1964 மே 27ஆம் நாள் வழக்கமானதாக விடியவில்லை. மருத்துவர்களின் தொடர் அறிவுறுத்தல் களால் நான்கு நாட்கள் டேராடூனில் ஓய்வெடுத்து வந்த பின்னும்கூட அவரது உடல்நிலை சரிவர ஒத்துழைக்க வில்லை. வழக்கமாக அதிகாலை 6 மணிக்கு விழித்துவிடும் அவர் சற்று கூடுதல் முதுகுவலி ஏற்பட்டதாக கூறி அறைக்குள்ளேயே இருந்தார்.
கொஞ்சநேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார். மகளும், மருத்துவர்களும் அவரை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். சுயநினைவு திரும்பவில்லை. நாடு முழுவதும் செய்தி கசிந்துகொண்டிருந்தது. 40 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்தி யாவின் முதல் பிரதமரும், தொடர்ந்து 16ஆண்டுகள் பிரதமராக இருந்தவருமான இந்திய மக்களின் மாபெரும் தலைவருமான ஜவகர்லால் நேரு மரணத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்தார். சரியாக மதியம் 1.44மமணிக்கு அவரின் மரணம் உறுதி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் துயரத்தால் இருள் சூழத்தொடங்கியது.
நேருவுக்கும் குறி!
காந்தியாருக்குப் பின் இந்திய மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட ஒரு தலைவரின் மரணச் செய்தி அது. ஆனால், காந்தியாரின் மரணம் போன்ற அகால மரணமாக இல்லாமல், இயற்கை மரணமாக அது அமைந்தது சற்று ஆறுதலான ஒன்றாகும். காரணம் காந்தியார், இந்திரா, ராஜீவ் மரணம்போல் நேருவின் மரணமும்கூட படுகொலையாக அமைய பல வாய்ப்புகள் இருந்தன என்று அவரின் வரலாற்றை ஆய்வு செய்தவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நேருமீது பல முறை கொலை முயற்சிகள் நடை பெற்றுள்ளன. ஆனால் அவை அத்தனைக்குப் பின்னாலும் இருந்தது இரண்டே இரண்டு காரணங்கள் மட்டும்தான். ஒன்று, ஹிந்துத்துவ மதத் தீவிரவாதிகளை ஒடுக்க அவர் மேற்கொண்டிருந்த கடும் நடவடிக்கைகள். மற்றொன்று மூன்றாம் மற்றும் வளரும் உலக நாடுகளை அணிசேரா கொள்கைகளின் மூலம் ஒருங்கிணைக்க அவர் எடுத்த முயற்சிகள். முதல் காரணத்திற்கு ஹிந்துத் துவ தீவிரவாதிகளும், இரண்டாவது காரணத்திற்கு (சிஅய்ஏ) போன்ற வெளிநாட்டு சக்திகளும் செய லாற்றிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. சிஅய்ஏ போன்ற சக்திகள் தங்கள் தேவைகளுக்கு உள்ளூரில் உள்ள மதவாதிகளையும் பயன்படுத்தியிருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.
படேலின் பகிரங்கக் குற்றச்சாட்டு
1950 ஆகஸ்ட் 2 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய அன்றைய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல், “காந்தியாரின் கொலைக்குக் காரணமான அந்தக் குழுவின் அடுத்த இலக்காக பண்டிட் நேரு இருக்கிறார்” என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறார். இந்தக் கொலை முயற்சிகள் 1948இல் காந்தியாரின் படு கொலையை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட காலத்திலிருந்தே தொடங்கிவிட்டதாக தெரிகிறது. 1948இல் ஜூலை மாதத்தில் டில்லி நோக்கி ஆயுதங்களுடன் சென்று கொண்டிருந்த மூன்று கும்பல்களை பீகாரில் கைது செய்த காவல்துறை, அதன் பின்பு நடத்திய விசாரணையின் மூலம் இந்தக் கொலை முயற்சியை உறுதி செய்துள்ளது.
பாக். பிரதமரின் அச்சம்
இந்தியாவிற்கு அப்போது பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானிடமும் படேல், “முஸ்லிம்கள்மீது நேரு கரிசனம் காட்டுவதாக கூறி, அவர்மீது படுகொலை நிகழ்த்த அந்தக் கும்பல் தயாராக இருக்கிறது” என்ற தனது அச்சத்தை வெளிப் படுத்தியுள்ளார். இதன் விளைவாக தனக்கு தூக்கமே இல்லை என்கிற கவலையையும் சேர்த்து பகிர்ந்து கொண்டிருக்கிறார். படேல் அவர்களின் மரணத்திற்குப் பின்னும் கொலை முயற்சிகள் தொடரவே செய்கிறது.
1953இல் நேரு அவர்கள் மும்பைக்கு சென்று கொண்டிருந்த அமிர்தசரஸ் எக்ஸ்பிரசின் இரயில் தண்டவாளத்தில் குண்டு வைக்கும் முயற்சி நடந் துள்ளது. அதையும் காவல்துறை முறியடித்துள்ளது. அதேபோல் 1955இல் நாக்பூரில் ஒருவன் கத்தியோடு நேரு அவர்கள் மீது பாய்ந்த கொடூர நடவடிக்கையும் நடந்துள்ளது. இவ்வாறு நடைபெற்ற கொலை முயற்சி களில் இங்கிருந்த மதவாத சக்திகளுக்கும், வெளிநாட்டு சக்திகளுக்கும் நேரடித் தொடர்பு இருக்குமோ என்கிற அய்யம் ஏற்படுகிறது. நேரு பிரதமர் பதவியை ஏற்கிற போது இந்தியாவின் பொருளாதார நிலை அதல பாதாளத்தில் இருந்தது. 18ஆம் நூற்றாண்டில் மொத்த உலகப் பொருளாதாரத்தில் 30% பங்கு வகித்த இந்தியா, விடுதலையின் போது வெறும் 3% மட்டுமே பங்கு வகித்தது. பசி, பஞ்சம், பட்டினி இவற்றோடு தேசப் பிரிவினை, அதனைத் தொடர்ந்து கலவரம், பாகிஸ்தான் உருவாக்கம், காந்தியார் படுகொலை, கல்வியறிவின்மை, வேலை வாய்ப்பின்மை, அரசியலமைப்பு உருவாக்கம், பெண்கள் மீதான பழைமைவாத தாக்குதல்கள், பல்வேறு மொழி இன மக்கள் பிரச்சினைகள், நீர்ப் பாசனம் இல்லாமை, தொழில் வாய்ப்புகள் இல்லாமை, தீவிரவாதமாக உருவாகியிருந்த பெரும்பான்மை மத வாதம் என்று பல சிக்கல்கள் சூழ்ந்திருந்தபோதுதான் நேரு பிரதமராக பதவியேற்றார். இவ்வளவு பிரச் சினைகளையும் சமாளிப்பாரா என்று உலகமே உற்று பார்த்துக்கொண்டிருந்தது. நேரு என்ன அரசியல் சார்பு நிலை எடுப்பார் என்று உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்தது.
நேருவைக் கைவிட்ட அமெரிக்கா
விடுதலை பெற்றவுடன் முதலில் நேரு சோவியத் ஒன்றியத்திற்கு செல்லவில்லை. அமெரிக்காவிற்கு சென்றார். காரணம், இரண்டாம் உலகப்போர் நிறைவுற்ற சூழலில் பலம் பொருந்திய பொருளாதார நாடாக வளர்ந்திருந்த அமெரிக்கா, நேச நாடுகள் அணியில் இருந்தது. அதோடு ஜனநாயக நாடு என்கிற வகையில் பொருளாதார ரீதியிலான உதவிகளை புதிய இந்தியா விற்கு செய்யும் என்று அவர் நம்பினார். அதே போல் 1949 அக்டோபரில் அமெரிக்கா சென்ற நேருவை விமான நிலையம் சென்று நேரில் வரவேற்றார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி எஸ்.ட்ரூமன்.
வரவேற்புகள், கவனிப்புகள் என்று மூன்று வாரம், தடபுடலாக இருந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூட உரையாற்றச் சொன்னார்கள். ஆனால் எந்த பொருளாதார உதவியும் செய்ய மறுத்துவிட்டார்கள். காரணம், இந்தியாவிடம் அமெரிக்க சார்பை எதிர் பார்த்தார் ட்ரூமன். ஆனால், நேரு தனது ‘அணிசேரா கொள்கை’யில் உறுதி காட்டினார். தீவிர உணவுப் பற்றாக் குறையோடு வந்த இந்தியாவை நிராகரித்ததோடு, “நேருவை சமாளிப்பது கடினம்” என்று கமண்ட் அடித்தது அமெரிக்கா.
அரவணைத்த சோவியத்
மற்றொரு புறம் சோவியத் ஒன்றியத்துடன் நேருவிற்கு நெருக்கம் அதிகமாக இருந்தது. 1927இல் நடைபெற்ற சோவியத் புரட்சியின் 10ஆம் ஆண்டு விழாவிற்கு நேரு அவரது தந்தையோடு ரஷ்யாவிற்கு சென்று கலந்துகொண்டார். பிரதமரான பின்பு அந்த பந்தம் இன்னும் நெருக்கமானது. 1953இல் உருவாக்கப் பட்ட இந்திய – சோவியத் நட்புறவுக் கழகம் கூட நேருவின் தனி மருத்துவர் ஏ.வி.பாலாகாவால் தொடங் கப்பட்டது.
அதன் பின் உருவான நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தொடங்கி, பிலாய் இரும்புத் தொழிற்சாலை, பக்ராநங்கல் அணை என்று பல்வேறு தொழில் மற்றும் விவசாய வளர்ச்சிக்கு சோவியத்தோடு இந்தியா நெருக்கமானது அமெரிக்காவை மேலும் எரிச்சலூட்டியது.
பாண்டூங் உச்சி மாநாடு
அதோடு 1955இல் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டூங் நகரில் ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளின் உச்சி மாநாடு ஒன்றை நடத்திட முக்கியக் காரணமானவராக நேரு இருந்தார்.
காலனி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற ஆசிய -ஆப்பிரிக்க நாடுகளை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி அந்த நேரத்தில் மிக முக்கிய உலக அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது. இந்த மாநாட்டின் மூலம் 150 கோடி மக்கள் தொகை கொண்ட நாடுகள் ஒரு குடை யின் கீழ் கூடின. மொத்த உலக மக்கள் தொகையில் 54 சதவீதத்தை பிரதிநிதித்து வம் செய்யும் 30க்கும் மேற்பட்ட நாடுகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டது மேற்குலகை – குறிப்பாக அமெரிக்காவை எரிச்ச லூட்டியது. கம்யூனிஸ்டுகளோடு இணைந்து இந்தோ னேசியாவில் ஆட்சி நடத்திவந்த சுகர்னோவுக்கு பல உதவிகளை இந்த மாநாட்டை ஒட்டி நேரு செய்து வந்தார்.
நேருவின் மரணத்தை ஒட்டி உலகத்தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்திகளில்கூட இந்தோனேசி யாவின் சுகர்னோவின் இரங்கல் செய்திதான் தனிப் பட்ட முறையில் நெருக்கமான ஒன்றாக இருந்தது. “எனது அன்பு நண்பர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மறைவுக்கு” என்று தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்தார். இந்த மாநாட்டின் தொடர்ச்சியாக அணி சேரா நாடுகளை உருவாக்குவதில் நேரு தீவிரம் காட்டினார். நேருவின் இந்த நகர்வால், முதலில் உதவ மறுத்த அமெரிக்கா, பின்பு இரண்டு மில்லியன் டன் உணவு தானியங்களை வழங்கியது. அப்போதும் தொழில் வளர்ச்சிக்கு எந்த உதவிகளையும் செய்ய வில்லை.
சிஅய்ஏ சூழ்ச்சி
இவ்வாறான உலக சூழலில்தான், நேருவை விமான விபத்து ஒன்றின் மூலம் கொலை செய்ய அமெரிக்க உளவு நிறுவனமான சிஅய்ஏ முயற்சித்ததாக உறுதிப் படுத்தப்படாத தகவல் ஒன்றும் உலவுகிறது. இது மிகைப்படுத்தப்பட்ட அய்யம் போல் தோன்றினாலும், பாண்டூங் மாநாட்டிற்குப் பின் நடைபெற்ற உலக நிகழ்வுகள் ஒவ்வொன்றும் சந்தேகத்தை தீவிரமாக்கு கின்றன. அந்த மாநாட்டிற்கு முன்கை எடுத்தவர்களில் ஒருவரான இலங்கை அதிபர் பண்டாரநாயக்க 1959இல் படுகொலை செய்யப்படுகிறார். இந்தியாவின் அணு சக்தி விஞ்ஞானியும், நேருவின் நெருங்கிய நண்பரு மாகிய ஹோமிபாபா சந்தேகத்திற்கிடமான முறையில் விமான விபத்தில் மரணத்தைத் தழுவுகிறார். கம்யூ னிஸ்டுகளுக்கு ஆதரவாக இருந்த இந்தோனேசியாவின் சுகர்னோ அரசு பதவி விலகியதோடு, 10லட்சம் கம்யூனிஸ்டுகள் அங்கே படுகொலை செய்யப்பட்டு, அமெரிக்க சார்பு இராணுவ அதிகாரி சுகர்த்தோ பதவிக்கு வருகிறார்.
1980களில் சிலி தொடங்கி பல்வேறு நாடுகளில் அமெரிக்கா நிகழ்த்திய பல்வேறு அரசியல் படுகொலை களை “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்” என்ற நூலில் மேனாள் சிஅய்ஏ உளவாளியான ஜான் பெர்கின்ஸ் பதிவு செய்துள்ளார்.
வரலாற்று நோக்கில் இந்நூலை படிப்பவர்களுக்கு நேருவின் மீது மேற்கொள்ளப்பட்ட எல்லா கொலை முயற்சிகளிலும் நேரடியாகவோ மறைமுக மாகவோ இந்த அமைப்புகளுக்கு தொடர்பு இருக்க வாய்ப் பிருக்கும் என்று சந்தேகப்பட வாய்ப்பிருக்கிறது.
நன்றி: ‘தீக்கதிர்’, 27.5.2024