சோனியா காந்தி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
மும்பை, செப்.1- ‘இந்தியா’ கூட்டணியின் 3-ஆவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் தொடங்கியது. காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா உள்ளிட்ட தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர் களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2ஆவது ஆலோ சனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதி களில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இக்கூட் டணிக்கு ‘இந்தியா’ எனப் பெயரிடப்பட்டது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியின் 3ஆவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நேற்று (31.8.2023) மாலை தொடங்கியது. 2 நாள்கள் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
முன்னதாக இக்கூட்டத்தில் பங்கேற்ப தற்காக மும்பை வந்த தமிழ்நாடு முதலமைச் சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் திமுக மற்றும் மும்பை வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காங்கிரஸ், சிவசேனா மற்றும் கூட்டணிக் கட்சி களை சேர்ந்த மூத்த தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி யின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை அனைத்துக் கட்சி தலைவர்களும் வரவேற்றனர்.
இக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மகாராட்டிர மேனாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, உத்தரப்பிரதேச மேனாள் முதல மைச்சர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இன்று (1.9.2023) நடைபெறும் கூட்டத்தில், கூட்டணிக்கான ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் மேலாண்மை குழு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்தியா கூட் டணிக்கு அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் களை அறிவிப்பது, ஊடக, சமூக ஊடக குழுக் களை அறிவிப்பது தொடர்பாகவும் ஆலோ சனை நடத்தப்படுகிறது. மேலும், இந்தியா கூட்டணியின் லோகோ வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக, கூட்டணிக்கான பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவ தற்கும், நாடு முழுவதும் பா.ஜ.க. அரசின் தோல்வி குறித்து போராட்டங்கள் நடத்துவ தற்கும், கூட்டு பிரச்சார உத்திகளை வகுப்பது குறித்தும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய குழு!
தொகுதி பங்கீட்டில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதற்காக முக்கிய குழு ஒன்று அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது. அந்த குழு தலைநகர் டில்லியில் இருந்து செயல்படும் என கூட்டணி கட்சித் தலைவர்கள் கூறி உள்ளனர். இதுதவிர கூட்டணியில் கட்சிகளை ஒருங்கி ணைக்க ஒருங்கிணைப்பு குழுவும், அதற்கு தலைவரும், கூட்டணிக்கு தலைமை வகிக்க தலைவர் ஒருவரும் நியமிக்கப்பட உள்ளனர்.
மும்பை கூட்டம் தொடர்பாக சிவசேனா கட்சி தலைவர்கள் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்சரத் பவார் ஆகியோர் மும்பையில் நேற்று முன்தினம் (30.8.2023) அளித்த பேட்டியில்,
‘‘மும்பை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஒட்டுமொத்த நாட்டையும் தங்கள் குடும்பமாக கருதும் எதிர்க்கட்சிகள் பாரத மாதாவை காக்க ஒன்றிணைந்துள்ளன. எங்களின் கொள்கைகள் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் நோக்கம் ஒன்றே. இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் ஒன்றிணைந்துள்ளோம். எங்கள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக பல முகங்கள் உள்ளன. ஆனால் பா.ஜ.க.வில் மோடியை தாண்டி வேறு யாராவது உண்டா? பிரதமர் மோடிக்கு சகோதரிகள் மீது திடீர் பாசம் வந்துள்ளது.
இந்த 9 ஆண்டில் ஒருமுறை கூட ரக்ஷா பந்தன் வரவில்லையா? இந்தியா கூட்டணி வளர வளர, எரிவாயு உருளையை இலவச மாகக்கூட கொடுப்பார்கள். அவர்கள் எதைச் செய்தாலும் அதைப் பற்றி கவலை இல்லை. மக்கள் புத்திசாலிகள், அவர்கள் அனைத்தையும் அறிவார்கள்’’ என்றனர்.
மகாராட்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் அளித்த பேட்டியில், ‘‘மும்பை கூட்டத்தில் இந்தியா கூட்டணி ‘பா.ஜ.க. சலே ஜாவோ (பா.ஜ.க. வெளியேறு)‘ என்ற முழக் கத்தை உருவாக்கும்’’ என்று கூறியுள்ளார். சமீப காலமாக பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை குறிவைத்து ‘ஊழல் வெளியேறு’ என பேசி வரு கிறார். இதற்கு பதிலடி தரும் வகையில் ‘பா.ஜ.க. வெளியேறு’ என்ற முழக்கத்தை இந்தியா கூட்டணி அறிவிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. கூட்டணி கட்சிகளும் வர உள்ளன
மேலும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் மனோஜ் ஜா கூறுகையில், ‘‘தற்போதைய ஆட்சியின் பிற்போக்கு கொள்கைகளுக்கு முற்போக்கான மாற்றீட்டை வழங்குவதற்கான தெளிவான திட்ட வரைபடத்துடன் மும்பை கூட்டம் அமையும்’’ என கூறி உள்ளார்.
இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் மேலும் சில புதிய கட்சிகள் இணைய இருப் பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய இருப்பதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர் பாளர் அலோக் அளித்த பேட்டியில், ‘‘பா.ஜ.க. தனது தேசிய ஜனநாயக கூட்டணியில் 38 கட்சிகள் இருப்பதாக கூறி வருகிறது. இக்கூட் டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப் புள்ளதாக தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதில் உள்ள சுமார் 5 கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இன்னும் பல கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு வர உள்ளன. புதிதாக இணையும் கட்சிகள் குறித்து அடுத்த கூட்டத் தில் அறிவிக்கப்படும்’’ என்றார்.
பிரதமர் பதவிக்காக சேரவில்லை
ஆம் ஆத்மி கட்சி மக்களவை உறுப்பினர் ராகவ் சதா நேற்று (31.8.2023) அளித்த பேட்டி யில், ‘‘பிரதமர் பதவிக்காக இந்தியா கூட்டணி யில் ஆம் ஆத்மி சேரவில்லை. பிரதமர் போட்டியில் அரவிந்த் கெஜ்ரிவால் கிடையாது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மக்கள் மீது திணித்துள்ள வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்றவற்றின் தீமைகள் மற்றும் கொடுமை களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கும், சிறந்த இந்தியாவை உருவாக் குவதற்கும்தான் இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளோம்’’ என்றார். முன்னதாக அக்கட்சியின் தலைமை தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார், கெஜ்ரிவால் பிரதமர் வேட்பாளராக களமிறக்க தகுதியானவர் என கூறியதைத் தொடர்ந்து ராகவ் சதா பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.
இன்று ‘லோகோ’ வெளியீடு
மும்பையில் இன்று நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணிக்கான லோகோ வெளியிடப்படுகிறது.