார். 30 வயதில் பணிக்கு வந்தவர், 65 வயதில் ஓய்வு பெற்றுள்ளார். விடுதலை, ஞாயிறு மலர், உண்மை என அனைத்திலும் எழுதுபவர்களை முகப்பெழுத்தோடு பெயர்களை நினைவில் வைத்துள்ளார். தலைவர்களின் பிறந்த நாள், மறைவு நாளும் இவரின் நினைவுகளில் இருக்கிறது.
கு.வெ.கி.ஆசான், ந.வெற்றியழகன், இறையன், அறிவுக்கரசு உள்ளிட்ட பலரின் கட்டுரைகளை வாசித்த அனுபவம் இருக்கிறது. ஒவ்வொருவரின் கையெழுத்தை வாசித்துப் புரிந்துக் கொள்வதே ஒரு கலையாக இருக்கும்!
கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தான் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார். அவருடன்தான் 35 ஆண்டுகளும் பணி செய்தேன் என்கிறார். குறிப்பாக ஆசிரியர் அவர்களின் அறிக்கையைத் நாள்தோறும் படிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். ஒரு முறைக்கு, இருமுறை திருத்தும் போது, மீண்டும் மீண்டும் படிக்கும் சூழல் வரும். அப்போது ஏராளமான தகவல்கள், புள்ளி விவரங்கள், வரலாற்றுச் செய்திகளை அறிந்துக் கொள்ள முடியும்.
நான் இருந்த காலங்களில் ஓரிரு கட்டடங்கள், செய்திப்பிரிவு அலுவலகம், இராதா மன்றம் போன்றவை இருக்கும். இப்போது புதிய, புதிய கட்டடங்கள், அலுவலகங்கள், ஏராளமான வசதிகள் எனப் பார்க்கவே பெருமையாகவும், பூரிப்பாகவும் இருக்கிறது! ஓய்வுக்குப் பிறகு அனைத்து நிகழ்வுகளுக்கும் வந்துவிடுவேன். இப்போது சற்று தளர்ந்துவிட்டேன். நிற்பதற்கும், நடப்பதற்குமே சிரமமாக இருக்கிறது.
எனினும் மாதம் ஒருமுறை ஆட்டோ பிடித்து பெரியார் திடல் வருகிறேன். செய்திப்பிரிவில் சில மணி நேரங்கள் இருந்து, அனைவரையும் பார்த்து விட்டுச் செல்கிறேன்.
இங்கு வந்து செல்வதே உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வாக இருக்கிறது”, என்கிறார் ந.துரைராஜ்!
எவ்வளவு வியப்பு பாருங்கள்! ஒரே அலுவலகத்தில் 35 ஆண்டுகள் பணிபுரிவதே மிகச் சிறப்பு. மட்டுமின்றி ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் கழித்தும், விடுதலை அலுவலகம் வந்து செல்வது தனக்கான புத்துணர்வு என ஒருவர் கூறுகிறார் என்றால், எப்பேற்பட்ட மனநிறைவையும், சுயமரியாதை உணர்ச்சியையும் இந்தத் திடல் மண்ணில் அவர் பெற்றிருக்க வேண்டும்!
பெரியார் ஏதோ ‘கடவுள் இல்லை’ என்று மட்டும் பேசியதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஒவ்வொரு தனி மனிதர் வாழ்விலும் அவர் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதற்கு இந்த சம்பவமே சிறிய சான்று!
-தகவல் : வி.சி.வில்வம்