புலவர் பா. வீரமணி
மனித விடுதலைக்காக 1935ஆம் ஆண்டில் நீதிக்கட்சியால் தோற்றுவிக்கப் பெற்றதுதான் ‘விடுதலை’ ஏடாகும். தந்தை பெரியார் இதனை நாளேடாக எந்த இடையூறுக்கும் அஞ்சாமல் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவ்வேட்டைத் தொடங்குவதற்கு முன்னர் தந்தை பெரியார் ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’ ஆகிய வார ஏடுகளையும் வெளியிட்டு நடத்தியுள்ளார். இவ்வேடுகளின் பெயர்களைப் பார்த்தா லேயே அவ்வேடுகளின் உள்ளடக்கம் எப்படியிருக்கும் என்பதை ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம். அந்நாளில் தமிழ்நாட்டில் தேச பக்தன், நவசக்தி, சுதேசமித்திரன், ஜனமித்திரன் என்ற பெயர்களில் ஏடுகள் வெளிவந்து கொண்டி ருக்கும் போது தந்தை பெரியார் நல்ல தமிழில் ஏடுகளை நடத்தியிருப்பது போற்றத்தக்கது.
அவ்வேடுகளின் பெயர்களைப் போன்றே அவ்வேடுகளின் உட்பொருளும், நற்போக்கும் முற்போக்கும் கொண்ட சிந்தனைகளை உடையனவாக இருந்தன. அக்காலத்தில் வெளி வந்த ஏடுகளில் இடம் பெறாத பகுத்தறிவுச் சிந்தனைகளும் தத்துவ- அரசியல் சிந்தனைகளும் அறிவியல் சிந்தனைகளும் நிரம்பிய அரிய ஏடுகளாக அவை இருந்தன. குறிப்பாக, புதுமையும் புரட்சியும் பொங்கும் ஏடுகளாக அவை விளங்கின. அவ்வேடுகளை இன்று நோக்கினாலும் அவை, அறிவுச் சுரங்கமாகவும், சிந்தனைப் புதையலாகவும் உள்ளனவென்பதை இனிது உணரலாம்.
இவ்வேடுகளின் வழியில் வெளிவந்தது தான் விடுதலை இதழாகும். விடுதலை என்னும் பெயர் எத்துணை அரும்பெயர்! எத்துணை பெரும் பெயர்! அப்பெயர் நமக்கு உணர்த்துவது ஒன்றா? இரண்டா? இல்லை; இல்லை; அவை உணர்த்துவன பற்பல. மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை, ஜாதி ஏற்ற- தாழ்விலிருந்து விடுதலை, சமய வேறுபாட்டிலிருந்து விடுதலை, பெண்ணடிமைத் தனத்திலிருந்து விடுதலை, பார்ப்பன ஆதிக்கக்கத்திலிருநது விடுதலை, பொருளாதாரச் சுரண்டலிலிருந்து விடுதலை ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை, ஆதிக்கத் தலைமையிலிருந்து விடுதலை, மரபு வழிச் சிந்தனையிலிருந்து விடுதலை, கடவுள் சிந்தனையிலிருந்து விடுதலை, இவ்வாறு மனித வாழ்வின் வேண்டாத அனைத்துத் துறைகளிலிருந்தும் விடுவிக்கும் நல் இதழே விடுதலையாகும்.
அதனால்தான் தந்தை பெரியார் ‘விடுதலை’ என்னும் அரிய பெயரைச் சூட்டியுள்ளார். சுருங்கக் கூறவேண்டுமாயின்,
“மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!
வேண்டாத சாதிஇருட்டு வெளுப்பதற்குத்
துண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!
புண்ணிற் சரம்விடுக்கும் பொய்மதத்தின் கூட்டத்தைக்
கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே!
தெய்விகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!
எல்லாம் கடவுள் செயல் என்று துடை நடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே!”
என்று புரட்சிக்கவிஞர் புதுமைப்பெண் எப்படியிருக்க வேண்டுமென்று பாடினாரோ, அப்படியே செய்தி உலகில் புதுமை செய்ய வந்ததே நம் ‘விடுதலை’ இதழாகும்.
நாளேடு என்பது மக்களுக்கு ஒவ்வொரு நாளும், புதுப்புதுச் செய்தியையும் சிந்தனையையும் வெளிப்படுத்தி நாளும் திருத்துவதும் சிந்திக்க வைப்பதும், நற்பாதை காட்டுவதுமேயாகும். இவற்றை முன்னிட்டே மாமேதை லெனின் அவர்கள், ஜார் என்னும் கொடுங்கோல் மன்னனுக்கு எதிராக, மக்களைத் திரட்டவும், அவர்களைப் புரட்சியாளர்களாக மாற்றவும் “இஸ்க்கரா” என்னும் ஏட்டைத் தொடங்கினார்.
இயந்திரத்தை ஜார் ஆட்சிக்குத் தெரியாமல் மறைமுகமாக ரசியாவுக்குக் கொண்டு வந்தார். அதன்மூலம் இஸ்க்கராவை அச்சடித்து மக்களுக்குப் பரப்பினார். இஸ்க்கிரா என்றால் தீப்பொறி என்று பொருள். அந்தத் தீப்பொறிதான் ரசியாவின் ஜார் ஆட்சியையும் மதமூடநம்பிக்கையையும் பொசுக்கி ஒழித்தது. அந்த இதழை லெனின் அறிவாயுதமாகப் பயன்படுத்திப் புதிய ரசியாவை உரு(சோவித்து யூனியன்) வாக்கினார். அப்படி, புதிய தமிழ்நாட்டைப் படைக்கவே தந்தை பெரியார் ‘விடுதலை’ ஏட்டைத் தொடங்கினார். ‘விடுதலை’ தொடங்கிய காலத்தில் எத்தனையோ இதழ்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பெற்றன. அவையெல்லாம் பற்பல காரணங்களால் காணாமல் போய்விட்டன; அவற்றில் சில வழிமாறியும், திசை மாறியும் போய்விட்டன. ஆனால், ‘விடுதலை’ மட்டும் இன்றும் நின்று, நிலவி வழிகாட்டும் மரமாக, கலங்கரை விளக்காகக் காட்சியளித்து வருகிறது.
விடுதலை நாளிதழுக்கு ஒரு பெருஞ்சிறப்பு உண்டு. அஃது என்ன வெனின், சினிமாச் செய்திகள் இல்லாமல், மலிவான விளம்பரங்கள் இல்லாமல், தவறான- வேண்டாத செய்திகள் சிறிதும இல்லாமல், பெண்மையைப் பழிக்கும் செய்திகள் இல்லாமல் பண்பாட்டிற்குக் கேடு தவழும் செய்தி இல்லாமல் முழுக்க முழுக்க பகுத்தறிவு ஏடாக, சமுதாய இருளை அகற்றும் பரிதியாக- அதாவது உதயசூரியனாக- விளங்குவதுதான் விடுதலை. அதுவும் தொடங்கிய காலம் முதல் இதுவரை ஒரே இலக்கில், ஒரே குறிக்கோளோடு உறுதியுடன் நடைபோடுவதுதான் விடுதலை.
தொண்டர்களுக்கும் இடையேயும், ஆசிரியருக்கும் தொண்டருக்கும் இடையேயும், கொள்கைக்கும் தொண்டருக்கும் இடையேயும் நட்பையும் உறவையும் வளர்ப்பதுதான் இயக்க ஏடு. சிந்தனைமிக்க ஓர் ஏடு இயக்கத்திற்கும் தொண்டர்க்கும் இடையே பாலமாக அமைந்து ஒன்றிணைப்பது; சிந்தனையை மேம்படுத்துவது- மாற்றாரின் பொய்யையும், புனைசுருட்டையும், தவறான கொள்கையையும் அடையாளம் காட்டி அம்பலப்படுத்துவதுடன், தொண்டர்களுக்கு விழிப்பையும் தெளிவையும், உண்மையையும் வெளிப்படுத்துவது, சுருங்கக்கூறின், அறிவார்ந்த ஏடு, தொண்டர்களுக்கு ஓர் அறிவாயுதம் ஆகும். அந்த ஆயுதத்தை முனை முறியாமல், கூர்மை முழுங்காமல் காக்க வேண்டிய பொறுப்பு, தலைமைக்கு மட்டுமன்று; அப்பொறுப்பு தொண்டர்களுக்கும் உள்ளது. இதனை மறக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கும் நாளேடுகளில் விடுதலைக்கு ஒரு தனியிடம் உண்டு; இவ்வேடு, நாட்டுச் செய்திகளை, உலகச் செய்திகளை, அரசியல் செய்திகளை, இயக்கச் செய்திகளை வெளிப்படுத்துவதுடன் நின்றுவிடவில்லை. பல அரிய செய்திகளும் சிந்தனைமிக்க கருத்துகளும் உள்ளடக்கியதுதான் விடுதலை. குறிப்பாக அறிவியல் செய்திகளும், மருத்துவக் குறிப்புகளும் நிரம்பி வருவதுடன் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் அறிக்கையும், நடுப்பக்கக் கட்டுரையும் வாழ்வியல் சிந்தனையும் கருத்தாழம் மிக்கவை. துணைத் தலைவர் கலி. பூங்குன்றனின் தலையங்கக் கட்டுரையும் சிவ விளக்கக் கட்டுரை கவிதையும் நுட்பமானவை. இவற்றுடன், வேறு இதழ்களின் நல்ல கட்டுரைகளும், மொழி பெயர்ப்புக் கட்டுரைகளும் பொருள் மிக்கவை. இவ்வாறு பற்பல பொருள்கள் அமைந்த அரும்பொருள்தான் விடுதலை! புரட்சிக்கவிஞர் பத்திரிகையின் சிறப்புக் குறித்துக் குறிப்பிட்டிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. அதனைக் கீழே காணலாம்.
“அறிஞர் தம் இதய ஓடை
ஆழநீர் தன்னை மொண்டு
செறிதரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றிக்
குறுகிய செயல்கள் தீர்த்துக்
குவலயம் ஓங்கச் செய்வாய்!
நறுமண இதழ்ப் பெண்ணேஉன்
நலங்காணார் ஞாலம் காணார்”
இச்சிறப்பு விடுதலை இதழுக்கு முழுதும் பொருந்தும். செய்தி இதழ்களின் சிறப்பை அறியார் உலகத்தை அறியமாட்டாதவர் என்று புரட்சிக்கவிஞர் கூறுவது பெரிதும் விடுதலை இதழுக்கே பொருந்தும்.
”மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்றார் பெரியார் அறிவின் சிறப்பைப் பற்றி உலகில் அறிஞர் பலர் விதந்து கூறியுள்ளனர். ஆனால் மானத்தை, சுயமரியாதையை அழுத்திக் கூறியவர் தந்தை பெரியார்தான். அதற்கு இந்த நாட்டுச் சமுதாயச் சூழலே காரணமாகும். அந்த மானத்தை சுயமரியாதையை முன்னெடுத்த மூலவர் தந்தை பெரியார்தான். அந்த மானத்தை, சுயமரியாதையை, பகுத்தறிவை, சமத்துவத்தை உரியவாறு போதித்தவர் தந்தை பெரியாரே ஆவர். அவர் வழியில் ஒளி பாய்ச்சுவது வழிகாட்டுவதுதான் விடுதலை.
நமது நாட்டில் நீதிக்கு எதிராக, நியாயத்திற்கு எதிராக, சட்டத்திற்கு எதிராக, சமுதாய ஒழுங்கிற்கு எதிராக ஒரு கருத்தோ அரசின் முடிவோ, நீதிமன்றத் தீர்ப்போ வெளிவருமாயின் உடனுக்குடன் அவற்றிற்கு எதிர்ப்பையும், மறுப்பையும் காட்டுவது விடுதலையேயாகும். கடந்த காலத்தைப் பின்னோக்கிப் பார்த்தால் பலநிகழ்வுகள் நமக்கு நினைவுக்கு வரும். குறிப்பாக அண்மைக்காலத்தில் தமிழ் அர்ச்சகர் பிரச்சினை என்றாலும், நீட் தேர்வு என்றாலும், முன்னேறிய ஜாதி யினருக்கு 10% இடஒதுக்கீடு என்றாலும் அப்போதைக்கு அப்போது உரிய எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிப்பது விடுதலையேயாகும். சில நாள்களுக்கு முன்னர் மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த தவறான தீர்ப்புக்கு முதன்முதலில் அறிக்கைவிட்டு எதிர்ப்பைக் காட்டிச் சரியான விளக்கம் அளித்தது விடுதலையே! விளக்கம் அளித்தவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களே! அந்த அறிக்கை எதனை முன்னிட்டு வெளியிடப்பட்டது? அதனை நாம் அறிய வேண்டுமன்றோ!
கரூர் மாவட்டம் நெரூர் அக்ரஹாரத்தில் சத்குரு சதாசிவ பிரமேந்திரரின் ஜீவசமாதி உள்ளது. அங்கு ஆண்டுதோறும் மே மாதத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அந்நாளில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள்மீது நேர்த்திக்கடன் என்ற முறையில் பார்ப்பனர் அல்லாதார் அங்கப்பிரதட்சணம் செய்யும் பழக்கம் பல்லாண்டுகளாக இருந்து வந்தது. இந்த மூடநம்பிக்கை ஒருவர் தொடுத்த வழக்கால் 2015ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனால், கரூர் நவீன்குமார், அப்பழக்கம் தொடரப்பட வேண்டுமென்று மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் மீதுதான் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அங்கப்பிரதட்சணம் செய்துகொள்ளலாம்; அது மதச் சுதந்திரத்தின் பாற்பட்டது என்று தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பானது அரசியல் சட்டத்திற்கு மாறானது என்று விளக்கம் அளித்துள்ளார் ஆசிரியர்.
கர்நாடகத்தில் குக்கே சுப்பிரமணிய கோயிலிலும் மற்ற சில கோயில்களிலும் அங்கப்பிரதட்சணம் செய்து வருவதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்தத் தீர்ப்பை அளித்தவர்கள் நீதிபதி மதனும், நீதிபதி பானுமதியும் ஆவர். பழங்காலப் பழக்கம் என்பதால் எதனையும் ஆராயாது அப்படியே தீர்ப்பளிக்க முடியாது என்றும், தீண்டாமை பழங்காலப் பழக்கம் என்பதால் அதனைக் தடை செய்யாமல் இருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி அங்கப்பிரதட்சணத்திற்கு 2014இல் தீர்ப்பு அளித்துள்ளனர். இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி, மதவயப்பட்டுத் தவறாகத் தீர்ப்பளித்திருப்பது எப்படி நீதியாகும்? நியாயம் ஆகும்? என்று ஆசிரியர் வினா எழுப்பியுள்ளார். இப்படி வினா எழுப்பியிருப்பதுடன், அவரது தீர்ப்பு எத்துணைத் தவறானது என்பதை ஆசிரியர் அரசியல் சட்ட விதிகளோடு ஒப்பிட்டு அதனை மறுத்தும் விளக்கம் அளித்துள்ளார்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பை மறுத்து உண்மையான நீதி என்று என்பதை நானறிந்தவரையில் முதலில் மறுத்தது விடுதலையேயாகும். முதலில் மறுத்தவர் ஆசிரியர் வீரமணியே ஆவர். மூடநம்பிக்கையிலிருந்தும், மனித ஏற்ற- தாழ்விலிருந்து அவர் விடுவிப்பது மட்டும் அன்று விடுதலை; நீதிபதிகளின் தவறான தீர்ப்புகளிலிருந்தும் விடுவிப்பதும் விடுதலையேயாகும்.
“கடவுள் வெறி சமயநெறி
கன்னால்நிகர் தமிழுக்கு
நோய் நோய் நோயே!”
என்றார் புரட்சிக்கவிஞர் அந்நோயைப் போக்கவே ஆசிரியர் இங்கு மருந்து அளித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் அனைத்து நலனுக்கும் வளர்ச்சிக்கும் உழைத்து வரும் விடுதலை நாளிதழ் இவ்வாண்டு 90ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஒரு நாளிதழ் தொண்ணூறு ஆண்டுகள் தொடர்ந்து வெளிவருவது ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.
பொழுதுபோக்குச் செய்திகளோ திரைப்படச் செய்திகளோ இல்லாமல், முழுக்க முழுக்க அறிவார்ந்த செய்திகளை, பகுத்தறிவு சார்ந்த செய்திகளை உள்ளடக்கி, தொடர்ந்து வெளிவருவது திராவிடர் கழகத்தின் உலையா உழைப்பைப் பறைசாற்றுகிறது. “வாராது போல் வந்த மாமணி போவ விளங்கும் விடுதலை ஏட்டை, மேன்மேலும் வளர்க்கும் பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு தமிழர்க்கும் உள்ளது. அப்பொறுப்பையும், கடமையையும் நிறைவேற்றும் நாளாக வருகின்ற 1.6.2024ஆம் நாளைக் குறித்துள்ளது திராவிடர் கழகம். மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இதழ் சந்தாவை அன்று பெற்றுக்கொள்ள இருக்கிறார்.
“வண்டுதொடர் மலர்போல மக்கள்
தொடர் ஏடு பல தோன்றும் வண்ணம்
மண்டுதொகை திரட்டி அதை
ஏடெழுத வல்லார்பால் நல்கவேண்டும்”
என்று புரட்சிக்கவிஞர் கூறியதற்கேற்ப, நாமும் ஆசிரியரிடம் ஆயிரக்கணக்கான சந்தாவை அளிப்போம் விடுதலையின் எண்ணிக்கையைப் பெருக்குவோம்.
“ஏற்றமுற வைப்பதும் மாற்றமுற
வைப்பதும் ஏடே யாகும்”
புரட்சிக் கவிஞர்.