உதயநிதி ஸ்டாலின் கூறியதில் குற்றமென்ன?

3 Min Read

அரசியல்

“ஸனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான மானமிகு மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  கூறி விட்டாராம்!

அதை வைத்துக் கொண்டு சமூகவலை தளங்களில், குறிப்பாக வடமாநிலங்களில் ஹிந்துக்களைக் கொல் லுவோம் என்று அவர் கூறியதாகத் திட்டமிட்ட வகையில் பொய் பிரச்சார மூட்டைகளைக் கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். சாமியார் ஒருவர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என்று அறிவித்துள்ளார்.

தவமிருந்தான் சூத்திரன் சம்பூகன் என்று கூறி, வாளால் அவன் தலையை வெட்டி வீழ்த்திய ராமன் பெயரால் ராஜ்ஜியம் அமைப்போம் என்பதும், அயோத்தியில் 450 ஆண்டு கால சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை அடித்து நொறுக்கி விட்டு, அந்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவது என்பதும் தானே ஸனாதனம்! அதனை அழிப்போம் என்பது மானமும், அறிவும், மாண்பும் மனிதநேயமும் கொண்டவர்களின் செயலாகத்தானே இருக்க முடியும். அந்த வகையில் கருத்துகளை எடுத்துக் கூறியதைத் திசை திருப்புவதுதான் ஹிந்துத்துவ ஸனாதனப் புத்தி!

பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசுவதை மனிதத் தன்மையும், பகுத்தறிவும் உள்ளவர்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

பார்ப்பனீயம் எந்தத் தில்லுமுல்லுகளையும் புரட்டுகளையும் செய்யும் புத்தி கொண்டது என்பதற்கு அடையாளம் தான் – மானமிகு மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உரையைத் திரித்துப் பிரச்சாரம் செய்யும் யோக்கியமற்ற செயலாகும்.

1971ஆம் ஆண்டில் சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் – பெண்களைப் பற்றிய முற்போக்குத் தீர்மானத்தை – தலை கீழாகப் புரட்டிப் பிரச்சாரம் செய்த கூட்டம்தானே இது. கடைசியாக மூக்கறுபட்டது தானே மிச்சம்.

1971 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தப் பார்ப்பனீயத்துக்குச் சரியான பாடம் கற்பித்தவர்கள் தான் தமிழ்நாடு மக்கள் என்பது நினைவிருக்கட்டும்.

வடக்கே திராவிட இயக்கக் கருத்தியல் பிரச்சாரம் சரிவர இல்லாத காரணத்தால் – உருட்டல் புரட்டல் செய்து தேர்தலில் கரை சேரலாம் என்று நினைக்கிறார்கள் போலும்.

பொருளாதார நிலையில் பொசுங்கிப் போய்க் கிடக்கும் மோடி தலைமையிலான பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற புயற் காற்று  நாடு முழுவதும் சுழன்று வீசிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் மோடி ஆட்சி எனும் பாய் மரக்கப்பல் கரை சேராது என்பது சர்வ நிச்சயமாகும்.

நேற்று ஒரு செய்தி வெளி வந்துள்ளது; பி.ஜே.பி. ஆளும் உத்தரப்பிரதேசத்திலிருந்து வெளி வந்துள்ளது அது. 

அய்யோ ஸனாதன தருமத்தை உதயநிதி ஸ்டாலின் கொச்சைப்படுத்தி விட்டார் என்று கூறும் சங்கிகளுக்கு ஸனாதனக் கொடூரம் குறித்து இதோ ஒரு எடுத்துக்காட்டு:

உத்தரப்பிரதேசம் லக்னோவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில் சேர்வதற்கு வந்தார். அவரது பெயரைப் பதிவு செய்யும்போதே வயிற்றுவலி காரணமாக அங்கே இருந்த படுக்கையில் படுத்து விட்டார். இதைக் கண்ட மருத்துவரும் அந்த படுக்கையில் ஏற்கெனவே இருந்த ஒரு உயர்ஜாதிப் பெண்மணியின் குடும்பத்தாரும் சேர்ந்து அந்தப் பெண்ணை கீழே தள்ளி விட்டனர். தள்ளிவிட்ட நிலையிலேயே குழந்தை வெளியே வந்து விட்டது. யாருமே உதவிக்கும் வரவில்லை என்பது எத்தகைய கொடூரம்!

மருத்துவமனை ஏற்காத நிலையில், மருத்துவமனை வாசலிலேயே பிரசவித்தார் அந்தப் பெண்! தலைநகர் லக்னோவிலேயே இந்தக் கொடூரம் என்றால் மாநிலத்தின் இதர பகுதிகளில் எவ்வளவுக் கொடுமை தலை விரித்தாடும் என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறதே!

குறைந்த பட்ச மனிதாபிமானம்கூட இல்லாமல் ஜாதி பார்த்து சிகிச்சை அளிக்க வைத்ததுதான் இந்த ஸனாதனம் – இதை உதயநிதி ஸ்டாலின் ஒழிக்க வேண்டும் என்று கூறியதால்  குடி மூழ்கி விட்டதாம். மனிதாபிமானமற்ற இந்த கூட்டத்தின்   ஆயுதம்தான் ஸனாதனம் என்பது.

வரும் மக்களவைத் தேர்தலில் இந்த மதவெறி ஸனாதனத் திற்குப் பாடம் கற்பிக்காவிட்டால் நாடு நாடாக இருக்காது – எச்சரிக்கை!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *