க.திருநாவுக்கரசு
திராவிட இயக்க ஆய்வாளர்
விடுதலை நாளேட்டிற்கு 90ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. அதன் பணி நூற்றாண்டை நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறது. விடுதலை ஏடு தோற்றுவிக்கப்பட்ட வரலாறே அவசரத் தேவையைக் கருதி உருவானதாகும்.
1934ஆம் ஆண்டு மத்திய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் நீதிக்கட்சித் தோற்றுவிட்டது. நீதிக்கட்சியின் ஏடுகளாக நடந்து வந்த ஜஸ்டிஸ், திராவிடன், ஆந்திரபிரகாசினி போன்றவை நிறுத்தப்பட்டவிட்டன. நீதிக்கட்சி தனது அரசியல் போராட்டத்தில் கையில் ஓர் ஆயுதமுமின்றி நிற்கிறது.
அப்போது பெரியார், ‘நீதிக்கட்சிக்கு என்று ஒரு தமிழ் தினசரி வேண்டும்’ என்கிற கருத்தை முன் வைக்கிறார். அந்தக் கருத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டதே விடுதலை ஏடு- விடுதலை என்ற பெயரைத் தேர்வு செய்தவர் அதன் முதல் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன் அவர்கள் ஆவார்.
விடுதலை ஏடு நீதிக்கட்சியின் சார்பாகத்தான் வெளிவந்தது; தினசரி ஏடாக அல்ல, வாரம் இருமுறை ஏடாக வெளிவந்தது. 27.06.1935 அன்று முதல் இதழ் வெளிவந்தது. இவ்வேட்டினைப் பெரியார் வரவேற்று குடிஅரசு’ ஏட்டில் எழுதினார்.
அப்போது பெரியார், “இதுவரை பார்ப்பனர்களுக்கு விரோதமாக வந்த பத்திரிகைகள் எதுவும் நம் நாட்டில் வாழ்ந்ததில்லை. எவ்வளவு வீரமாக ஆரம்பித்த பத்திரிகைகள் எல்லாம் வருடாந்திரம் ஆவதற்குள் ஒன்று, பார்ப்பனர்களுக்கு அடிமையாக வேண்டியது; அல்லது மறைந்து போக வேண்டியது” என்ற நிலையில் இருந்து வந்த இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
‘விடுதலை’யை நீதிக்கட்சியினரால் நடத்த முடியவில்லை. ஒரு காலத்தில் ‘திராவிடன்’ இதழை நடத்த முடியாமல் எப்படிப் பெரியார் அதனைக் குத்தகைக்கு எடுத்து நடத்தினாரோ அதேபோன்ற நிலை விடுதலைக்கும் வாய்த்தது. பெரியார் விடுதலையைக் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. நீதிக்கட்சியினரே முன்வந்து விடுதலையை நடத்துமாறு பெரியாரைக் கேட்டுக் கொண்டனர். அதன்பிறகு விடுதலை ஈரோட்டிலிருந்து வெளிவந்தது.
நீதிக்கட்சி சுமார் இரண்டு ஆண்டுகள் விடுதலையை நடத்தியது. அவர்கள் நிர்வாகத்தில் இருந்தபோதே டி.ஏ.வி.நாதனுக்குப் பிறகு பண்டிதமுத்துசாமி பிள்ளை ஆசிரியராக மாற்றப்பட்டார். பெரியார்கூட விடுதலையை உடனே பொறுப்பேற்று நடத்த முன்வரவில்லை.
பொப்பிலி அரசர், குமாரராஜா முத்தையா செட்டியார், சர்.ஆர்.கே. சண்முகம், சவுந்திர பாண்டியன் போன்ற தலைவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளக் கேட்டுக் கொண்டனர். அதன் பிறகே அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். 1937ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறுவதற்கு அய்ந்து நாள்களுக்கு முன்புதான் விடுதலை ஏடு பெரியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பிறகு சில அடிப்படை வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. அதாவது விடுதலை ஏட்டை வெளியிடவும் அதன் உரிமையாளராக இருக்கவும் பெரியாரின் தமையனார் ஈ.வே. கிருஷ்ணசாமி கோவை மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பித்தார். அதற்குக் கலெக்டர் சென்னையில் விடுதலையை வெளியிட்டு வந்தபோது அதன் ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் இருந்த டி.ஏ.வி.நாதனையும் ஈ.வெ.கிருஷ்ணசாமியையும் நேரில் வர உத்தரவிட்டு இருந்தார். பின்னர் கலெக்டர் டி.ஏ.வி.நாதனிடம் விடுதலை ஏட்டின் ஆசிரியர் மற்றும் வெளியிடுபவர் உரிமையை அவர் விலகியதாக எழுதி வாங்கிக் கொண்டார். மேலும் ஜூன் 30 தேதிக்குள் விடுதலைக்கு ஆயிரம் ரூபாய் ஜாமீன் தொகை கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார். இவ்விவரங்கள் அனைத்தும் அப்போது கொழும்பில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த பெரியாரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதன் பிறகுதான் விடுதலை பெரியாரின் முழுப் பொறுப்பிலிருந்து வெளிவந்தது.
01.06.1937லிருந்தே பெரியார் பழைய ‘டிக்ளரேஷனில்’ விடுதலையை வெளியிட்டு வந்தார். எனினும் முறையாக அதனைக் கேரள கலெக்டர் முன் 10.06.1937இல்தான் பதிவு செய்தார். ஈரோட்டிலிருந்து விடுதலை நாளேடு வெளிவந்து கொண்டிருந்தபோது அந்த ஏட்டின் விலை காலணா. (அதாவது அப்போதைய ஒன்றரை பைசா) இப்போதைய விடுதலை நாளேட்டின் விலை ரூ.6.00 (அதாவது 600 பைசாக்கள்) 1937 அக்டோபரிலேயே அறிஞர் அண்ணா விடுதலையில் எழுத ஆரம்பித்துவிட்டார். விடுதலையின்அதிகாரபூர்வ ஆசிரியர்களாக 1. டி.ஏ. நாதன், 2. பண்டித எஸ். முத்துசாமிப் பிள்ளை 3. அ. பொன்னம்பலனார் 4. என். கரிதவரதசாமி 5. கே.ஏ. மணி (அன்னை மணியம்மையார் அவர்களின் ஆரம்பக்காலப் பெயர்) 6. ஈ.வெ.ரா. மணியம்மையார் (திருமணத்திற்குப் பிறகு பெயரில் சிறிது மாறுதல்) 7. கி. வீரமணி ஆகியோர் பணியாற்றினர். தற்போது கி. வீரமணி ஆசிரியராகத் தொடருகிறார்.
விடுதலை நாளேட்டின் பொறுப்பாசிரியர்களாக 1. அறிஞர் அண்ணா, 2. சா. குருசாமி 3. சாமி. சிதம்பரனார் 4. கி.வீரமணி ஆகியோர் பணியாற்றினர்.
விடுதலை நாளேடு பெரியாரின் கைக்கு மாறி அவர் பொறுப்பேற்று 01.06.1937 முதல் வெளிவரத் தொடங்கியது. இதே ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி இராஜாஜி சென்னை மாகாணப் பிரதமர் ஆனார். இவர் இந்தியை விருப்பப் பாடமாகத் திணித்தார். இதன் விளைவாக முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1937-40) வெடித்தது. இப்போராட்டத்தை விடுதலை சந்தித்தது. பெரியார் பெல்லாரிச் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை ஏடு தோன்றுகிறபோதே போராட்டக் களத்தில் உருவான கருவியாகவே வெளிப்பட்டது. இது மட்டுமில்லை;
விடுதலை தோன்றிய சில ஆண்டுகளில் இரண்டாம் உலகப் போர் (1934-1945) தொடங்கியது. விடுதலை போர்ப் பிரச்சார ஏடாக ஆயிற்று. பெரியார் ஏன் தமது ஏட்டைப் போர்ப் பிரச்சாரத்திற்காக அரசுக்குத் தந்தார்? –என்கிற வினாவை எழுப்பினால் நமக்குக் கீழ்க்காணும் விடை கிடைக்கும்.
அய்ரோப்பாவை முதலில் ஆளவேண்டும் என்ற ஆசை வளர்ந்து பிறகு உலகையே ஆளவேண்டும் எனக் கொக்கரித்தான் ஹிட்லர். அவனுக்குத் துணையாக ஜப்பானையும் இத்தாலியையும் சேர்த்துக் கொண்டான். ஹிட்லரின் ஆசையே இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாயிற்று. இவர்களை முறியடிக்க பிரிட்டன், அமெரிக்கா, ரஷியா ஆகியவை அணி சேர்ந்தன. ஜெர்மனி ஆதரவு நாடுகளுக்கு அச்சு நாடுகள் என்றும் பிரிட்டன் அணிக்கு நேசநாடுகள் என்றும் பெயர். பிரிட்டன் இந்தியாவை ஆண்டு வந்ததால் இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தியது. இதனைக் காங்கிரஸ் எதிர்த்தது. ஆனால், நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இரண்டாம் உலகப் போருக்கு ஆதரவாக பிரிட்டனுக்குத் துணை நின்றன.
ஜெர்மனி போர்ப் பிரகடனம் செய்து போரை நடத்தி வந்தாலும் அதன் சர்வாதிகாரியான ஹிட்லர் தான் ஆரிய இனத்தின் பிரதிநிதி எனப் பிரகடனப்படுத்திக்கொண்டான். ஜெர்மனியில் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்கினான் ஹிட்லர். ஆரிய இனம் கலப்பின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றான். உலகப்போர் நடந்த வேளையில் ஆரிய ஆட்சி தோன்றிவிடும் என இங்கே உள்ள பார்ப்பனர்கள் ஜெர்மன் மொழியையும் ஜப்பான் மொழியையும் படிக்கத் தொடங்கிவிட்டனர். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வெற்றி அடைந்திருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும்?
ஆகவே, இப்படிப்பட்ட நிலைமைகள் ஏற்படாமல் இருக்க நீதிக்கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் அரசு ‘யுத்த ஆதரவு’ கோரியது. ஆரியப்படையெடுப்பிலிருந்து திராவிட சமுதாயத்தைக் காப்பாற்ற உலகப்போரின் போது பிரிட்டனை ஆதரிப்பதும் நமது கடமை என்று கருதினார் பெரியார். எனவே, நீதிக்கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் விடுதலை ஏட்டையும் போர்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினார்- பெரியார். ஆக, விடுதலை நாளேடு குறிப்பிட்ட காலம் வரை போர்ப் பிரச்சார ஏடாகவும் விளங்கி வந்தது. (12.09.1943 முதல் 30.09.1945 வரை யுத்த பிரச்சாரத்திற்காக விடுதலை ஏடு வழங்கப்பட்டது. பெரியாரின் கைக்கு 06.06.1946 முதல் அரசால் மீண்டும் தரப்படுகிறது. ஆக, இந்தி எதிர்ப்புப் போரைச் சந்தித்து பிறகு உலகப் போரையும் எதிர்கொண்டது விடுதலை நாளேடு!
விடுதலை நாளேடு ‘செய்தி ஏடு’ (News paper)இல்லை. அது கருத்து ஏடு- கொள்கை ஏடு (Views paper). ஆகவே இதர நாளேடுகளிலிருந்து அது மிக வேறுபாடாக அதன் உள்ளடக்கத்தில் திகழ்ந்தது. ஆகவேதான் அது சுயமரியாதை இயக்கத்தின் –திராவிடர் கழகத்தின் –பெரியாரின் கொள்கை கோட்பாடுகளை அச்சிட்டு மக்களிடையே கருத்துப் பரப்பலில் உருவாக்கியது. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிய ஆரிய வர்ண ஜாதி முறைகளைத் தகர்த்தல், கடவுள், மதம், ஆன்மா, மோட்சம், நரகம், முற்பிறவி, தலை எழுத்து முதலிய கற்பனைப் புரட்டுகளை மக்களிடையே அம்பலப்படுத்துதல், இவற்றை நிலைநாட்டுகின்ற வேத, உபநிடத, இதிகாச, சாஸ்திர, புராண நூல்களில் சொல்லப்பட்டுள்ளவற்றை வெளிப்படுத்தி அவை அடிமைகொள்கிற கருவீகள் என மக்களிடம் அறிவிக்கிற பணி, சமதர்மத்தைப் பரப்பல், வகுப்புரிமையைக் காத்தல் என இப்படிக் கருத்துகளைத் தாங்கியே விடுதலை நாளேடு வெளிவந்தது; இப்போதும் வெளிவந்து கொண்டு இருக்கிறது.
அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு (27.06.1948) விடுதலையின் பணியினைப் பற்றி எழுதுகிறபோது,
“இந்நாட்டு ஆட்சி உன்னுடையதாய் இருந்தது. இன்று நீ ஆண்டியாகிக் கிடக்கிறாய். வீரனாய் இருந்த நீ கோழையானாய்- பூனையைக் கண்டு அஞ்சும் பேதையாய்க் கிடக்கிறாய். இப்படி நீ ஆனதன் அடிப்படையை உணரவில்லையே” என்று கூறி விளக்கமும் விழிப்பும் உண்டாக்கி வருகிறது விடுதலை.
கீழ்த்தர ஜாதியும், நான்காம் அய்ந்தாம் ஜாதியுமாய் ஆக்கப்பட்டு விட்டாய். உழைத்தாலும் உழைப்பின் பயனை அடைய முடியாதபடி, செய்யப்பட்டுவிட்டாய். பொருளாதாரத்தில் நசுக்கப்பட்டுவிட்டாய். கல்வியில் 100க்கு 90 பேர் தற்குறிகளாய் இருக்கும் கொடுமையைப் பெற்றுவிட்டாய். அரசியலிலோ, பிற துறைகளிலோ, கேவலம் கீழ்த்தரச் சிப்பந்தியாய்ச் சீர்க்குலைக்கப்பட்டுவிட்டாய்- என்று கூறும் திராவிடப் பெருங்குடி மக்களுக்கு அறிவுத்துறையில் புத்துணர்ச்சியையும் வாழ்க்கை துறையில் வளத்தையும் பெறும்படி விடுதலை பணியாற்றி வருகின்றது” என்று குறிப்பிடுகிறது.
அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு 1937 முதல் 1948 வரை விடுதலை ஏட்டின் பணிகள் எவ்வாறு இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டின- விடுதலை நாளேட்டின் பணிகளைப் பெரியார் காலம், மணியம்மை காலம், வீரமணி காலம் என மூன்று கட்டங்களாக வகைப்படுத்தலாம். இக்கட்டங்களில் நிகழ்ந்த முக்கியப் பணிகளைத் தொகுத்துப் பார்த்தாலே விடுதலையின் போர்க்குணங்கள் பதிவாகி இருப்பதைப் பளிச்செனப் பார்க்கலாம். பெரியார் காலப்பணிகளை விடுதலை ஏடு பதிவு செய்து இருப்பதை மறுக்க முடியாது.
1946க்குப் பிறகு இடம்பெற்ற குத்தூசி கட்டுரைகள்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவதத்தை நீதிமன்றம் இரத்து செய்தபோது முதல் சட்ட திருத்தம் கோரிய மக்கள் போராட்டம்.
1950களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள்.
புத்தர் பிறந்த நாள் விழாச் செய்திகள்
பிள்ளையார் உடைப்புப் போராட்டம்
குலக்கல்வித் திட்டம் எதிர்ப்பு
காமராசர் ஆதரவு (1954-1967)
தட்சிணப்பிரதேச எதிர்ப்பு
இராமன் பட எரிப்புப் போராட்டம்
பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம்
இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்
தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேசப்பட எரிப்பு போராட்டம்
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம்
பெரியார்- அண்ணா சந்திப்பு
அறிஞர்- அண்ணா மறைவு
திராவிடர் கழக வெள்ளிவிழா
கலைஞர் முதல்வரானார்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்.
1971 சேலம் மாநாடும் சட்டமன்றத் தேர்தலும்
பெரியார் மறைவு
மணியம்மையார் காலத்தில் இராவண லீலை
கலைஞர் சிலைத் திறப்பு விழா
சுயமரியாதை இயக்கப் பொன்விழா நிகழ்ச்சிகள்
நெருக்கடி நிலை
அன்னை மணியம்மையார் மறைவு ஆகிய நிகழ்வுகளில் விடுதலையின் பங்களிப்பு மகத்தானது ஆகும்.
இதன் பிறகு கி. வீரமணி காலம் தொடங்குகிறது. 1978க்குப் பிறகு இன்று வரை அவருடைய ’சகாப்தம்’தான் விடுதலையில் நிகழ்ந்து வருகிறது. அவர் தந்தை பெரியார் அவர்களால் விடுதலை ஆசிரியராக நியமிக்கப்பட்டது என்பது இதற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வாகும்.
விடுதலை மாநில, ஒன்றிய அரசுகளின் அலுவலகங்களில் பார்ப்பன ஆதிக்கம் அளவுக்கு மீறி நடைபெற்று வந்தபோது அதைப் பகிரங்கமாக வெளியிட்டு அதைக் கட்டுக்குள் கொண்டு வந்த ஒரே நாளேடாகும். எஸ்.பி.அய்., எல்.அய்.சி. நிறுவனங்களில் அவர்களின் ஆதிக்கம் அடக்கப்பட்டது.
விடுதலையை நான் என்னுடைய மாணவப் பருவத்திலிருந்து படித்து வருகிறேன். எவ்வளவோ செய்திகள், கட்டுரைகள், இயக்க வரலாற்றுக் குறிப்புகள், நிகழ்வுகள் என்று இருக்கின்றன. ஆனால், நான் மறக்க முடியாத எழுத்து என்பது இதுதான்:-
“பிராமணாள் முடித்திருத்தகம், பிராமணாள் சலவை லாண்டிரி, பிராமணாள் மிதியடி ரிப்பேர் ஷாப், பிராமணாள் சிலை வடிக்கும் இடம், பிராமணாள் கொல்லுப் பட்டறை, பிராமணாள் தச்சுப் பட்டறை,
பிராமணாள் விறகுக் கடை, பிராமணாள் கைத்தறி நெசவுச்சாலை, பிராமணாள் வெள்ளிப் பட்டறை, கொத்துவேலை தோத்தாதிரி அய்யங்கார், மண்பாண்டம் வனையும் மகாதேவ சர்மா, செத்த மாநாடு தூக்கும் சிவநேச பட்டர், மரமேறி மகாலிங்க அய்யர், கூலிவேலை குப்புசாமி தீட்சதர், மாடுமேய்க்கும் மாதவராவ், பால் கறக்கும் பஞ்சாபகேச அய்யர், பிணம் சுடும் பார்த்தசாரதி அய்யங்கார், ஏர் உழும் ஏகாம்பர அய்யர், நடவு நடும் நாகலட்சுமி மணி அய்யர், விறகு பிளக்கும் சடகோப அய்யங்கார், கல்தச்சர் கல்யாணராம அய்யர், அச்சுக் கோக்கும் அனந்த கிருஷ்ணாராவ், மோர் விற்கும் மோகனாங்கி- ரங்காராவ், ரிக்ஷா இழுக்கும் ராகவாச்சாரி, தோட்டித் தொழில் துரைசாமி அய்யர், கல்லுடைக்கும் கணபதி அய்யர், நாதசுரம் வாசிக்கும் நாராயண அய்யங்கார்- இந்த நிலை எங்கு வந்துவிடுமோ என்றுதான் பார்ப்பனக் கும்பல் பதறுகிறது. இறங்கு துணிந்து ஈரோட்டுப் பாதையில்!” (விடுதலை 24.12.1957)
இப்படி விடுதலை நாளேட்டைப் போல வேறு எந்த ஏடு எழுயிருக்க முடியும் என்று எண்ணிப் பாருங்கள். எந்த ஏட்டிற்கு இந்தத் துணிவு முதலில் வரும். இன்று 90ஆம் ஆண்டிலும் விடுதலை அதன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. பெரியார் மரணம் அடைந்த போது தினத்தந்தி நிருபர் ஓர் அதிர்ச்சியான வினா ஒன்றை ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார். பெரியார் இறந்துவிட்டார். இனி, திராவிடர் கழகம் இயங்குமா? கலைக்கப்பட்டு விடுமா? தி.மு.க.வுடன் இணைக்கப்படுமா? -என்பதுதான் அது!
அதற்கு ஆசிரியர் சொன்ன பதில்: துக்கமான நேரத்தில் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு இருக்கிறீர்கள். அதற்காகப் பதிலை அளிக்கிறேன். அய்யா அவர்களே, அய்யா அவர்களுக்கென்று தமிழகத்தில் அமைத்துக் கொண்ட அமைப்பு திராவிடர் கழகம். இந்த அமைப்பு அய்யாவுக்குப் பின்பும் அய்யா வழியிலேயே தொடர்ந்து செயல்படும். திராவிடர் கழகம் கலைக்கப்படப் போவதும் இல்லை. எந்தக் கட்சியுடனும் இணையப் போவதும் இல்லை.”
ஆசிரியர் இப்படிப் பேட்டி கொடுத்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. திராவிடர் கழகமும் இருக்கிறது. விடுதலை நாளேடு 90ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. விடுதலையை ஓர் இயக்கமாக வளர்த்தெடுக்கப் பணியாற்றுவோம். அதன் தேவை வர்ணாசிரம ஸனாதன தருமம் இருக்கும் வரையும் தொடரும்.