இதுதானா பெண்களுக்குத் தரும் மரியாதை மோடி?
ஒரு சண்டையில், ஓர் ஆணைப் பார்த்து, ‘புடவை கட்டிக்கோ…’, ‘பொட்டு வெச்சுக்கோ…’ என்று சொல்லிவிட்டால், அவர் ஆண்மையை காலிசெய்து, அவரை பெண்ணுடன் ஒப்பிட்டுச் ’சிறுமைப்படுத்தி விட்ட’ களிப்பைக் கொண்டாடும் சமுதாயம் இது. சாமானியர்கள் இதைச் செய்தாலே திருத்த வேண்டிய சூழலில், இந்திய நாட்டின் பிரதமர் மோடி, ’பாகிஸ்தான் கைகளில் வளையல் அணிவிப்போம்’ என்று சமீபத்தில் பேசியிருப்பது, நம் நாட்டில் நாம் பெண்களை ‘மதிக்கும்’ லட்சணத்தை உலக நாடுகளுக்குக் காட்டியிருக்கிறது.
சென்ற மாதம், மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு பேரணியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ’இந்தியாவின் நடைபெறும் வளர்ச்சிகளைக் கண்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (றிஷீரி – றிணீளீவீstணீஸீ-ஷீநீநீuஜீவீமீபீ ரிணீsலீனீவீக்ஷீ) மக்கள், தாங்களா கவே இந்தியாவுடன் தங்களை இணைக்கக் கோரு வார்கள்’ என்று பேசினார்.
ராஜ்நாத் சிங்க்கு பதிலளிக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ‘பாதுகாப்பு அமைச்சர் அவ்வாறு கூறினால், அப்படியே செய்யட்டும். நாங்கள் யார் அதை நிறுத்த? ஆனால், நினைவில் கொள்ளுங்கள்… பாகிஸ்தான் வளையல் அணிந்திருக்கவில்லை. அவர்கள் கையில் அணுகுண்டுகள் உள்ளன. கெட்ட வாய்ப்பாக அவை நம் மீது வீசப்படும்’ என்று பேசினார்.
எப்போதுமே, ‘சென்சிட்டிவ்’ பிரச்சினையாக இருக்கும் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச் சினையை, இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் பொறுப்பற்ற வார்த்தைகளில் பேச, அதிலும் ஃபரூக் அப்துல்லா, அதில் ஆணாதிக்கத்தையும் சேர்த்துப் பேசி மேலும் அதிர்ச்சி தந்தார். நாட்டின் பிரதமர் மோடியோ, தேர்தல் ஆதாயத்துக்காக அதற்கும் மேலே ஒரு படி சென்று, இந்தியாவின் மரியா தையையே கீழிறக்கியுள்ளார்.
பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி, ஃபரூக் அப்துல்லாவின் பெயரைக் குறிப்பிடாமல், அவருக்கு பதிலடி தருவதாக நினைத்துப் பேசிய வார்த்தைகள், அவர் மனதில் இருக்கும் ஆணாதிக்கத்தையும், பெண் வெறுப்பையும் வெளிப்படுத்தியிருக்கின்றன. ’பாகிஸ் தான் வளையல் அணியவில்லை என்றால், நாங்கள் அணிய வைப்போம். அவர்களிடம் உணவு இல்லை, மின்சாரம் இல்லை. இப்போது, அவர்களிடம் வளை யல்கூட இல்லை என்பது எனக்குத் தெரிய வந்திருக்கிறது’ என்று, அரசியல் கட்சியின் மூன்றாம் தர பேச்சாளர் போல பேசியிருக்கிறார் பிரதமர்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா, மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா, பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ திட்டம்… இவையெல்லாம் ஒன்றிய அரசு செயல்படுத்தி வரும் பெண்கள் நலத் திட்டங்கள். செல்லும் இடங்களில் எல்லாம் ‘நாரி சக்தி (பெண் சக்தி)’ பற்றி பேசும் பிரதமர் மோடி, தனது மாதாந்தர வானொலி ஒலிபரப்பான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், இரண்டு மாதங்களுக்கு முன் பன்னாட்டு மகளிர் தினத்துக்கு வாழ்த்துச் சொன்னபோதுகூட, ’நாட்டில் பெண்களின் சக்தி ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது’ என்றார். அதே வாய்தான் இப்போது, பாகிஸ்தானுக்கு ‘வளையல் மாட்டிவிடுவோம்’ என்று ’வீரம்’ பேசியிருக்கிறது.
தேசிய மகளிர் ஆணையம்
அண்டை நாட்டை பெண்ணாகச் ’சிறுமைப் படுத்தி’, அவர்களுக்கு வளையல் அணிவித்து, வீரத்தால் அடக்குவதாகச் சொல்லும் இந்த வார்த் தைகள், நாட்டின் பிரதமரிடமிருந்து வெளிப்பட்டி ருப்பது, கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ஆனால், அதற்கான எதிர்க்குரல் எதிர்க்கட்சிகள், நீதி அமைப்புகள், ஆளுமைகள் என்று எந்தத் தரப்பிலும் இருந்து பலமாக எழாமல் இருப்பது, அதைவிட கண் டிக்கத்தக்கது. இதுபோன்ற, அரசு சார்ந்த பெண் களுக்கு எதிரான முக்கிய சர்ச்சைகள், பிரச்சினை களின் போதெல்லாம் காணாமல் போய்விடும் தேசிய மகளிர் ஆணையத்துக்கு, ’காணவில்லை’ சுவரொட்டி ஒட்ட வேண்டியிருப்பது அவலம்.
ஃபரூக் அப்துல்லா, மோடி மட்டுமல்ல… பெண் வெறுப்பின் இதுபோன்ற வெளிப்பாடுகளை, அரசியல் களங்களில் காலங்காலமாக நாம் பார்த்துத்தான் வருகிறோம்.
2013-இல் நடந்த தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வளையல் வாங்கி அனுப்ப விரும்புவதாக, பி.ஜே.பியின் பெண் தலை வர்களில் ஒருவரான ஸ்மிருதி இரானி விமர்சித்தார். ஒரு பெண்ணே இப்படி ஒரு விசித்திர விமர்சனத்தை தெரிவித்தது, ’பெண்கள் கீழான வார்கள்’ என்ற எண்னம் எப்படி பெண்களின் மனதிலும் ஆழ ஊன் றப்பட்டுள்ளது என்பதற்கு உதாரணம். அவர்தான், இப்போது ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் என்பது, அந்த அமைச்சகம் எந்தளவுக்கு பெண்களின் மாண்பு சார்ந்து யோசிக்கும் என்று, நம்மை யோசிக்க வைக்கிறது.
ஸ்மிருதி இரானி
2017-ஆம் ஆண்டு, சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் 25 பேர் மரணம் அடைய, அதற்கு, அன்றைய பிரதமர் மோடி எந்தக் கருத்தும் தெரி விக்காமல் இருந்ததால், மேனாள் விளையாட்டு வீரர் அஜீத் வர்மா என்பவர், அன்றைய ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு ஆயிரம் ரூபாய்க்கு காசோ லையை அனுப்பி, பிரதமர் மோடிக்கு வளையல் வாங்கிக் கொடுக்கச் சொல்லி ஒரு கடிதத்தை அனுப்பினார்.
அரசு எவ்வழி, குடிமக்கள் அவ்வழி போல, அந்த விளையாட்டு வீரருக்கு, தன் நாட்டின் பிரதமரை அவமானப்படுத்த, விமர்சிக்க, தண்டிக்க, அவருக்கு வளையல் அனுப்புவதுதான் வழியாகத் தெரிந் திருக்கிறது. அதே 2017-ஆம் ஆண்டு, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய ராணுவத்தினரை கொன்று, உடல்களைச் சிதைத்த கொடூர சம்பவத்தில், நிகழ்த்த எத்தனையோ விவாதங்கள் இருந்தபோது, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேட்ட கேள்வியோ, வேற லெவல். ‘பிரதமர் மோடிக்கு ஸ்மிருதி இரானி தற்போது வளையல் வாங்கிக் கொடுப்பாரா?’ எனக் கேட்டு, தங்களுக்கு நேர்ந்த ‘அவமானத்துக்கு’ பழிதீர்த்துக்கொண்டதாக நிம்மதியடைந்தார்.
பெண் வெறுப்பு
மேலும், அப்போது உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி ஒருவர், பிரதமர் மோடியின் செயலற்ற தனத்துக்கு தன் எதிர்ப்பை பதிவு செய்வதாக, அவருக்கு 56 இன்ச் பிரேஸியரை அனுப்பி ‘போராடினார்’. அதை தொடர்ந்து, பிரதமர் மோடியை சோஷியல் மீடியாவில் கேலி செய்ய ’வலிமையான ஆயுதமாக’ அந்த பிரேஸியர் அமைந்தது. அந்தப் பெண்ணும், சோஷியல் மீடியாவாசிகளும், பிரதமரை உச்சபட்ச அவமானத்துக்கு உள்ளாக்கக்கூடியது, அவரை பெண்மையுடன் தொடர்புபடுத்துவது என்று ஆழமாக நம்பினார்கள், அதை நடத்திக்காட்டினார்கள்.
இன்றும்… ஒரு தரப்பை, அமைப்பை, கட்சியை, நிர்வாகத்தை இழிவுபடுத்த, அவர்களுக்குப் புடவை அனுப்புவது, பொட்டு அனுப்புவது, வளையல் அனுப் புவது, நாப்கின் அனுப்புவது வரை விதவிதமான கோமாளித்தனங்களைப் பார்த்துள்ளோம். ‘நாப்கின் அனுப்பும் நூதனப் போராட்டம்…’ உள்ளிட்ட செய்தித் தலைப்புகள் நினைவுக்கு வருகின்றனதானே..?
இப்படி… ஆணாதிக்கம், பெண் வெறுப்பு… இவை இரண்டும் நம் நாட்டின் எல்லா மூலை முடுக்குகளிலும் இணைந்து செயலாற்றும், நீக்கமற நிறைந்திருக்கும் சித்தாந்தங்கள். இந்தப் பாலினச் சிறுமை குறித்த சகிப்புத்தன்மை, நம் சமூகத்தில் மிக மிக அதிகம். அதுபோன்ற சிறுமைப்படுத்துதலுக்கான எதிர்க் குரல்கள், சில மட்டுமே எழுந்து, பின்னர் அதுவும் மடிந்துவிடும் வழமையுடையது. அதிகாரத்துக்கு முன், எந்த மதிப்பும் அற்றது பெண்களுக்கு உரிய மரியாதை. அது சீண்டப்பட்டாலும், சிதைக்கப்பட்டாலும்… அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்று இங்கு எதுவும் இல்லை. அதனால்தான், இந்த செயற்கை நுண்ணறிவு யுகத்திலும், ’பாகிஸ்தானுக்கு வளையல் அணிவிப்போம்’ என்று கூறி ’வீர உரை’ ஆற்றுகிறார் பிரதமர்.
அதிகாரத்துக்கு, இங்கு ஆண் முகமே கொடுக் கப்பட்டுள்ளது. போர், வெற்றி போன்ற பேச்சுகள் எல்லாம், ஆண்மை கோட்டிங் கொடுத்தே பேசப்படு கின்றன. இன்னொரு பக்கம், பெண்மை பலவீன மானது, மலினமானது என்பது புகட்டப்பட்டு, அதற்கேற்பவே நடக்க, வாழ அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்மை – பெண்மை வரையறைகளுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றாலும், அவற்றின் சமுதாய மற்றும் அரசியல் அடித்தளம் மிக மிக உறுதியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளதால், அதை எதிர்ப்பதும் தகர்ப்பதும் மிக மிகக் கடினமானதாக இருக்கிறது.
பாலின சமத்துவம்
இந்த வளையல் சர்ச்சையில், ஆணாதிக்கம், பெண் வெறுப்பு, பாலின அடக்குமுறையை எதிர்ப் பதில், சமூகத்தின் கூட்டு மனசாட்சி எந்தளவுக்கு சுழியமாக இருக்கிறது என்பது வெளிப்பட்டிருக்கிறது.
நீங்கள் மாற்றி மாற்றி, வளையலும் புடவையும் அனுப்பி எதிர்த்தரப்பை இகழ்ந்துகொள்ளுங்கள். இத்துணை கீழ்மைப்படுத்தலின் ஊடேதான் நாங்கள் மேலேறி வருகிறோம் என்ற நிதர்சனத்தை மீண்டும் ஒருமுறை உணர்ந்தபடி, எங்கள் வேகத்தை நாங்கள் அதிகரித்துக்கொள்கிறோம். ஒருநாள்… படிகளைச் சமப்படுத்துவோம்.
நன்றி: ‘அவள் விகடன் இணையம்’, [15.5.2024]