ஆகஸ்டு 18 வெள்ளிக்கிழமை.அதிகாலை 5 மணி ,வழக்கமான நேரத்திற்கு மாற்றாக வழமையைத் தகர்த்து 20 மணித்துளிகள் முன்னதாகவே பாண்டியன் அதிவிரைவு வண்டி மதுரை இரயில் நிலையத்திற்குள் வந்து நின்றது.இருட்டு இன்னும் சூழ்ந்திருக்கும் நேரம்,மதுரைக் கழகப்பொறுப்பாளர்கள் இருட்டில் காத்திருக்க,கருப்பின் நடுவில் இருக்கும் சிகப்பு வண்ண ஒளிவிளக்கு நடுவில் பிரகாசமான மின்னிடும் ஒளிக்கதிருக்குப் பின்னால் சிரித்த முகத்துடன் தமிழர் தலைவர் இரயிலை விட்டு இறங்கி கழகப்பொறுப்பாளர்களுக்கு காட்சி தந்தார்,’தகைசால் தமிழர் ‘விருதுக்குப் பின் முதன்முதலாக மதுரைக்கு வருகை தந்த தமிழர் தலைவரைப் பொறுப்பாளர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து முழக்கங்களுடன் வரவேற்றனர்.
தலைமைக்கழக அமைப்பாளர் . செல்வம்,நா.முருகேசன்,பீபீகுளம்சுரேஷ், பிச்சை பாண்டி உள்ளிட்ட பல தோழர்கள் புடைசூழ தமிழர் தலைவர் வெளியே வந்தார். வழக்கமான நேரத்திற்கு பாண்டியன் இரயில் வரும் என நினைத்து வந்த தோழர்கள் முனைவர் வா.நேரு உள்ளிட்ட பலர் அரக்க,பரக்க ஓடி வந்து அய்யா ஆசிரியரை புத்தகத்துடனும் சால்வையுடனும் வரவேற்க,பேசிக் கொண்டே வந்து தன் வாழ்நாளின் பெரும்பகுதி நேரத்தை கழிக்கும் அவருக்குத் தோன்றாத் துணையாக இருக்கும் பயண வாகனத்தில் ஏறி அமர்ந்தார்.அவருடன் அம்மா மோகனா அவர்களும் வருகைதந்தார்கள்.
தமிழர் தலைவர் அவர்களோடு நிகழ்ச்சியில் பங்கேற்க நம் விருந்தினராக வருகை தந்த மாண்பமை நீதியரசர் அரி பரந்தாமன் அவர்களை அவர் செல்லும் தங்குமிடத்திற்கு தன்னை வரவேற்க வந்த சட்டத்துறை செயலாளர் மு.சித்தார்த்தன் வழக்கறிஞர் சுஜாதா ஆகியோரோடு வழி அனுப்பி வைத்து தன் வாகனத்தில் ஏறினார் தமிழர் தலைவர். வாகனத்தில் அமர்ந்தவுடன் தன்னோடு வருகை தந்த சட்டத்துறை தலைவர் த.வீர சேகரன்அவர்களைத் தேடினார். தோழர்கள் அனைவரும் அவரது செல்லில் தொடர்பு கொண்டு தேடிய நிலையில் மிக அமைதியாக அவருக்கே உரித்தான பாணியில் பத்து நிமிடத் தாமதத்தோடு வாகனத்தில் ஏறினார்.
மதுரையில் வழக்கமாகத் தங்குமிடமான ஆர்த்தி விடுதிக்கு வந்தவுடன் மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம்,சுப.பெரியார்பித்தன்போட்டோஇராதா உள்ளிட்ட வருகை தந்த தோழர்களைச் சந்தித்து மகிழ்ந்ததோடு அன்றைய பயணத்திட்டம் குறித்து தலைமைக்கழக அமைப்பாளர் வே.செல்வம் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார். பின்னர் தமிழர் தலைவர் அவர்களின் அன்றாடப்பணியில் முதல்பணியான செய்தித்தாட்கள் வாசிப்பிற்குள் மூழ்கினார்.பின்பு ஒரு இரண்டு மணி நேரத்திற்குள் குளித்து,உணவை முடித்து, காலை 9 மணிக்கு பார்வையாளர்களைச் சந்திக்கத் தொடங்கினார். புரட்சிக்கவிஞர்பேரவைத் தோழர்கள் நாக.பாலன்,தியாகு, கற்பூரம் நாகராஜ், ஆசிரியர் ஜெயபால் சண்முகம் மற்றும் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரையும்,சந்திக்க வந்தவர்களை எல்லாம் வரவேற்றுப் பேசினார்.
காலை 10 மணிக்கு மதுரை ஆர்த்தி விடுதி அரங்கில் 18.08.2023 முதல் நிகழ்வாக நிதி வழங்கும் விழா. மதுரை பெரியார் பெருந் தொண்டரும், காப்பாளருமான சே.முனியசாமி அவர்கள் மதுரை ஷெனாய் நகரில் அமையவிருக்கும் பெரியார் மணியம்மை மன்றத்தின் கட்டுமான
பணிக்காக பத்து லட்சம் ரூபாய் நன்கொடை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்குவதாக அறிவித்தநிலையில் அதனை ஒட்டியே இந்நிதியளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது..தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்ற தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் இந்த விழா உருவானதின் நோக்கம் குறித்து உரை ஆற்றினார்
அவரது .உரைக்குப்பின் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத்த்தலைவர் முனைவர் வா.நேருஉரையாற்றினார். அவர் பேசும்போது “ அய்யா சே.முனியசாமி இளம்வயதில் மிகவும் துன்பப்பட்டு வளர்ந்தவர். தன் தாயோரோடு திருச்சியில் இருக்கும்போது,பெட்டியில் வைத்து ஐசை தெருத்தெருவாக விற்றதையும் மதுரையில் மொத்தமாக விறகு வாங்கி அதனைக் கோடாரி வைத்து பிளந்து உடைத்துத் தெருத்தெருவாக விற்றதையும் கூறும்போது நமக்கு கண்களில் கண்ணீரே வரும்.அவ்வளவு தூரம் துன்பப்பட்டு வளர்ந்து,சம்பாதித்து மற்றவர்களுக்குத் தாராளமாக உதவக்கூடிய பெரியார் பெருந்தொண்டராக இருக்கின்றார்.பல வெளி நாடுகளுக்குச்சென்று வந்தவர்.மிக நாணயமானவர்.அவருக்கு வயது 74.அவருடைய 75வது விழாவில்,அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமாக எழுதி அய்யா ஆசிரியர் அவர்கள் தலைமையில் வெளியிட வேண்டும் என ஆசை வைத்திருக்கிறார். நான் அந்த புத்தக ஆக்கத்திற்கு உதவி செய்கின்றேன் எனச்சொல்லி இருக்கின்றேன்.மதுரையில் கட்டிடம் கட்டுவதற்கு ரூ 10 இலட்சம் தரும் அவருடைய கொடையுள்ளத்தைப் பாராட்டி மகிழ்கின்றோம் எனக்கூறி தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றி ,நாம் வாழ்வில் மகிழ்வோம் “ எனக்குறிப்பிட்டு உரையாற்றினார்.
நிதியளிப்பு நிகழ்ச்சிக்கு காப்பாளர் தே.எடிசன்ராஜா மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம் முனைவர் வா.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியின் தொடக்கத்தில் காப்பாளர் தே.எடிசன்ராஜா அவர்கள் ஆசிரியர் அவர்களுக்கு ஆடை அணிவித்தார்.தேனிமாவட்டகாப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் இரகுநாகநாதன்,பேபி சாந்தா, பொறியாளர் லெனின் ஆகியோர் ஆசிரியர் அவர்களுக்கு வழமைபோல் ஏலக்காய் மாலை அணிவித்து மகிழ்ந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தலைவர்இரா.வீரபாண்டி,பேரவை செயலாளர்நாகராஜ், போக்குவரத்து துறை செல்வம், வழக்கறிஞர் ஆனந்தமுனிராஜ் ஆகியோர் தலைவருக்கு சிறப்புசெய்தபின் தமிழர் தலைவர் அவர்கள் காப்பாளர் சே.முனியசாமி அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டி சுப.முருகானந்தம் அவர்கள் எமுதிய பாராட்டுக் கவிதையை வழங்கினார். தமிழர் தலைவர் அவர்கள் . சே.முனியசாமி அவர்களின் தொண்டுள்ளத்தைப் பாராட்டியதோடுஇங்கு அமையவுள்ள கட்டிடத்திற்குரிய இடம் நமக்கு எவ்வாறு கிடைத்தது அதை ஒட்டி நம்ம துரை கருஞ்சட்டை முன்னோர்களின் இயக்கப்பணி அப்போது நடந்த சம்பவங்களை சுவைபட எடுத்துரைத்ததோடு, மதுரை கல்வி வள்ளல் பே.தேவசகாயம்அன்னத்தாயம்மாள்ஆகியோரின்தொண்டறத்தைநினைவுகூர்ந்தார்மதுரையில் கட்டிட வேலை எப்படி அமைய இருக்கிறது என்பதனை விளக்கி ஏறத்தாழ ஒரு 30 நிமிடங்கள் உரையாற்றினார்.
கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களைப் பார்க்கும் நேரமெல்லாம் நன்கொடை கொடுத்து மகிழும் நம் தோழர்கள் ச.பால்ராஜ் ரூ 5000,போட்டோ இராதா ரூ 5000,பா.சடகோபன் ரூ 500 கொடுத்து மகிழ்ந்தனர்.
தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம்..சுமதி ஆகியோரின் மகன் பிரதாப்சிங் அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்ததன் நினைவாக நாகம்மையார் இல்லத்திற்கு ரூ1000 நன்கொடையாக வே.செல்வம் வழங்கினார். தோழர்கள் இளமதிமுருகேசன், கவின் ஆகியோர் விடுதலை ஆண்டுச் சந்தா வழங்கிமகிழ்ந்தனர் நிதியளிப்பு விழா ஏறத்தாழ 75 நிமிடங்கள் நடைபெற்றது.
நிதியளிப்பு விழா முடிந்தவுடன்,அறைக்குக் கூடச்செல்லாமல் அடுத்த நிகழ்வுக்கு 11-15க்கு தமிழர் தலைவர் புறப்பட்டார்.இப் பயணத்தில் மாநகர் பொறுப்பாளர்கள் அ.முருகானந்தம், மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம்,துணைச்செயலாளர் இராலீ.சுரேஷ்,பிச்சைப்பாண்டி, தொழிலாளர் அணித்தலைவர் திருச்சி சேகர், ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், காப்பாளர்கள் தே.எடிசன்ராஜா, சே.முனியசாமி முனைவர் வா.நேரு நா.முருகேசன் உசிலை தலைவர் த.ம.எரிமலை, பேராசிரியர் சுப.பெரியார்பித்தன் கா.சிவகுருநாதன்மற்றும் திரளான தோழர்களுடன்
தமிழர் தலைவர் நாகமலைப் புதுக்கோட்டை கீழக்குயில்குடி ரோட்டில் வாழ்ந்த ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தலைவரும் சுயமரியாதைச் சுடரொளியுமான அய்யா சிவனனைந்த பெருமாள் அவர்களின் செல்வன் பொறியாளர் மனோகரன், சமீபத்தில் மறைந்த பேராசிரியர் கஸ்தூரி ஆகியோரின் படத்திறப்புவிழாவிற்கு 11-45க்கு இல்லம்வந்தடைந்தார் .பொறியாளர் மனோகரன் குடும்ப உறுப்பினர்கள் புடைசூழ அவர்களின் படங்களைத் திறந்துவைத்து குடும்பத்தினரான சி.மன்னர்மன்னன், ஜெவெண்ணிலா சி.மகேந்திரன், சி.மணிமொழியன், சி.மண்டோதரி, சி.மனோரஞ்சிதம், திருநாவுக்கரசு ஆகியோருடன் ஆசிரியர் அவர்களும் அம்மா அவர்களும் உரையாடி மனோகரன் அவர்களையும் பேராசிரியர் கஸ்தூரி அவர்களையும் நினைவு கூர்ந்தனர்.
நாகமலைப் புதுக்கோட்டையிலிருந்து 12.15க்குப் புறப்பட்டு 12.45க்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம் வந்தடைந்தார் தமிழர் தலைவர்.வரும் வழியெங்கும் அன்றைய மதுரையையும், இன்றைய மதுரையையும், அன்றைய திராவிடர் கழகத்தையும் இன்றைய திராவிடர் கழகத்தையும் ஒப்பிட்டுத் தோழர்களோடு உரையாடிக் கொண்டே வந்தார். .கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்த தமிழர் தலைவர் அவர்கள் முகப்பில் இருக்கும் டாக்டர் கலைஞர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தார். தமிழர் தலைவர் அவர்களை கலைஞர் நூற்றாண்டு நூலகப் பொறுப்பாளர்கள் தினேஷ்குமார், சந்தானகிருஷ்ணன் மற்றும் கழகத்தோழர்களும் அங்கு பார்வையிட வந்திருந்த கல்லூரி மாணவிகளும் வரவேற்றனர்.மதுரை காமராசர் பல்கலைக் கழகக் கல்லூரியின் துணை முதல்வர் கபிலன் தோழர்களோடு வரவேற்றார்.
உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கிருக்கும் நூலகத்திற்கு செல்லும் வழக்கமும் பழக்கமும் உடையவர் தமிழர் தலைவர் அவர்கள். கலைஞர் நூற்றாண்டின் அரங்கங்கள் ஒவ்வொன்றையும், ஒவ்வொரு தளத்தையும் பார்வையிட்டார். தன்னுடைய உலகலாவிய அனுபங்களை அங்கிருக்கும் பொறுப்பாளர்களோடு பகிர்ந்துகொண்டு இன்னும் எப்படி எப்படி எல்லாம் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினைச் செம்மைப் படுத்தலாம் என்பதற்கு அரிய ஆலோசனைகள் வழங்கினார். கலைஞர் நூற்றாண்டு நூலகக் குறிப்பேட்டில் அற்புதமான நூலகத்தை வழங்கியிருக்கக் கூடிய தமிழ் நாடு
அரசையும் அதன் முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களையும் ,இந்த நூலகம் உருவாக ஒத்துழைத்த, பணியாற்றிய அனைவரையும் பாரட்டி,மகிழ்ந்து தன் கருத்துகளைப் பதிவு செய்தார்.கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஏறத்தாழ 1.30 மணி நேரத்திற்கு மேலாகப் பார்வையிட்ட தமிழர் தலைவர் அவர்கள் நூலகத்தைப் பிரிய மனமில்லாமல் 2.15 மணியளவில் விடை பெற்றார்.
மீண்டும் ஆர்த்தி உணவு விடுதிக்கு வந்த அவர் மதிய உணவிற்கு பிறகு சிறிது ஓய்வினை ஏற்றார்.மீண்டும் 4.30 மணி முதல் பார்வையாளர்கள் சந்திப்பில் அண்ணா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன்,அவர் செல்வன் குமார் மற்றும் அமைப்பின் பொறுப்பாளர்களையும், சிவகங்கை மாவட்டபொறுப்பாளர்கள் புகழேந்தி, மணிமேகலை சுப்பையா மற்றும் தோழர்களைச் சந்திந்து விட்டு மாலை 5.30 மணிக்கு விடுதியிலிருந்து புறப்பட்டார்.மாலை 6 மணிக்கு மதுரை தமிழ் நாடு ஹோட்டலில் நடைபெறும் கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்காக.
பங்கேற்கச் செல்லும் வழியில் மதுரை தல்லாகுளம் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்காக மாற்று இடத்தில் இருந்த தந்தை பெரியார் சிலையை புதிய ரவுண்டானா அமைக்கப்பட்டுஅதில் நிறுவப்பட்ட பெரியார் சிலைக்கு பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்தனர் . அங்கு திராவிடர் கழகக் கொடி தோழர்கள் முழக்கத்தோடு ஏற்றி வைக்கப்பட்டது. சிலைபணியை செய்துவரும் ஒப்பந்ததாரர் அருள் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் அருள், பொறியாளர் தினேஸ் ஆகியோருக்கு சால்வை கள் அணிவித்து பாராட்டுதல்களைத் தெரிவித்ததோடு இன்னும் சில மாற்றங்களைச் செய்யத் தோழர்களிடம் அறிவுறுத்தினார்.
அங்கிருந்து சட்டத்துறை நடத்திய கருத்தரங்கத்திற்கு தமிழர் தலைவர் அவர்கள் வந்தபொழுது நுழைவு வாயிலில் வழக்கறிஞர் தோழர்கள் திரளாக வருகை தந்து முழக்கங்கள் எழுப்பி,வரவேற்று மேடைக்கு அழைத்துச்சென்றனர்.அங்கு தொடங்கிய சட்டத்துறை கருத்தரங்கத்திற்கு வழக்கறிஞர் த,வீரசேகரன் தலைமை தாங்கினார்.சட்டத்துறை மாநிலச்செயலாளர் மு.சித்தார்த்தன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில வழக்கறிஞர் அணித் துணைச்செயலாளர் நா.கணேசன்,முன்னாள் நீதியரசர் ஹரி பரந்தாமன் மற்றும் பலர் உரைக்குப் பின் தமிழர் தலைவர் அவர்கள் 1 மணி நேரம் உரையாற்றினார். நிகழ்வு தொடங்கி ஏறத்தாழ 3 மணி நேரம் நடைபெற்றது.அதற்குப் பின் விடுதிக்கு வந்த தமிழர் தலைவர் அவர்கள் இரவு உணவுக்குப்பின் இரவுத்தூக்கம் 10.30 மணிக்கு மேல் ஆனது. ஓயாது உழைக்கும் ஓய்வறியாப் பெரியாரின் முதன்மைத் தொண்டர் அய்யா தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வில்லா உழைப்பை நன்றியோடு பார்க்கின்றோம். இன்னும் வேகமாக உழைத்திட உறுதி ஏற்கின்றோம்.