சென்னை, ஜூன் 7- சட்டமன்ற உறுப்பினர் மரணம் அடைந்ததையடுத்து, விக்கிரவாண்டி சட்டபேரவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர் தல் நடைபெற உள்ளது. அதற்கான நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மரணம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி மரணம் அடைந்தார். எனவே, அந்த தொகுதிக்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் போதே இடைத்தேர்தல் நடத் தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 7 கட்ட நாடாளுமன்ற தேர்தலும் நடந்து முடித்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் முடிந்துவிட்டது.ஆனால், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடைபெறவில்லை. இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
அறிவிப்பு:
தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்புதான் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. மரணம் அடைந்தார். எனவேதான் தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும்போது அந்த தொகுதியையும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறவில்லை. ஒரு தொகுதி காலியான பிறகு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும்.
அதன்படி இந்த தொகுதியில் தேர்தல் நடத்த வருகிற ஆகஸ்டு மாதம் வரை அவகாசம் இருக்கிறது. இருப்பினும் முன்னதாகவே தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் அதற்கான அறிவிப்பு வெளிவந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
ரேபரேலி:
மேலும் தற்போது நடந்து முடிந்துள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு, உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி என 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறார். அதில் அவர் ஒரு தொகுதியில் மட்டுமே பதவியேற்பார். எனவே, மற்றொரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். எனவே, விக்கிரவாண்டி, இடைத்தேர்தலுடன், இதில் காலியாகும் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறும்.
‘நீட்’ தேர்வில் முறைகேடு
மறுதேர்வு நடத்த கோரிக்கை
புதுடில்லி, ஜூன் 7- மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில், 67 பேர் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதுதொடர்பாக தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
மேலும், அரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மய்யத்தில் எழுதிய 6 பேரும் அந்த 67 பேரில் அடங்குவர் என்பதும் அவர்களது சந்தேகத்தை அதிகரித்துள்ளது. எனவே, நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக லட்சக்கணக்கான மாணவர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். ஆனால், என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றம், நேர விரயம் ஆகியவற்றுக்காக கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டதால்தான் பல மாணவர்களுக்கு மதிப்பெண் அதிகரித்ததாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகளுக்கு காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.