தேர்தல் நேரத்தில் ரூபாய் 4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் பிஜேபி பிரமுகர் நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஅய்டி அழைப்பாணை

2 Min Read

சென்னை, மே 30 தாம்பரத்தில் விரைவு ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்ட 4 பேர் நாளை (31.5.2024) ஆஜராகுமாறு சிபிசிஅய்டி காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படையினர் கடந்த ஏப்ரல் மாதம் தீவிர சோதனை நடத்தி வந்தனர். அந்தவகையில், ஏப்ரல் 6-ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், எழும்பூர் – திருநெல்வேலி நெல்லை விரைவு ரயிலில் சோதனை நடத்திய பறக்கும் படையினர், 3 பேரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.4 கோடியை கைப்பற்றினர். திருநெல்வேலி தொகுதி பாஜகவேட்பாளரான எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக இத்தொகை கொண்டு செல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதை நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்தார்.

இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஅய்டிக்கு மாற்றப்பட்டது. அப்பிரிவு காவல்துறையினர் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். முதல்கட்டமாக, ரயிலில் பணத்துடன் பிடிபட்ட சதீஷ், அவரது சகோதரர் நவீன், சிறீவைகுண்டம் ஓட்டுநர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பி, சிபிசிஅய்டி காவலர்கள் விசாரணை நடத்தினர்.
பணம் கைமாறியதாக கூறப்படும் தமிழ்நாடு பாஜக வர்த்தக பிரிவு தலைவர் கோவர்த்தனுக்கு சொந்தமான சென்னை பசுமைவழி சாலையில் உள்ள உணவகம், நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கோவையில் வசிக்கும் தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஅய்டி காவல்துறை கடந்த வாரம் விசாரணை நடத்தினர்.

இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில், அடுத்த கட்டமாக நயினார் நாகேந்திரன், அவரது உதவியாளர் மணிகண்டன், தமிழ்நாடு பாஜக அமைப்பு செயலாளர் கேசவவிநாயகன், வர்த்தக பிரிவு தலைவர் கோவர்த்தன் ஆகிய 4 பேரும் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஅய்டி தலைமை அலுவலகத்தில் மே
31-ஆம் தேதி (நாளை) ஆஜராகுமாறு சிபிசிஅய்டி சார்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிபிசிஅய்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *