சென்னை, மே 30- மழை குறைந்து தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால் காற்றாலைகள் உச்சபட்ச மாக 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது.
மாசு இல்லாத மின்சாரம்
தமிழ்நாட்டுக்கான மின்சார தேவை அனல் மின்சார நிலையங்கள். நீர், சூரிய சக்தி (சோலார்), காற்றாலை மற்றும் அணு மின்சார நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.காற்றாலைகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின்சாரம் கிடைக்கிறது. இந்தியாவில் காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
தமிழ்நாட்டில் கோவை, திருப் பூர், கரூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன. மொத்தமாக தமிழ்நாட்டில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இவை சுமார் 8 ஆயிரத்து 923 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்டவையாகும்.
காற்றாலை மின்சாரம்
இதுகுறித்து இந்திய காற்றாலைகள் சங்கதலைவர் கஸ்தூரி ரெங்கையன் கூறும்போது. ‘தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டு தோறும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து மார்ச் 31ஆம் தேதி வரை 12 ஆயிரத்து 500 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இதே அளவு மின்சாரம். உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக வருகிற செப்டம்பர் கடைசி வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தி உச்சத்தில் இருக்கும். அந்தவகையில், கடந்த 1ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதி வரை சராசரியாக 270 மில்லியன் யூனிட் மின்சாரத்தை காற்றாலைகள் நல்ல முறையில் உற்பத்தி செய்தது.
அதற்கு பிறகு 8ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்ததால் காற்றாலைகளில் எதிர்பார்த்த அளவு மின்சார உற்பத்தி நடக்க வில்லை.
தொடர்ந்து 24ஆம் தேதியிலிருந்து தற்போது வரை மின்சார உற்பத்தி நன்றாக இருக்கிறது. மழை சற்று குறைந்து தென்மேற்கு பருவ காற்று வீச தொடங்கி உள்ளதால் காற்றாலைகள் நல்ல முறையில் மின்சார உற்பத்தியை தொடங்கி உள்ளது. சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உற்பத்தி நடந்து வருகிறது. வழக்கமாக மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அந்த மாதங்களில் அதி களவு காற்றாலை மின்சார உற்பத்தியாகும். சில நேரங்களில் தேவைக்கு அதிகமாகவே மின்சார உற்பத்தி நடைபெறும். இந்த ஆண்டு நல்ல உற்பத்தி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
-இவ்வாறு அவர் கூறி னார்.
அனல்மின் நிலையங்களில் உற்பத்தி குறைப்பு
இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரிகள் கூறும்போது, ‘தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கி உள்ளதால் சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் காற்றாலைகள் மூலமும், 4 ஆயிரத்து 200 மெகாவாட் சோலார் மூலமும் மின்சாரம் கிடைத்து வருகிறது. தேவை 20 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருந்து வருகிறது.
காற்றாலை, சோலார் மூலம் போதிய மின்சாரம் கிடைப்பதால் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அனல்மின்சார உற்பத்தி நிலையங்களில் கடந்த வாரம் 3 ஆயிரத்து 800 மெகாவாட் வரை உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அவை 1,200 மெகாவாட்டாக குறைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.