சென்னை, ஜூன் 4- தலைநகர் சென்னையில் மெரினா மற்றும் பெசன்ட் நகரை இணைக்க ஒரு திட்டம் வர உள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் சில நிமிடங்களில் மெரினா டூ பெசன்ட் நகர் சென்றடையலாம்.
சென்னையில் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதற்கிடையே சென்னை கடற்க ரையை மொத்தமாகப் புரட்டிப் போடும் ஒரு திட்டத்தை நகராட்சி அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர்.
ரோப் கார்: அதாவது நாட்டின் மிக நீண்ட கடற்கரையான மெரினா கடற்கரையை பெசன்ட் நகருடன் இணைக்கும் வகையில், 4.6 கி.மீ. தூரத்திற்கு ரோப் கார் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். சென்னையில் கடற்கரையில் சுற்றிலும் சுற்றுலாவை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் எனச் சொல்லப்படுகிறது. மேலும், நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் நிலையில், இந்த பகுதியில் போக்குவரத்தையும் இது பெரியளவில் குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
NHLML எனப்படும் தேசிய நெடுஞ்சா லைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனம் 285 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவான சாத்தி யக்கூறு அறிக்கையைத் தயாரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் நீக்கப்பட்ட உடன் இதற்கான பணிகள் தொடங்கும் எனத் தெரிகிறது.
அதிகாரிகள் தகவல்: தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்குக் கொள்கை ரீதியாக முதற்கட்ட அனுமதியைக் கொடுத்து விட்டதாகவே அதிகாரிகள் தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பே இத்திட்டம் குறித்த தகவல்கள் வெளியான போதிலும் அப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை பணிகளை முன்கூட்டியே தொடங்க முடியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விரிவான சாத்தியக்கூறு அறிக்கை இறுதி செய்யப்பட்டவுடன், இத்திட்டத்திற்கு ஒப்பந்தக் கோரல் விடப்படும். இந்த திட்டத்திற்குச் சுற்றுச்சூழல், வனம் துறை மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்திடம் இருந்து அனுமதி தேவைப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், சில நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது போல பல பணிகள் இருப்பதால் திட்டத்தைச் செயல்படுத்த அதிக நேரம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல் குறையும்
இத்திட்டம் மெரினா கடற்கரையிலிருந்து எலியட்ஸ் அதாவது பெசன்ட் நகர் கடற்கரை வரையிலான சுற்றுலாவை மேம்படுத்துவது மட்டுமின்றி இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ரோப் காரில் மோனோகேபிள் கோண்டோலா ரோப்வே அமைப்பைப் பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 10 பேர் வரை செல்ல முடியும். எல்லாம் திட்டமிட்டபடி நடந்து, அனைத்து அனுமதிகளும் சரியாகக் கிடைத்து, நிலம் கையகப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இத்திட்டம் முடியும் என்று அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.
முதல்முறை இல்லை: அதேநேரம் நகரில் ரோப் கார் திட்டம் கொண்டு வர நடக்கும் முயற்சி இது முதல்முறை இல்லை.. முன்னதாக கடந்த 2022இல் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ஒரு ரோப் கார் திட்டத்தை முன்மொழிந்து இருந்தார்கள். அதில் நேப்பியர் பிரிட்ஜ் முதல் விவேகானந்தர் இல்லம் வரை ரோப் கார் அமைக்க மாநகராட்சி முன்மொழிந்தது. . இருப்பினும், அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
இந்தச் சூழலில் இப்போது மெரினா டூ பெசன்ட் நகர் திட்டத்தை அதிகாரிகள் முன்மொழிந்துள்ள நிலையில், இத்திட்டத்தை யாவது செயல்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.